பறையன்பட்டு சமணர் குகை, வட்டெழுத்துக் கல்வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பறையன்பட்டு சமணர் குகை, வட்டெழுத்துக் கல்வெட்டு தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், பறையன்பட்டு என்ற கிராமத்தில் உள்ள குன்றில் அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

இவ்வூர் விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கான எல்லையில் உள்ளது. இவ்வூர் கப்பலாம்பாடியிலிருந்து 3.2 கி.மீ. தொலைவிலும், அவலூர்பேட்டையிலிருந்து 4.5 கி.மீ தொலைவிலும், மேல்மலையனூரிலிருந்து 14.5 கி.மீ. தொலைவிலும், தேவிகாபுரத்திலிருந்து 14.6 கி.மீ. தொலைவிலும், சேத்துப்பட்டிலிருந்து 17.2 கி.மீ. தொலைவிலும், செஞ்சியிலிருந்து 31.6 கி.மீ. தொலைவிலும், மாவட்டத் தலைநகர் விழுப்புரத்திலிருந்து 86.2 கி.மீ. தொலைவிலும், அமைந்துள்ளது. இவ்வூரின் அஞ்சல் குறியீட்டு எண் 604201 ஆகும்.

பறையன்பட்டு குன்று[தொகு]

அவலூர்பேட்டை - தேவிகாபுரம் சாலையில் 4.5 கி.மீ. பயணித்தால், பறையன்பட்டு கிராமத்தை அடையலாம். இங்கிருந்து வலப்புறம் பிரிந்து செல்லும் சாலையில் 1.5 கி.மீ. பயணித்தால், இரண்டு குன்றுகளைக் காண முடியும். இவற்றுள் இரண்டாவது குன்றின் முகட்டில் ஒரு முருகன் கோவில் உள்ளது. குன்றில் ஏறி முருகன் கோவிலைக் கடந்து சென்றால் அங்குள்ள அகன்ற பறைப்பரப்பில் ஒரு ஐந்து வரி வட்டெழுத்துக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்குன்றில் அமைந்துள்ள குகைத்தளத்தில் ஏழு அடி நீளமுள்ள கற்படுக்கை கண்டறியப்பட்டுள்ளது.

பறையன்பட்டு கல்வெட்டு[தொகு]

இது ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டாகும். இதனை நசீதிகை கல்வெட்டு என்றும் குறிப்பிடுவதுண்டு. இக்காலகட்டத்தில் இக்கல்வெட்டின் காலம் 5 - 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகலாம்.[1] இந்த இடத்தில் உள்ள நசீதிகையில் (இருக்கை), வச்சணந்தி எனும் சமண முனிவரின் மாணவர் ஆராதனி (சல்லேகனை) என்னும் சாகும்வரை உண்ணா நோன்பிருந்து [2] உயிர்துறந்த செய்தியினை இக்கல்வெட்டு பதிவு செய்துள்ளது. சல்லேகனை என்ற சொல்லுக்கு மெலிதல் என்பது பொருள்.

 ”இடையூறு ஒழிவில்நோய் மூப்பிவை வந்தால்
 கடைதுறத்தல் சல்லே கனை.”

பிறர் தரும் தாங்கவொன்னாத் தொல்லை, நாட்பட்ட நோய், முதுமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சல்லேகனை நோன்பிருந்து உயர் துறக்கலாம் என்று அருங்கலச்செப்பு என்ற சமண நூல் குறிப்பிடுகிறது.[3] இந்தச் சடங்கில் உண்ணா நோன்பு இருப்போர் தொடக்கத்தில் திட உணவுகளை நீக்கி பால் போன்ற நீர் உணவுகளை மட்டும் அருந்துவர்.[2] சல்லேகனை நோன்பை சந்தாரா என்றும் அழைப்பதுண்டு.

கல்வெட்டு பாடம்[தொகு]

 1. நமோத்து, பாணாட்டு வச்
 2. ச ணந்தி ஆசாரிய
 3. ர் மாணாக்கராராதனி
 4. நோற்று (மு)டித்த (நி)
 5. சீதிகை. [4]

பொருள் / விளக்கம்[தொகு]

பொருள்: பாணாடு என்னும் நாட்டைச் சேர்ந்த, வச்சணந்தி என்ற சமண ஆசிரியரின் மாணவர் ‘ஆராதனி’ என்னும் உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்தார். உயிர்துறந்த இடத்தில் எடுக்கப்பட்ட நசீதிகை இது என்பது இக்கல்வெட்டின் பொருள்.[4]

விளக்கம்: ‘நமோத்து’ என்ற சொல் ‘நமோஸ்து’ என்ற வடசொல்லின் தமிழ் வடிவம் ஆகும். வணக்கம் என்று பொருள் கொள்ளலாம். இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் வச்சணந்தி முனிவர் ஒரு சமண ஆசிரியர் ஆவார். இவர் நந்தி கணத்தைச் சேர்ந்தவர் என்பது இவரது பெயரைக் கொண்டு அறிய முடிகிறது. பிற்காலத்தில் வாழ்ந்த சமண முனிவர்கள் நந்தி கணம், சேன கணம், சிம்ம கணம், தேவ கணம் ஆகிய நான்கு கணத்தைச் (பிரிவைச்) சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர். இந்தப் “பாணாட்டு வச்சணந்தி” பாணரைசர்கள் ஆண்ட பாணாட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம்.[4]

