பத்தாயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்தாயம்

பத்தாயம் அல்லது மரத் தொம்பை என்பது தானியங்களைச் சேமித்து வைக்கும் மரத்தால் செய்யப்பட்ட கொள்கலனாகும்.

அமைப்பு[தொகு]

இது உயரமான மரப்பெட்டி போன்ற தோற்றம் அளிக்கும்[1]. பொதுவாக, இது நான்கடி அகலமும், ஆறடி உயரமும் இருக்கும். பலகை பூவரசு, பலா, மாமரங்களின் துண்டுகளை வெட்டி எடுக்கப்பட்டவை. இவற்றை இணைத்து ஆங்காங்கே, தகடுகளை ஒட்டி, ஆணி அடித்திருப்பார்கள். தானியங்களைப் பெற கீழே சிறு வாயில் ஏணியின் துணையுடன் மேலே ஏறி, தானியங்களைக் கொட்டுவர்.

தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டப் பகுதியில் காணப்படும் பத்தாயங்களை பெரும்பாலும் மாம்பலகை, பலாப்பலகையில் செய்யப்பட்டவை ஆகும். இவை சதுரமாகவொ அல்லது செவ்வகமாகவோ இரு வடிவங்களில் 10 முதல் 12 அடிவரை உயரம் கொண்டதாக இருக்கும். இவை தனித்தனி அடுக்குப் பெட்டிகளாச் செய்து ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்டவையாக இருக்கும். இதன் அடுக்குகளை பிரிக்க இயலும் இதற்கான காரணம், இந்த உயரமான பத்தாயத்தின் உச்சிக்குச் சென்று அனைத்து மூட்டைகளையும் அவிழ்த்து நெல்லைக் கொட்டுவது கடினம் என்பதால்.

ஒவ்வொரு அடுக்காக வைத்து எளிதாக நெல்லை நிரப்ப இந்த ஏற்பாடு. இதன் மேலே, மூட ஒரு கதவு இருக்கும். அடிப்பகுதியில் தேவையான அளவு கம்பையோ, கேழ்வரகையோ, நெல்லையோ எடுத்துக்கொள்ள வசதியாக சிறிய ஒரு துளை இருக்கும்.[2]

பயன்பாடு[தொகு]

அதில் நெல் வரகு கம்பு என்று தானிய வகைகளைக் சேமித்து வைப்பார்கள். வயலும் வயல் சார்ந்த ஊர்களில் பத்தாயம் அதிகம் காணப்படும். அதிகளவிலான தானிய விளைச்சல் இருந்தால், அவற்றை விற்ற பின்னர், வீட்டுப் பயன்பாட்டிற்காக, பத்தாயத்தில் சேமித்து வைப்பர். தானியங்களை பூச்சிகள் அண்டாமல் இருக்க, மருந்து செடிகளின் இலைகளைக் கலந்து வைப்பர். தற்காலத்தில், அதிகம் பயன்படாத வீட்டு உபயோகப் பொருட்கள் பத்தாயத்தில் வைக்கப்படுகின்றன.

குதிரும் பத்தாயமும்[தொகு]

நெல்லைக் கொட்டுவதற்கும், எடுப்பதற்கும் வசதியாக, வீட்டின் கொல்லைப் புறத்தில் பத்தாயம் அமைப்பர். நெற்களஞ்சியமாகிய பத்தாயம், குதிர் என்பதன் வளர்ச்சி. குதிர் வைக்கோல் பிரியால் சுற்றப்பட்டு மண் பூசப்பட்டதாகும். குதிர் வட்டமாக இருக்கும். சங்ககாலத்தில் தமிழர்கள் தானியங்களை குதிரில் கொட்டிவைப்பார்கள். வீட்டின் முன்னே இருந்த முன்றிலும், வீட்டின் உள்ளே இருந்த முற்றத்திலும் குதிர் இருந்தது பற்றி பாடல்கள் உள்ளன.

சொல் விளக்கம்[தொகு]

பத்தாயம் என்ற சொல், பழைய கல்வெட்டுக்களிலோ பனை ஓலை சுவடிகளிலோ இல்லை. 1862 ம் ஆண்டில் வின்சலே என்பவர் வெளியிட்ட அகராதியில் முதன் முதலாக பத்தாயம் இடம் பெற்றிருந்தது. ஆனால் பத்தாயம் சென்னையிலிருந்து கன்னியாகுமரிவரை நிலச்சுவான்தாரர்கள் இல்லங்களில் இடம் பெற்றிருந்தது. அதில் சேமித்து வைத்திருந்த நெல்லை உறவினர்கள், நண்பர்கள் வீட்டு திருமணம் போன்ற விழாக்களுக்கு கொடுத்தார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kiruba,S., Das.S.S.M. and Papadopoulou,S. (2006). Prospects of traditional seed storage strategies against insect infestation adopted by two ethnic communities of Tamil Nadu, southern peninsular India. Bulletin of Insectology 59 (2): 129-134, 2006
  2. என். முருகவேல் (20 சனவரி 2018). "வளம் சேர்க்கும் வேளாண் பொருட்கள்!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 20 சனவரி 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்தாயம்&oldid=3727091" இலிருந்து மீள்விக்கப்பட்டது