புனித வனத்துச்சின்னப்பர் தேவாலயம், கல்பட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புனித வனத்துச்சின்னப்பர் திருத்தலமானது, புதுவை-கடலூர் உயர் மறைமாவட்டத்தில் கி.பி.1898 ஆம் ஆண்டு உருவான திருத்தலங்களில் ஒன்றாகும்.[1][2] இது தென்னிந்தியாவில் சென்னையில் இருந்து 177 கி.மீ. தூரத்தில் உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் - திருக்கோவிலூர் நெடுஞ்சாலையில் உள்ள மாம்பழப்பட்டு என்ற ஊரின் தெற்கு திசையில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

கல்பட்டு பங்கின் வரலாறு[தொகு]

கல்பட்டு என்ற இவ்வூரானது தெளி, கக்கனூர் போன்ற ஊர்களை போன்று, முகையூர் பங்கின் கீழ் இருந்து வந்தது. அப்போது முகையூரின் பங்கு குருவாக இருந்த அருட்திரு. அந்தோணி அடிகள் காலத்தில் புனித வனத்துச் சின்னப்பர் காட்சி தந்ததின் காரணமாக இத்திருத்தலமானது உதயமானது. பக்தர்கள் பெருங்கூட்டமாக வருவதைக்கண்டு, இந்த புனித பகுதி திருயாத்திரை தலமாக சிறப்பிக்கப்பட்டது. இத்திருத்தலத்தின் காரணமாக கல்பட்டுக்கு அருகில் உள்ள தெளி என்ற கிராமமானது கல்பட்டை உள்ளடக்கி தனிப்பங்காக முகையூர் பங்கில் இருந்து கி.பி.1901-ம் ஆண்டு பிரிக்கப்பட்டு ஏற்படுத்தப்பட்டது. பிறகு கி.பி.1998-ம் ஆண்டு ஆகத்து மாதம் 8 ஆம் தேதி தெளி பங்கில் இருந்து பிரிக்கப்பட்டு கல்பட்டு தனிப்பங்காக உயர்த்தப்பட்டது.

சாட்சியும் மாட்சியும் மற்றும் காணாமல் போன மாடுகளும்[தொகு]

சுமார் கி.பி. 1898-ம் ஆண்டு கல்பட்டு கிராமத்தை சேர்ந்த கல்யாண ஐயர் குடும்பத்தைச் சேர்ந்த சுப்பிரமணி ஐயர் ஒருநாள் புதர்களிடையே காணாமல் போன மாடுகளை தேடிவந்தபோது. (தற்போதுள்ள பழைய ஆலயத்தை சேர்ந்தார்ப்போல் உள்ள) மலையில் தூப நறுமணமும், மணியோசையும் சிலுவை அடையாளமும் தோன்றி, தோன்றி மறைவது போன்ற காட்சிகளைக் கண்டு வீட்டிற்குச் சென்றார். இரவு நித்திறையில் வெள்ளைக்குதிரையில் துறவி போன்ற ஒருவர் தோன்றி "வனத்துச்சின்னப்பர் நானே! பகலில் காட்சி கண்ட இடத்தில் மாடுகள் கிடைக்கும்" எனக் கூறியதை கனவில் கண்டார். காலையில் எழுந்து கிறிஸ்துவ சமுதாயத்தைச் சேர்ந்த சூரப்ப வாத்தியார் குமாரர் கலங்காணிமுத்து என்பவரிடம் சென்று நடந்ததைச் சொன்னார். அவருடன் இன்னும் சிலரும் சென்று அதே மலையில் மீண்டும் அந்த அற்புத காட்சிகளை கண்டதுடன் மாடுகளும் கிடைத்தன. இந்த அதிசயம் நடந்த இவ்விடத்தில் உண்மையிலே புனித வனத்துச்சின்னப்பர் எழுந்தருளியுள்ளார் என்பதை உணர்ந்து மக்கள் மலையடிவாரத்திலுள்ள முட்செடிகளையும், புதற்களையும் சுத்தம் செய்து, மேடையும் அமைத்து சிலுவை ஒன்றை நட்டு மண்கூடு விளக்கேற்றி நாள்தோறும் புனித வனத்துச்சின்னப்பரை வணங்கி பக்தியுடன் வேண்டி பலவிதமான அற்புதங்களையும், வரங்களையும் பெற்றனர். இச்செய்தி எங்கும் பரவி பக்தர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு இத்திருத்தலம் நாடி வந்தனர். புனிதரின் மகிமையை திரளான மக்கள் ஒன்று கூடி கொண்டாடினார்கள்.