சமண சமயத்தில் வீடுபேறு அடைவதற்கு ‘சல்லேகனை’ என்ற வடக்கிருந்து உண்ணாநோன்பு நோற்று உயிர்துறக்கும் நோன்பு குறித்து திருநாதர்குன்று மற்றும் பறையன்பட்டு கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளன. பல சமணக் கல்வெட்டுகள் சமண முனிவர்களுக்கு பொதுமக்கள் வழங்கிய கற்படுக்கை, சிற்பங்கள், போன்றவற்றை மட்டும் பேசிய நிலையில், இக்கல்வெட்டுகள் சல்லேகனை மற்றும் நசீதிகை குறித்த செய்திகளைப் பதிவு செய்துள்ளன.[4]

தமிழ் பிராமியிலிருந்து வட்டெழுத்தின் படிநிலை வளர்ச்சி[தொகு]

கி.பி. 3 ஆம் நூற்றாண்டு முதல், தமிழ் பிராமி எழுத்து முறையிலிருந்து பிரிந்து வட்டெழுத்து முறையாக மாறத்தொடங்கியது. கி.பி. 6 ஆம் நூற்றண்டில் இந்தப் படிநிலை வளர்ச்சி முழுமையுற்று வட்டெழுத்து முறை தனித்தன்மை பெற்றது.[5] இந்தப் படிநிலை வளர்ச்சி கி.பி. 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரச்சலூர் கல்வெட்டில் புலப்படத் தொடங்கியது. நெகனூர்பட்டி, அம்மன்கோயில்பட்டி ஆகிய ஊர்களின் கல்வெட்டுகளும் இக்காலத்தைச் சேர்ந்தனவாகும்.[4] கி.பி. 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பூலங்குறிச்சிக் கல்வெட்டின் எழுத்தமைதியில் வட்டெழுத்தின் படிநிலை வளர்ச்சியை அடையாளம் காண முடிந்தது.[6] சித்தன்னவாசல், பெருமுக்கல், அரசலாபுரம், இரெட்டைமலை, எடக்கல் (கேரளா), எழுத்துக்கல்லு (கேரளா), ஆகிய இடங்களின் கல்வெட்டுகளும் இக்காலத்தைச் சேர்ந்தனவாகும்.[7][4] கி.பி. 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருநாதர்குன்று, பறையன்பட்டு, பிள்ளையார்பட்டி, திருச்சிராப்பள்ளி, இந்தளூர் கல்வெட்டுகளில் இந்தப் படிநிலை வளர்ச்சி மேலும் உருமாற்றம் கண்டது.[4][7]

திருநாதர்குன்று மற்றும் பறையன்பட்டு ஆகிய இடங்களில் பொறிக்கப்பட்டுள்ள நசீதிகைக் கல்வெட்டுகள் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. [1][8][7] இந்தக்கல்வெட்டு தமிழ் எழுத்து பரிணாம வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. [9]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 ஆலகிராமம் தமிழிணையம் மின்நூலகம்
 2. 2.0 2.1 எசப்பாட்டு 07: பட்டினிக் கொடுஞ்சிறை ச.தமிழ்ச்செல்வன் இந்து தமிழ் திசை அக்டோபர் 29, 2017
 3. வடக்கிருத்தல் மேகலா இராமமூர்த்தி. வல்லமை
 4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 களப்பிரர் காலக் கல்வெட்டுக்கள் (பொ.ஆ 3ஆம் நூற்றாண்டு முதல் 6ஆம் நூற்றாண்டு வரை) மா. பவானி் தமிழ் மெய்நிகர் பல்கலைக்கழகம்
 5. வட்டெழுத்து மா.பவானி. தமிழ் இணையக் கல்விக்கழகம்
 6. பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்கள்மா.பவானி. தமிழ் இணையக் கல்விக்கழகம்
 7. 7.0 7.1 7.2 முந்து தமிழ் வட்டெழுத்துடன் மூத்த பிள்ளையார் சிற்பம் கண்டுபிடிப்பு தினமணி அக்டோபர் 04, 2015
 8. தொண்டை மண்டலத்தில்‌ சமணப்பள்ளிகள்‌ அனந்தபுரம்‌ கோ.கிருட்டினமூத்தி In சமணத்தடயம்‌. நடன. காசிநாதன்‌ மற்றும் மா. சந்திரமூர்ததி (பதிப்பாசிரியர்கள்). மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2005
 9. Jaina Studies: A Historical overview In Reading History with the Tamil Jainas: A Study on Identity, Memory and Marginalisation. R. Umamaheshwari. Springer; 2017. பக்.48