மூப்புப்பார்வை
மூப்புப்பார்வை | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | கண் மருத்துவம், vst |
மெரிசின்பிளசு | 001026 |
மூப்புப்பார்வை (presbyopia) அல்லது சாளேசுவரம் என்பது விழியின் அண்மைப் பார்வைக்கான குவிமையத்தன்மை ஆற்றலானது வயதுடன் குறைபட்டுச் செல்லுகின்ற ஒரு உடல் நலக்குறைபாடாகும் இதன் போது விழி ஏற்பமைவுத் தன்மையில் மாற்றம் ஏற்படுகிறது. இந்தக் குறைபாட்டிற்கான சரியான விளக்கம் திட்டவட்டமாகத் தெரியாவிடினும் ஆய்வுகளில் இருந்து கண்ணின் வில்லை மீட்சித்தன்மையை இழப்பது, வில்லையின் வடிவத்தை மாற்றி அமைக்கும் பிசிர்த்தசை வலுவிழப்பது, வில்லை பெரிதாகிக் கடினமாவது போன்றவை காரணமாகலாம் என அறியப்பட்டுள்ளது.
வெள்ளை முடியும் சுருக்கங்களும் முதுமை அடைவதைக் காட்டுவதைப் போலவே மூப்புப்பார்வையும் (பிரஸ்பையோப்பியாவும்) முதுமை நிலைக்கான தொடக்கநிலையை நினைவு படுத்தும் ஓர் இயற்கையான குறைபாடாகும். குறைபாட்டின் முதல் அறிகுறி வழமையாக நாற்பதிற்கும் ஐம்பதிற்கும் இடைப்பட்ட வயதுக் காலத்தில் காணப்படுகிறது. வயது கூடக்கூட அண்மையில் இருக்கும் பொருட்களைப் பார்ப்பது குவியமின்மை இழத்தலால் கடினமாகிக்கொண்டே போகும்.
மூப்புப்பார்வை (பிரஸ்பையோப்பியா) எட்டப்பார்வை அல்லது தூரத்துப் பார்வை என்று அழைக்கப்படும் ஐப்பெர்மெட்ரோப்பியாவுடன் தவறுதலாக ஒப்பிடப்படலாம், இவை இரண்டும் வெவ்வேறு குறைபாடுகள் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். பிரஸ்பையோப்பியாவில் குறைபாடானது வில்லையில் காணப்படுகையில் ஐப்பெர்மெட்ரோப்பியாவில் விழிக்கோளத்தில் ஏற்படும் ஒளிமுறிவுப் பிழை ஆகும்[1][2] பிரஸ்பையோப்பியா என்ற சொல்லானது, “முதியவர்” என்னும் கருத்துத் தரும் கிரேக்கச் சொல்லான presbys (πρέσβυς) உடன் புதிய இலத்தின் விகுதியான -opia, என்னும் “பார்வைத் தன்மை” சேர்ந்து உருவாகியது. தமிழில் முதிய வயதுக்கான பார்வை என்று பொருள் படுத்தலாம்[3]
அறிகுறிகள்
[தொகு]முதல் அறிகுறியாக, பாதிக்கப்பட்டவர் மிகச் சிறிய எழுத்துக்களை மங்கலான ஒளியில் படிக்கச் சிரமப்படுவார், தொடர்ச்சியாகப் படிக்கமுடியாது விழிக்களைப்பு, தலைவலி ஏற்படும், நாட்கள் செல்லச் செல்ல எழுத்துக்கள் மங்கலாகிக் கொண்டே செல்லும், இதனைத் தடுப்பதற்கு பாதிக்கப்பட்டவர் படிக்கும் புத்தகத்தை முகத்திலிருந்து நீட்டிக்கொண்டே செல்வார். கடைசியில் புத்தகத்தைப் படிப்பதற்குக் கையின் நீளம் போதாதென்ற நிலைமையும் வந்து சேரலாம்[4]. மூப்புப் பார்வை பிரகாசமான வெளிச்சத்தில் பெரிதாக அவதானிக்கப் படுவதில்லை. மேலும் குறிப்பிடத்தக்கதாக வேறு ஏதேனும் கடின வேலை செய்தால், அல்லது நீண்ட நேரம் கண்ணிற்கு வேலை தந்தால், அதாவது தொலைக்காட்சி, புத்தகம் நீண்ட நேர உபயோகத்தின் போது பிசிர்த்தசை களைப்படைந்து தற்காலிக மூப்புப்பார்வை ஏற்படும்.
