பிரவீணா சாலமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரவீணா சாலமன் (Praveena Solomon), இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக சேவகரும், சென்னையின் மிக பழமையானதும் பரபரப்புமான வேலங்காடு தகன மைதானத்தின் மேலாளருமாவார்.[1]

சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் இந்திய சமூக நல அமைப்பு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் இணைந்து சமூக சேவை செய்து வந்த பிரவீணா, 2014ஆம் ஆண்டிலிருந்து வேலங்காடு சுடுகாட்டின் மேலாளராக இருந்து வருகிறார்

கல்வி[தொகு]

பிரவீணா, சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கிய பட்டம் பெற்றுள்ள பட்டதாரி ஆவார்.[2] மேலும் செவிலியர் படிப்பையும் பயின்றுள்ளார். இந்திய சமூக நல அமைப்பின் செயல்பாடுகளை பற்றி பத்திரிகையில் படித்து, அதன் மூலம் கவரப்பட்டு தொண்டு நிறுவனத்தில் இணைந்து பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பின்தங்கிய குழந்தைகள் மற்றும் பாலியல் தொழிலாளர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியை செய்துவருகிறார்.[3]

தொழில்[தொகு]

மார்ச் 2014ஆம் ஆண்டில், நூற்றாண்டுகள் பழமையானதும் சென்னை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதுமான வேலங்காடு தகன இடத்தோடு சேர்ந்து முப்பத்து எட்டு சுடுகாடுகளை பொறுப்பேற்று  நடத்துவதற்கான ஒப்பந்தத்தை இவர் பணியாற்றும் தொண்டு நிறுவனம் சென்னை மாநகராட்சியிடமிருந்து பெற்றது. இதனடிப்படையில் வேலங்காடு சுடுகாட்டின் பராமரிப்பாளராக பிரவீணா நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய மத, சமூக கலாச்சார விதிகளின் படி ஒரு பெண் சுடுகாட்டிற்குள் வருவதே தவிர்க்க கூடியது. ஆனால் அதற்கு மாறாக பிரவீணா ஒரு சுடுகாட்டின் மேலாளராக பொறுப்பேற்று நடத்துவதை ஆரம்பத்தில், உள்ளூர் மக்கள் வித்தியாசமாகவும், எதிர்ப்பு கண்ணோட்டத்துடனும் பார்த்துள்ளனர்.[4]

படிப்படியாக, காவல்துறையினரின் ஆதரவு மற்றும் இவரது சொந்த முயற்சியின் காரணமாக இந்த சுடுகாட்டின் ஒட்டுமொத்த அமைப்பையே ஒரு பூங்காவைப் போல மாற்றினார். இதனை கண்டுணர்ந்த பொதுமக்களும் இப்போது இவருக்கு உதவியாகவும் கரிசனையோடும் நடந்து கொண்டுள்ளனர். இவரின் மேலாண்மையின் கீழ், இந்த சுடுகாடு, பல்வேறு நவீன வசதிகளை பெற்றும், சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஒரு சுடுகாட்டினை பொறுப்பேற்று நடத்துவது முழுக்க ஆண்களின் வேலை என்று கருதப்பட்ட நிலையில் பிரவீணா அந்த கருத்தினை உடைத்து முதன்முறையாக, சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய துணிச்சலான செயலுக்காக, இந்தியக் குடியரசுத் தலைவர் மாளிகையில் 2018ஆம் ஆண்டிக்கு நடைபெற்ற விழாவில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரான மேனகா காந்தியிடம், 'முதல் பெண்கள்' என்ற விருதை பெற்றுள்ளார். இந்த விருது அந்தந்த துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Chennai woman who runs a Hindu crematorium" (in en-GB). BBC News. 2016-08-04. https://www.bbc.co.uk/news/world-asia-india-36955823. 
  2. . 2016-08-04. 
  3. . 2016-07-17. 
  4. "CusCustodian of the dead offers bereaved her shoulder to cry on".
  5. Pal, Sanchari (2017-09-23). "How This Woman Broke Taboos By Transforming Chennai's Oldest Crematorium". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரவீணா_சாலமன்&oldid=3934457" இலிருந்து மீள்விக்கப்பட்டது