பாலதண்டாயுதபாணிசுவாமி கோயில், குமரமலை
பாலதண்டாயுதபாணிசுவாமி கோயில், குமரமலை | |
---|---|
ஆள்கூறுகள்: | 10°21′53″N 78°43′39″E / 10.3648°N 78.7275°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | புதுக்கோட்டை |
அமைவிடம்: | குமரமலை |
ஏற்றம்: | 144 m (472 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | பாலதண்டாயுதபாணிசுவாமி |
குளம்: | சங்குசுனை தீர்த்தம் |
சிறப்புத் திருவிழாக்கள்: | வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
பாலதண்டாயுதபாணிசுவாமி கோயில் என்பது இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தின் குமரமலை என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயில் ஆகும்.[1]
அமைவிடம்
[தொகு]புதுக்கோட்டையில் இருந்து காரையூர் செல்லும் வழியில் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[2] புல்வயல் கிராமத்திற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. குமரமலை விலக்கு என்னும் இடத்தில் இறங்கி குமரமலை ஒரு 1 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
மூலவர்
[தொகு]பழநி மலையில் உள்ள முருகப் பெருமானைப் போன்று இங்குள்ள மூலவர் இடுப்பில் கை வைக்காமல், கைகளைத் தொங்கவிட்டபடி அருள்பாலிக்கிறார். மழித்த தலையுடன் இல்லாமல், உச்சிக் குடுமியுடன் அந்தணரைப் போல் காட்சி தருகிறார்.[3] கோயிலின் தீர்த்தம் சங்குசுனை தீர்த்தம் ஆகும். [4]
புராணம்
[தொகு]ஒரு பக்தருக்காக பழனி ஆண்டவர் மனமிரங்கி இங்கு காட்சி அளித்ததாகக் கூறப்படுகிறது. [2]சேதுபதி எனப்படும் பக்தர் ஒவ்வொரு வருடமும் பழனிக்கு காவடியைச் சுமந்து சென்றார். 80 வயதானபோது காவடியைத் தூக்கிச் செல்ல சிரமப்பட்டார். பழனிக்கு செல்ல இயலாத சூழல் வந்தது. அவருடைய கனவில் முருகன் வந்து குமரமலை குன்றின்மீது சங்கம் செடி புதர் அருகில் வந்து தங்குவதாகக் கூறினார். அங்கு விபூதி, ருத்ராட்சமாலை, பிரம்பு, எலுமிச்சம்பழம் ஆகியவை இருக்கும் என்றார். முருகன் கூறியபடி, மறுநாள் அவர் சென்றபோது அவை இருந்தன. அங்கு வேல் நட்டு வழிபடத் தொடங்கி பின்னர் ஒரு முருகன் சிலையை அமைத்து பால தண்டாயுதபாணி என்று பெயர் சூட்டினார். 1896ஆம் ஆண்டில் பல்லவராயர்கள் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்தினர். [4]
சிறப்புகள்
[தொகு]இந்தப் பகுதியில் உள்ள பெண்கள் தம்முடைய வளைகாப்பின்போது கோயில் அர்த்த மண்டபத்தில் உள்ள வேலுக்கும் வளையல் சாத்தி வழிபாடு செய்கிறார்கள். அவ்வாறு செய்யும்போது சுகப் பிரசவம் அமையும் என்று நம்புகின்றனர். இங்கேயுள்ள மலையில், பாதத்தை வரைந்து நேர்த்திக் கடன் செலுத்தினால், வாத நோய் நீங்கும் என்று நம்புகின்றனர். பல கிராமங்களிலிருந்தும் பாதயாத்திரையாக பக்தர்கள் இங்கு வந்து அருளைப் பெறுகிறார்கள்[3]
நேரம்
[தொகு]காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரையிலும் வழிபாட்டிற்காக இக்கோயில் திறந்திருக்கும்.[2]
திருவிழாக்கள்
[தொகு]வைகாசி விசாகம், சஷ்டி, ஆடிக் கார்த்திகை சோம வாரம், தைப்பூசம், பங்குனி உத்தரம் உள்ளிட்ட விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன. கடைசியாக இக்கோயிலின் குடமுழுக்கு 19 மார்ச் 1995இல் நடைபெற்றது.[2] கார்த்திகைத் திருவிழா இங்கு கொண்டாடப்படுகிறது. [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில், வலைத்தமிழ்
- ↑ 2.0 2.1 2.2 2.3 புதுக்கோட்டைக் கோயில்கள், புதுக்கோட்டை மாவட்டத் திருக்கோயில்கள் பயணியர் கையேடு, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, 2003
- ↑ 3.0 3.1 சி.வெற்றிவேல், நோய் போக்கும் பால தண்டாயுதபாணி, இல்லம் தேடி வரும் இறை தரிசனம், விகடன், 1 மே 2020
- ↑ 4.0 4.1 அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில், தினமலர் கோயில்கள்
- ↑ குமரமலை பாலதண்டாயுதபாணி கோயிலில் தீபம் ஏற்றி வழிபாடு, தினமணி, 3 டிசம்பர் 2017, பரணிடப்பட்டது