பூஞ்சேரி கல்வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பூஞ்சேரி கல்வெட்டு தமிழ் நாட்டின், காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், பூஞ்சேரி கிராமத்தில் உள்ள 'நொண்டி வீரப்பன் தொட்டி' என்று அழைக்கப்படும் பாறைகளின் மீது பொறிக்கப்பட்டுள்ளது.[1]

அமைவிடம்[தொகு]

பூஞ்சேரி கிராமம் சென்னை - திருக்கழுக்குன்றம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. பூஞ்சேரி கிராமம் மகாபலிபுரத்திலிருந்து 2.9 கிமீ தொலைவிலும், திருக்கழுக்குன்றத்திலிருந்து 17 கிமீ தொலைவிலும், செங்கல்பட்டிலிருந்து 31 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து 57 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வூரில் உள்ள அரசு பள்ளி மற்றும் தனியார் பொறியியற் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் கற் குவியல்கள் காணப்படுகின்றன. இந்தக் குவியலில் தொட்டி போன்ற அமைப்பு உள்ளது. உள்ளூர் மக்கள் இதனை 'நொண்டி வீரப்பன் தொட்டி' என்று அழைக்கிறார்கள்.[1]

இங்குள்ள பாறைகளில் மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச்சின்னங்களைச் செதுக்கிய பழங்கால சிற்பிகள் மற்றும் கட்டிடக் கலைஞர்களின் பெயர்கள் கிரந்த எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளன.[2]

கல்வெட்டு குறிப்பு[தொகு]

பின்வரும் ஏழு துண்டுக் குறிப்புகள் (labels), இங்கு குவியலாக அமைந்துள்ள பாறைகளின் மீது தொன்மையான தமிழ் மற்றும் கிரந்த எழுத்துக்களில் (கல்வெட்டுகளாகப்) பொறிக்கப்பட்டுள்ளன, இவற்றுள் ஒரு பாறையில் காணப்படும் இயற்கையான குழியின் காரணமாக, உள்ளூர் மக்கள் இதனை 'நொண்டி விரப்பன் குதிரைத்தொட்டி' என்று அழைக்கிறார்கள். இவ்விடத்தில் காணப்படும் கே (வா)த பெருந்தச்சன், கொல்லன் (சே) மகன் என்ற பெயர்கள், இப்பெயர்களை உடையவர்கள் கைவினைஞர் வகுப்பைச் (artisan class) சேர்ந்தவர்கள் என்பதைக் குறிக்கிறது. ஒரு துண்டு குறிப்பு குணமல்ல என்ற பெயரையும் குறிப்பிடுகிறது.

கல்வெட்டு பாடம்[தொகு]

 • 1. கே ( வா) த பெருந்தச்சன்.
 • 2. குணமல்லன்.
 • 3. பைய்ய மிழிப்பான்.
 • 4. சாதமுக்கியன்.
 • 5. கலியா ( னி)
 • 6. நமோ திருவொற்றியூர் அ( பா)ஜர்.
 • 7. கொல்லன் (சே) மகன்.
 • South Indian Inscriptions. Pallva Inscriptions. SII No. 23-A. (A. R. No. 105-107 of 1932-33). Punjeri, Chingleput Taluk, Chingleput District.[3]

விளக்கம்[தொகு]

மாமல்லபுரம் நினவுச்சின்னங்களைச் செதுக்கிய சிற்பிகளின் பெயர்கள் அவை எவற்றிலும் குறிப்பிடப்படவில்லை. பூஞ்சேரி கல்வெட்டில் இந்த சிற்பிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.[3] கேவாத பெருந்தச்சன், குணமல்லன், பைய்யமிழிப்பான், சாதமுக்கியன், கலியாணி, திருவொற்றியூர் ஆபாஜன், கொல்லன் சேமகன் ஆகிய ஏழு பெயர்கள் இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தச்சன் என்பது சிற்பியைக் குறிக்கும். பெருந்தச்சன் என்பது தலைமைச் சிற்பியைச் சுட்டுவதாகும். அவர்கள் இந்தப் பகுதியில் இருந்தபோது அல்லது தங்கியபோது தங்களது பெயர்களைப் பொறித்து இருக்கலாம். இவை, கி.பி. 671 முதல் 700 முடிய உள்ள காலத்தைச் சேர்ந்தது என்கிறார் பல்லவ சிற்பக் கலைகளை ஆராய்ந்து வரும் முனைவர் ஜான்ஸன் வெஸ்லி.[1]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 ஆராயப்பட வேண்டிய அரிய கல்வெட்டுகள்! தினமணி ஜனவரி 25, 2010
 2. ECR widening threatens ancient Poonjeri inscriptions near Mahabs M T Saju The Indian Express Apr 25, 2016
 3. 3.0 3.1 Pallava Inscription South Indian Inscriptions. (A. R. No. 105-107 of 1932-33). Punjeri, Chingleput Taluk, Chingleput District.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஞ்சேரி_கல்வெட்டு&oldid=3421777" இருந்து மீள்விக்கப்பட்டது