குறைபாட்டின் அடிப்படை விளக்கம்
[தொகு]இது எவ்வாறு நிகழ்கிறது என்பதை விளங்கிக் கொள்ள விழியின் அண்மைய, சேய்மை புள்ளிகளைப் பற்றித் தெரிந்திருக்கவேண்டியது அவசியம். ஒரு ஆரோக்கியமான சாதாரண கண்ணின் சேய்மைப்புள்ளி முடிவிலி ஆகும், அதாவது தொலைவில் இருக்கும் பொருட்களைப் பார்க்க தூர வரையறை இல்லை. அதேவேளை அண்மைப்புள்ளிக்கான தெளிவுப் பார்வையின் குறைந்த தூரம் சாதாரண கண்ணிற்கு 25 சென்ரி மீட்டர்கள் ஆகும், அதாவது விழியில் இருந்து 25 செ.மீ தொலைவில் உள்ள பொருட்களையே தெளிவாகப் பார்க்கமுடியும். அண்மைப்புள்ளி எல்லா வயதினருக்கும் ஓரே மாதிரி அமையாது, எடுத்துக்காட்டாக, ஒரு பத்து வயதுச் சிறுவனுடைய அண்மைப்புள்ளி ஏழு சென்ரி மீட்டர்களாக அமையும் அதே நேரத்தில் 45 வயதுடைய ஒரு வயது முதிர்ந்தவரினது அண்மைப்புள்ளி 33 செ,மீ. ஆகலாம். (5) ஏற்கனவே குறிப்பிட்டது போல வில்லையின் சுருங்கி விரிவடைதலுக்கு பிசிர்த்தசை உதவுகிறது, இதன் ஆற்றல் பாதிக்கப்படும் போது 25 செ.மீ. தூரத்தில் ஒரு பொருளைப் பார்க்கையில் அது விழித்திரையின் பின்னே உள்ள கற்பனைப் புள்ளியில் குவிவடையும்.
மயோபியாவுடன் (கிட்டப்பார்வை) இணைந்து வருதல்
[தொகு]கிட்டப்பார்வை உள்ள பல மக்களில் மூப்புப்பார்வை வந்தும் அவர்கள் கண்ணாடி இல்லாமல் சமாளிக்கக் கூடியதாக இருக்கும், இவர்களில் கிட்டப்பார்வைக் குறைபாடு அவ்வாறே இருக்கும், தூரத்தில் உள்ள பொருட்களைப் பார்க்க சிரமப்படுவார்கள், ஆனால் மூப்புப்பார்வை இருந்தும் எழுத்துகளைப் படிக்கச் சிரமம் குறைவாக இருக்கும்.
சிகிச்சை
[தொகு]1) கண்ணாடி பயன்படுத்துதல்
பொருத்தமான குவிவு வில்லை பயன்படுத்துதல். மேலெழுந்தவாரியாக
• +1 டையாப்ட்டர் (D), 40 – 45 வயதானவருக்கு,
• +1.5 D, 45 – 50,
• +2 D, 50-55,
• +2.5, 55-60 என்னும் ரீதியில் கண்ணாடி பயன்படுத்தப் படுகிறது[5]
இதன்படி ஒவ்வொரு வயதுப் பருவத்திலும் குவியத் தூரம் மாறுபடுவதைப் பொறுத்து கண்ணாடியின் வலு மாற்றப்படுகிறது. மூப்புப் பார்வையுடன் தூரப்பார்வை, கிட்டப்பார்வை, புள்ளிக்குவியமில் குறைபாடு போன்றவை இருக்கும் போது பெரும்பாலும் இருகுவிய கண்ணாடி பயன்படுத்தப்படுகிறது. இருகுவியகண்ணாடி இரு வெவ்வேறு வித வலுக்களைக் கொண்டிருக்கும், இதன் மூலம் இரு வெவ்வேறு கண்ணாடிகளைப் பயன்படுத்துதல் தவிர்க்கப் படுகின்றது.
சில சந்தர்ப்பங்களில் தொடுவில்லை ஒரு பார்வைக்குறைபாட்டிற்கும், கண்ணாடி மற்றைய குறைபாட்டிற்கும் பயன்படுத்தப் படுகிறது, இதனை ஒற்றைப்பார்வை என்பர்.
இவற்றிற்கு மாறாக கண் பயிற்சி மூப்புப்பார்வையைத் தள்ளிப்போடும் என்று சில தகவல்கள் குறிக்கின்றன[6]
2) அறுவைச்சிகிச்சை
• உள் விழி வில்லை மாற்று அறுவைச்சிகிச்சை
• சீரொளி (லேசர்) சிகிச்சை : கனடாவிலும் மெக்சிகோவிலும் இந்த முறை பயன்படுத்தப்பட்டாலும் ஐக்கிய அமெரிக்காவில் இதனைப் பற்றிய ஆராய்வுகள் தொடர்கின்றன [7]
உசாத்துணைகள்
[தொகு]- ↑ Riordan-Eva, Paul; Whitcher, John P. Vaughan & Asbury's General Ophthalmology. 16th Edition. s.l. : Lange, 2004.
- ↑ Presbyopia and Your Eyes. WebMD. [Online] 2009. http://www.webmd.com/eye-health/eye-health-presbyopia-eyes.
- ↑ Presbyopia. Merriam-Webster, Incorporated. [Online] 1793. cited: http://www.merriam-webster.com/dictionary/presbyopia.
- ↑ Abel, Robert. The Eye Care Revolution: Prevent and Reverse Common Vision Problems. s.l. : Kensington Books, 2004.
- ↑ A K KHURANA. Comprehensive Ophthalmology. 4th Edition. 2007.
- ↑ Free Eye Exercises for better vision. Eye-Exercises-For-Good-Vision. [Online] http://www.eye-exercises-for-good-vision.com/index.html பரணிடப்பட்டது 2010-06-17 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ Presbyopia and Your Eyes. WebMD. [Online] http://www.webmd.com/eye-health/eye-health-presbyopia-eyes.