புசுக்கின் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவின்கலைகளுக்கான புசுக்கின் அருங்காட்சியகம்.

கவின்கலைகளுக்கான புசுக்கின் அரச அருங்காட்சியகம் (Pushkin State Museum of Fine Arts, உருசியம்: Музей изобразительных искусств им. А.С. Пушкина) என்னும் முழுப் பெயர் கொண்ட புசுக்கின் அருங்காட்சியகம், மாசுக்கோவில் உள்ள ஐரோப்பியக் கலைகளுக்கான மிகப்பெரிய அருங்காட்சியகம் ஆகும். இது, மாசுக்கோவில், வொல்கோனா சாலையில் மீட்பர் யேசு பேராலயத்துக்கு எதிரில் அமைந்துள்ளது. 1981 இலிருந்து, இசுவ்யாடொசுலாவ் ரிக்டரின் டிசம்பர் நைட்சு எனப்படும் பன்னாட்டு இசை விழா இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுவருகிறது.

இந்த அருங்காட்சியகம் புசுக்கினின் பெயரில் இருந்தாலும், புகழ் பெற்ற உருசியக் கவிஞரான அலெக்சாண்டர் புசுக்கினுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. ஆனாலும், அவரை நினைவு கூர்வதற்காக இப்பெயர் இடப்பட்டது. இந்த அருங்காட்சியகம் பெயர்பெற்ற கவிஞர் மரீனா திசுவட்டயேவாவின் தந்தையான பேராசிரியர் இவான் திசுவட்டயேவினால் நிறுவப்பட்டது. இவர், மாசுக்கோவுக்கு ஒரு கவின்கலைக்கான அருங்காட்சியகத்தின் தேவைகுறித்து கோடீசுவரரும், வள்ளலுமான யூரிய் நெக்கயேவ்-மால்ட்சோவ், கட்டிடக்கலைஞர் ரோமன் கிளீன் ஆகியோருக்கு விளக்கி அவர்கள் மூலம் இதை நிறுவினார். சோவியத் உகத்துக்கான மாறுநிலைக் காலகட்டத்திலும், தலைநகர் மாசுக்கோவுக்கு மாறிய காலகட்டத்திலும் பல்வேறு பெயர் மாற்றங்கள் இடம்பெற்றன. 1937ல் கவிஞர் அலெக்சாண்டர் புசுக்கினின் 100 ஆவது இறந்த தினத்தில் அவரது நினைவாகத் தற்போதைய பெயரை இது பெற்றது.

வெளி இணைப்புகள்[தொகு]