புலவராற்றுப்படை
Appearance
ஆற்றுப்படை நூல்களில் புலவராற்றுப்படை என்பதும் ஒன்று. கல்வி கேள்விகளில் புலமை மிக்கவர் புலவர். திருவள்ளுவர் புலமையை நுண்மாண் நுழைபுலம் [1] என்கிறார். புலவர்களைத் தெள்ளியர் என்கிறார். திருவும் தெளிவும் ஓரிடத்தில் அமைவதில்லை. [2] எனவே புலவர்கள் வறுமையில் வாடினர். வள்ளல்களைத் தேடிச் சென்றனர். தேடிச் சென்று வறுமையைப் போக்கிக்கொண்ட புலவர்கள் வறுமையில் வாடும் புலவர்களை வள்ளல்கள் வாழுமிடத்துக்கு ஆற்றுப்படுத்தினர். இப்படிப் புலவர்களை ஆற்றுப்படுத்தும் பாடலைப் புலவராற்றுப்படை என்னும் துறையைச் சார்ந்தது என இலக்கண நூல்கள் கூறுகின்றன.
- அகத்திணையில்
- புறத்திணையில் புலவர் எனப்பட்டோர் அகத்திணையில் அறிவர் எனக் குறிப்பிடப்படுகின்றனர். [3] இவர்கள் தலைவியின் ஊடல் தீர்க்கும் வாயில்கள் பன்னிருவரில் ஒருவர்.
- முதுவாய் இரவலர்
- பொய்கையார் என்னும் சங்க காலப் புலவர் ‘முதுவாய் இரவலர்’ எனக் குறிப்பிடுகிறார். முதுவாய் இரவலன் ஒருவனைச் சேரமான் கோக்கோதை மார்பனிடம் ஆற்றுப்படுத்தும் பாடல்கள் இரண்டு புலவராற்றுப்படை எனக் குறிக்கப்பட்டுள்ளன. [4]
- திருமுருகாற்றுப்படை
- திருமுருகாற்றுப்படை என்னும் நூலில் ‘முதுவாய் இரவலன்’ [5] குன்றுதோறாடும் குமரனைப் ‘புரையுநர் இல்லாப் புலமையோய்’ என்றெல்லாம் வாழ்த்தும்போது, முருகனுக்கு விழாக் கொண்டாடும் கூளியர்
- அளியன் தானே முதுவாய் இரவலன்
- வந்தோன் பெரும நின் வண்புகழ் நயந்து
- எனக் கூறி முதுவாய் இரவலனுக்கு அருள் புரியுமாறு முருகனிடம் வேண்டுகின்றனர். முதுவாய் இரவலன் என்னும் குறிப்பால் திருமுருகாற்றுப்படை நூலைப் ‘புலவராற்றுப்படை’ எனவும் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். [6]
- பாணாற்றுப்படை எனக் குறிப்பிடப்பட்டுள்ள புறநானூற்றுப் பாடல் ஒன்று [7] புலவராற்றுப்படையும் ஆம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- நான்காம் தமிழ்ச் சங்கம்
- மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப்படை நாகூர் வா . குலாம் காதிறு நாவலர் எனும் இசுலாமியத் தமிழ்ப் புலவரால் இயற்றப்பட்ட நூல். பாண்டித்துரைத் தேவர் நிறுவிய நான்காம் தமிழ்ச்சங்கத்தில் பரிசு பெற்ற புலவர் ஒருவர் பரிசில் தேடிக்கொண்டிருக்கும் புலவரொருவரை மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கு ஆற்றுப்படுத்துவதாய் இந் நூல் இயற்றப்பட்டுள்ளது.
- சங்ககாலத்தில் இயற்றப்பட்ட ஆற்றுப்படை நூல்களுள் வழி கூறுவோர் நடைப்பயணத்திற்கான வழியைக் கூறுவர். நாகூர் வா.குலாம் காதிறு நாவலர் தான் வாழ்ந்த காலத்திற்கு ஏற்ப புகைவண்டியில் செல்லுமாறு கூறுகிறார்.
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ கல்வி இல்லாமை, நுண்மாண் நுழைபுலம் இல்லாமை ஆகும் – திருக்குறள் 407
- ↑ இருவேறு உலகத்து இயற்கை, திரு வேறு, தெள்ளியர் ஆதலும் வேறு – திருக்குறள் 374
- ↑ தொல்காப்பியம், கற்பியல் 52
- ↑ புறநானூறு 48, புறநானூறு 49,
- ↑ திருமுருகாற்றுப்படை – அடி 284
- ↑ வச்சணந்திமாலை உரை என்னும் 13 ஆம் நூற்றாண்டு நூல் நிருமுருகாற்றுப்படையைப் புலவராற்றுப்படை என்றும், மலைபடுகடாம் நூலைக் கூத்தராற்றுப்படை என்றும் குறிப்பிடுகிறது
- ↑ புறநானூறு 141