பன்வாரி தேவி (பாடகி)
பன்வாரி தேவி (Bhanwari Devi) (பிறப்பு 1964) இந்தியாவின் இராசத்தானைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புறப் பாடகி. அவர் போபா சமூகத்தைச் சேர்ந்தவர், மேலும் இராசத்தானில் இருந்து பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகளுக்காக பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். [1]
தொழில்
[தொகு]பொது நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கு பெறுவதிலும் நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதற்கும் சமூக மறுப்பு இருந்தாலும், இவ்வாறான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போபா சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண்களில் தேவியும் ஒருவர். இவர், இராசத்தானி சமூக வழக்கப்படி, தன் முகத்தை மறைக்கும் முக்காடுக்குப் பின்னால் இருந்து இசை நிகழ்வை நிகழ்த்துகிறார்.[2] [3] கணவனும் மனைவியும் இணைந்து நிகழ்த்தும் போபா பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, இவர் ஆரம்பத்தில் தனது கணவருடன் பக்திப் பாடல்களைப் பாடினார், ஐந்து இரவுகளில் ஒரு பாரம்பரிய மத இலக்கியக் கதையை விளக்கும் ஒரு ஃபாட் என்கின்ற இராசத்தானிய வகை ஓவியத்துடன் அல்லது கையால் வரைந்த படச்சுருளுடன் நிகழ்த்தினார். தனது கணவரின் மரணத்தைத் தொடர்ந்து, அவர் தனியாக நிகழ்ச்சிகளைத் தொடர்ந்தார், இது ஒரு பெண் போபா பாடகருக்கு அசாதாரணமானது, மேலும் போபா மரபுகளுக்கு வெளியே இராசத்தானி நாட்டுப்புறப் பாடல்களைச் சேர்க்க தனது திறமையை விரிவுபடுத்தினார். [4]
தேவி இராசத்தானி நாட்டுப்புற இசையை நிகழ்த்துவதில் இந்திய மற்றும் சர்வதேச அரங்கில் பரவலான பாராட்டைப் பெற்றுள்ளார், மேலும் பல்வேறு பாரம்பரியங்களைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்களுடன் ஒத்துழைத்துள்ளார். 2003 ஆம் ஆண்டில், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் ஒரு இசை விழாவில் தேவி இசை நிகழ்ச்சி நடத்தினார், மேலும் இந்தியாவில் இராசத்தானி நாட்டுப்புற இசையை மேம்படுத்துவதற்காக செயல்படும் குடிமை சமூகக் குழுவான ஜெய்ப்பூர் விராசத் அறக்கட்டளையில் சேர அழைக்கப்பட்டார். பின்னர் 2004 ஆம் ஆண்டு ஜெய்ப்பூர் பாரம்பரிய விழாவில் பங்கேற்றார் [5] இராசசுதான் சர்வதேச நாட்டுப்புறக் கலைத்திருவிழாவில் தேவி பல ஆண்டுகளாக நாட்டுப்புற இசை நிகழ்ச்சியை நிகழ்த்தியுள்ளார். 2009 ஆம் ஆண்டில், இந்த விழாவில் பாடகி ரேகா பரத்வாஜுடன் பாட அவர் அழைக்கப்பட்டார், மேலும் அவரது பாடலுக்காக விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றார். அதைத் தொடர்ந்து, இராசசுதான் சர்வதேச நாட்டுப்புற விழாவில் தயாரிப்பாளர்கள் ராம் சம்பத் மற்றும் பாடகி சோனா மொகபத்ராவுடன் இணைந்து பணியாற்றினார். 2011 ஆம் ஆண்டில், அவர் எடின்பர்க் சர்வதேச விழாவில் தனது இசை நிகழ்ச்சியை நிகழ்த்தினார், மேலும் ஹெரால்ட் ஸ்காட்லாண்ட் அவரது நிகழ்ச்சியை "ஆழமான வெளிப்பாட்டுடன், அழகாக அலங்கரிக்கப்பட்ட பாடல்" என்று விவரித்தார். [6] [7] எடின்பர்க் சர்வதேச விழாவின் இயக்குநர் ஜொனாதன் மில்சு, அவரது நிகழ்ச்சியை எதிர்பார்த்ததற்கம் அதிகமான வரவேற்பைப் பெற்ற நிகழ்வு என விவரித்தார்.[8]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]தேவிக்கு சிறுவயதிலேயே திருமணமாகி, ஒன்பது குழந்தைகள் உள்ளனர், அவர்களில் ஒருவர் அவருடன் சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டு அவருடன் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்துகிறார். தேவியின் தந்தையும் ஒரு நாட்டுப்புற இசைக்கலைஞராக இருந்துள்ளார். நாட்டுப்புற இசையைக் கற்றுக்கொள்வதற்கும் மற்றும் பாடுவதற்கும் பாடுவதற்கும் அவரை ஊக்குவித்ததற்காக தேவி அவரை பொது நிகழ்வுகளில் பாராட்யுள்ளார். சிறுவயதில் தேவி தனது தந்தையின் நிகழ்ச்சிகளில் அவருடன் சென்றுள்ளார். தேவி தனது மகன்களுக்கு பாடுவதற்கு பயிற்சி அளித்துள்ளார், ஆனால் திருமணமான தனது மகள்களுக்கு பயிற்சி அளிக்க முடியவில்லை, அவர்கள் நிகழ்ச்சிகளை நடத்துவதை எதிர்க்கும் பாரம்பரியம் கொண்ட குடும்பங்களில் உள்ளனர். [9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gupta, Gargi (2015-11-07). "An equal music". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-25.
- ↑ "A different kind of music". The Financial Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-11-01. பார்க்கப்பட்ட நாள் 2021-02-25.
- ↑ Pioneer, The. "Songstresses from the dunes". The Pioneer (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-25.
- ↑ "Women Musicians of Rajasthan - Jaipur Virasat Foundation". Google Arts & Culture (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-25.
- ↑ "Jazz masters join folk singers at Rajasthan International Folk Festival". Hindustan Times (in ஆங்கிலம்). 2014-11-02. பார்க்கப்பட்ட நாள் 2021-02-25.
- ↑ "The Legendary Music of Rajasthan - Edinburgh Festival". edinburghfestival.list.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2021-02-25.
- ↑ "The Legendary Music of Rajasthan, National Museum of Scotland". HeraldScotland (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-25.
- ↑ "New music revolution from India's margins". Free Press Journal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-25.
- ↑ "Women vocalists mesmerise at Rajasthan folk music festival". DNA India (in ஆங்கிலம்). 2014-10-12. பார்க்கப்பட்ட நாள் 2021-02-25.