சிற்றாலயமும் சுருபம் வந்த வரலாறும்[தொகு]

பக்திமிக்க பங்கு குருவாக முகையூரில் பணிபுரிந்த அருள்திரு. அந்தோணி அடிகள் காலத்திலே மேற்கூறப்பட்ட புனித வனத்துச்சின்னப்பரின், புதுமை நடைபெற்றது சிறப்பு மிக்க ஒன்றாகும். இவர் புனித வனத்துச்சின்னப்பருக்கு மகிமை சேர்க்கும் விதத்திலே சிற்றாலயமாக கூரை ஆலயத்தை அமைத்து தந்தார். புனிதரின் சுரூபமானது இல்லாததனால் பக்தர்கள் பார்த்து ஜெபிக்கவும், இவ்வாலயத்தில் வைக்கவும் தந்தையின் முயற்சியால் பிரான்ஸ் தேசத்திலிருந்து புனிதரின் சுருபம் வரவழைக்கப்பட்டது.

விழுப்புரத்திற்கு பார்சலில் வந்த புனித வனத்துச்சின்னப்பர் சுருப பெட்டியை ஏற்றி வந்த புகை வண்டி மாம்பழப்பட்டு இரயில் நிலையம் வந்து நின்றது. பிறகு மீண்டும் புறப்பட ஆரம்பித்தபொழுது புகைவண்டி இயங்கவில்லை இரயில் இயக்குனர்கள் என்ன காரணம் என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பெட்டியிலும் சோதனை செய்தார்கள். பின்பு பார்சல் பெட்டி அருகில் சென்ற போது அருகில் உள்ள பகுதிக்கு வந்த பார்சல்களை இறக்கி வைத்தார்கள் அந்த பார்சலில் முகையூர் பங்கு என்ற பெயரிலே பார்சல் ஒன்று இருப்பதை பார்த்து இறக்கிவைத்தார்கள். அப்போது திடீரென இரயில் இயங்கத் தொடங்கிவிட்டது. இந்த மகிழ்ச்சியிலேயே மீண்டும் புனித வனத்துச்சின்னப்பரின் சுரூபம் உள்ள பார்சல் பெட்டியை புகைவண்டியிலேயே ஏற்றி புறப்பட ஆரம்பித்தபொழுது புகைவண்டி புறப்படவில்லை. எனவே இரயில் இயக்குனர்கள் அதிசயமாக பார்த்தார்கள். எனவே அந்த பார்சல் பெட்டியை மாம்பழப்பட்டு இரயில் நிலையத்திலேயே இறக்கி வைத்துவிட்டு முகையூர் பங்கு தந்தையிடம் இச்சம்பவத்தை அறிவித்தார்கள். இச்சம்பவத்தை கேட்ட பங்குத்தந்தை அருள்திரு. அந்தோணி அடிகள் அந்தப்பார்சலை முகையூருக்கு மாட்டுவண்டியில் கொண்டுவரும்படி வண்டியோடு ஆட்களை அனுப்பி வைத்தார். மாட்டுவண்டியில் அந்த பார்சலை ஏற்றிவைத்து முகையூருக்கு ஓட்டிச்செல்ல முயன்றபொழுது அந்த வண்டிமாடு அங்கு செல்ல வில்லை. பிறகு மாடுகள் போகின்ற போக்கிலே விட்டுவிட்டார்கள். அது நேராக கல்பட்டுக்கு வந்து கூரை ஆலயத்தின் முன்புற வாசலில் வந்து நின்றது. பின்பு எல்லோரும் அந்த பெட்டியை திறந்து சுரூபத்தை மகிழ்ச்சியோடு தூக்கி வந்து இந்த கூறை ஆலயத்தில் வைத்து வழிபட்டு புனித வனத்துச்சின்னப்பரின் பெருமையை புகழ்ந்து பேசினார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "புனித வனத்து சின்னப்பர் திருத்தலத்தில் பெருவிழா". தினமலர் (அக்டோபர் 11, 2017)
  2. "St.Paul the Hermit Church – Kalpet".