உள்ளடக்கத்துக்குச் செல்

பழுவேட்டரையர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழுவேட்டரையர்
Pazhuvettaraiyar
ஆட்சி மொழி தமிழ்
குடும்பப் பெயர்
தலைநகரம் பழுவூர்
9 ஆம் நூற்றாண்டில் பழுவேட்டரையர் குமரன் மறவன் மற்றும் குமரன் கந்தன் ஆகியோரால் கட்டப்பட்ட கீழையூர் இரட்டைக் கோயில்கள்

பழுவேட்டரையர் (Paluvettaraiyar) என்பவர்கள் இடைக்கால சோழர்களின் கீழ் ஆண்ட சிற்றரசர் ஆவர். இவர்கள் தற்கால அரியலூர் மாவட்டத்தின் உடையார்பாளையம் வட்டத்தில் கீழ-பழுவூர், மேல-பழுவூர், கீழையூர் ஆகிய பகுதிகளை ஆண்டனர். இத்தலத்தில் உள்ள கோயில்களுக்கு பல திருப்பணிகளைச் செய்துள்ளனர். இவர்கள் சோழர்களுடன் திருமண உறவு கொண்டவர்களாக அறியப்படுகின்றனர். [1]

தோற்றம்

[தொகு]

சுந்தர சோழனின் அன்பில் செப்பேடுகளின்படி, அவரது தந்தைவழிப் பாட்டி, அதாவது முதலாம் பராந்தகரின் அரசி, அரிஞ்சய சோழனின் தாயார் பழுவேட்டரையர் குடும்பத்தைச் சேர்ந்தவர். [2] அதில் அவர் பழுவேட்டரையர் என்ற சேர மண்டல இளவரசனின் மகள் என்று வர்ணிக்கப்படுகிறார். எனவே இவர்கள் சேர மரபைச் சேர்ந்தவர்கள் என்று உறுதியாகக் கூறலாம். இருப்பினும், இவர்கள் ஏற்கனவே கீழப்பழுவூர், மேலப்பழுவூர், கீழையூர் ஆகிய பகுதிகளை தங்கள் வசம் வைத்திருந்தார்களா அல்லது சோழர்களுடன் கூட்டணி வைத்த பிறகு அவர்களுக்கு இந்தப் பகுதிகள் வழங்கப்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை. [1]

தென்னிந்திய கல்வெட்டுகளில் குறிப்பு

[தொகு]
கீழையூர் இரட்டைக் கோயில்கள் குறித்து இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் தகவல் பலகை

இந்த மரபினரைப் பற்றிய சுமார் பன்னிரண்டு கல்வெட்டுப் பதிவுகள் கிடைத்துள்ளன. பழுவேட்டரையர் என்பவர் கேரள இளவரசர் எனப்படுகிறார். பழுவேட்டரையரின் கல்வெட்டுகள் பெரும்பாலும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கீழப்பழுவூர் மற்றும் மேலப்பழுவூரில் கிடைத்துள்ளன. இவை 1926 ஆம் ஆண்டு ஏ.ஆர். எண். 231 தொகுதியில் காணப்படுகின்றன. இவை பராந்தகத்தின் 12 ஆம் ஆட்சி ஆண்டைச் சேர்ந்தவை. பழுவேட்டரையர் கந்தன் அமுதனார் சோழர்களின் சார்பாக, பாண்டிய, இலங்கைக் கூட்டணிப் படைகளுக்கு எதிராக வெள்ளூரில் போரிட்டு வெற்றி பெற்றார் என்று பராந்தகரின் 12ஆம் ஆட்சி ஆண்டின் ( ஏஆர் எண். 231, 1926 ) கல்வெட்டு ஒன்று கூறுகிறது. இதில் பாண்டியன் உயிர் இழந்தான். இந்த வெற்றியை நினைவுகூரும் வகையில், தளபதி நக்கன் சாத்தன், சிறு-பழுவூரில் உள்ள திருவாலந்துறை - மகாதேவர் கோவிலுக்கு நித்திய தீபத்துக்கு நிவந்தம் வழங்கினார்.

சுந்தர சோழனின் அன்பில் செப்பேடுகளில் கேரள இளவரசன் என்று குறிப்பிடப்பட்டவர் இந்த அமுதனார் ஆவார். இவருடைய மகள் முதலாம் பராந்தகனை மணந்து இளவரசர் அரிஞ்சயனைப் பெற்றெடுத்தார். 'கேரள இளவரசன்' என்ற சொல்லுக்கு அவர் சேர மன்னனின் உறவினர் என்று பொருள். [3]

இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற தலைவர்கள் குமரன் மறவன் மற்றும் குமரன் கந்தன் ஆவர்.[4] 9 ஆம் நூற்றாண்டு கோயிலான கீழையூர் இரட்டைக் கோயில்களைக் கட்டிய பெருமை அவர்களுக்கு உண்டு.[5]

பழுவேட்டரையர் படையணி

[தொகு]

பழுவேட்டரையர் படையணி என்பது 10 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் இலங்கை மீதான படையெடுப்பின்போது அதில் ஈடுபட்ட படைப்பிரிவு ஆகும். [6]  [7] 

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Bhulabhai Memorial Institute, Bombay. The Heritage of Indian Art Series. N.M. Tripathi Private., 1963. p. 29.
  2. S. Swaminathan. The early Chōḷas history, art, and culture. Sharada Pub. House, 1998. p. 78.
  3. "South Indian Inscriptions Volume 13". Archaeological Survey of India. பார்க்கப்பட்ட நாள் 2008-11-09.
  4. History of People and Their Environs: Essays in Honour of Prof. B.S. Chandrababu. Bharathi Puthakalayam, 2011 - Tamil Nadu (India) - 767 pages. p. 142.
  5. "9th century twin temples of Keezhaiyur all set for facelift". 
  6. Studies in Indian epigraphy, Volumes 26–27
  7. Historical perspectives of warfare in India: some morale and matérial determinants By Sri Nandan Prasad, Centre for Studies in Civilizations (Delhi, India) p.193
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழுவேட்டரையர்&oldid=3716919" இலிருந்து மீள்விக்கப்பட்டது