வச்சணந்திமாலை உரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வச்சணந்திமாலை உரை என்பது, குணவீர பண்டிதர் எழுதிய வச்சணந்திமாலை என்னும் நூலுக்கான உரை நூல் ஆகும். இதை இயற்றியது இன்னார் எனத் தெரியவில்லை. எனினும், இவ்வுரை நூல் வச்சணந்திமாலை நூலாசிரியரான குணவீர பண்டிதரின் மாணாக்கர் ஒருவரால் நூலாசிரியர் காலத்திலேயே செய்யப்பட்டது என்பதை உரைக் குறிப்புகள் புலப்படுத்துகின்றன. இதன் காலம் 13 ஆம் நூற்றாண்டு.

உரைநலன்கள் சில[தொகு]

 • உரையாசிரியர் தன் ஆசிரியரைப் புகழ்கிறார்.[1] [2]
 • மாணாக்கர் பாங்கிற்கு உவமையாக மலை, நிலம், பூ, துலாக்கோல் ஆகியவற்றைக் குறிப்பிடும் பாடல் ஒன்றை மேற்கோள் காட்டுகிறார். [3]
 • நுல் கற்கத் தகுதி இல்லாதவர் எட்டு பேர் எனக் குறிப்பிடும் வெண்பா ஒன்றை இவர் மேற்கோள் காட்டுகிறார்.[4]
 • யானைத்தொழில், அங்கமாலை, நயனப்பத்து, பயோதரப்பத்து, அவிநயம், கழைக்கோட்டுத்தண்டு முதலான இன்று கிடைக்காத நூல்களின் பெயர்களை இவர் தம் உரையில் குறிப்பிடுகிறார்
 • திருமுருகாற்றுப்படையைப் புலவராற்றுப்படை என்றும், மலைபடுகடாம் நூலைக் கூத்தராற்றுப்படை என்றும் இவர் குறிப்பிடுகிறார்.
 • கவிஞர்களுக்கு இவர் சூட்டும் பெயர்கள் சுவையானவை
  • கள்ளக்கவி – மற்றொருவன் பாட்டைத் தன்பாட்டாகத் தருபவன்
  • சார்த்துகவி – மற்றொருவன் இசையில் பாடுபவன்
  • பிள்ளைக்கவி – தனக்கென மொழிநடை இல்லாமல் பாடுபவன்
  • வெள்ளைக்கவி – புன்மொழியால் பாடுபவன்

கருவிநூல்[தொகு]

 • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

 1. பண்பார் கவிஞர் விதந்தோதப் பாட்டியலாம்
  வெண்பா அந்தாதி விளம்பினான் – நண்பு ஆரும்
  கோடாத சீர்த்திக் குணவீர பண்டிதனாம்
  பீடார்க் களந்தைப் பிரான்.

 2. வையம் புகழ் களந்தை வச்சணந்தி மாமுனிவன்
  செய்ய பதக்கமலம் சேர்ந்து.

 3. மலைநிலம் பூவே துலாக்கோல்என்று இன்னார்
  உலைவு இல் உணர்வு உடையார்.

 4. மடி, மானி, பொச்சாப்பான், காமுகன், கள்வன்,
  அடுநோய்ப் பிணியாளன், ஆறாச் சினத்தன்
  தடுமாறு நெஞ்சத்தவன் உள்ளிட்ட எண்மர்
  நெடுநூலைக் கற்கலாகாதார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வச்சணந்திமாலை_உரை&oldid=1750587" இருந்து மீள்விக்கப்பட்டது