பணம் செலுத்துச் சீட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பணம் செலுத்துச் சீட்டு அல்லது சலான் (Challan) எனப்படுவது வங்கிகள், கரூவூலங்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறைகள் தங்களது கணக்கில் பணம் செலுத்த பயன்படுத்தபடும் காகித படிவங்களின் பொதுச்சொல் ஆகும். பெரும்பாலும் இந்தியா,பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் போன்ற ஆசிய நாடுகளில் உள்ள வங்கிகள் தங்களிடம் வங்கிக்கணக்கு வைத்துள்ளோர்களின் கணக்கில் பணம் செலுத்துவதற்காகவும், செலுத்தியவர்கள் அதை உறுதிப்படுத்தவும் இத்தகைய படிவத்தை பயன்படுத்துகின்றனர்.

தற்போதைய மின்ணணு காலத்தில் இந்த படிவங்கள் காகிதத்தில் மட்டுமல்லாது போக்குவரத்து, வேலைவாய்ப்பு மற்றும் காவல்துறை போன்ற பல்வேறு அரசுத்துறைகளால் மின்ணணு முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை பயன்படுத்தி வங்கிகளிலோ அல்லது இணையதளங்கள் வழியாகவோ பணம் செலுத்திக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விளக்கம்[தொகு]

பொதுவாக வங்கிகள் தங்களிடம் உள்ள வங்கிகணக்குகளில் பணம் செலுத்தவும், அரசு கருவூலங்களில் பல்வேறு வகைகளில் (வரி வருவாய், கட்டணங்கள்) போன்றவைகளை செலுத்தவும், பள்ளி, கல்லூரி கட்டணங்களை அதற்குரிய கணக்குகளில் செலுத்தவும், காவல் மற்றும் போக்குவரத்து போன்ற அரசுத்துறைகளால் போடப்படும் அபராதங்களை செலுத்தவும் அதிகாரப்பூர்வமாக அந்த நிறுவனங்கள் மற்றும் அரசுத்துறையினரால் காகிதங்களிலோ அல்லது மின்ண்ணு முறையிலோ வழங்கப்படும் படிவமே செலுத்துச் சீட்டு அல்லது சலான் என அழைக்கப்படும்.

பயன்படுத்தும் முறை[தொகு]

செலுத்துச் சீட்டானது இரண்டு பிரிவாக காணப்படும். பணம் செலுத்துபவர் எந்த கணக்கிற்கு, எத்தகைய பயன்பாட்டிற்கு, யாரால், எவ்வளவு பணம்(எண்ணிலும்,எழுத்திலும்) செலுத்தப்படுகிறது என்பதை அததற்கு குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் தெளிவாக குறிப்பிட வேண்டும். பணம் பெற்றுக்கொள்ளும் அதிகாரி எழுதப்பட்டுள்ள எல்லா விவரங்களையும் சரிபார்த்து ஏற்பு சீட்டில் கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரை இட்டு பணம் செலுத்தியவரிடம் அளிப்பார். இதன்மூலம் இரு தரப்பினருக்கும் பணம் பரிமாறியதற்கு சட்டப்பூர்வமான ஆவணமாக விளங்குகிறது.

பயன்பாடுகள்[தொகு]

செலுத்துச்சீட்டுகள் பயன்படுத்துவதால் அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு பயன்பாடுகள் உள்ளன.

  • வங்கியாளர்களுக்கு, கணக்குகளை பராமரிக்கவும், சரியான கணக்குகளில் பணம் வரவு வைக்கவூம் சட்டப்பூர்வமான ஆவணமாகவும் பயன்படுகிறது.
  • வங்கி கணக்கு வைத்துள்ளோர்க்கு, தங்கள் கணக்கில் பணம் வரவு வைத்துள்ளதற்கு உறுதிச் சீட்டாகவும் பயன்படுகிறது.

மின்ணணு செலுத்துச் சீட்டு[தொகு]

தற்போது அனைத்து துறைகளிலும், சுற்றுசூழல் பயன்பாட்டை முன்னேற்றுவதற்காக காகித சீட்டுகள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மின்ணணு முறையில் அனைத்து கணக்கு விவரங்களும் முன்னதாகவே அச்சடிக்கப்பட்ட நிலையில் தயாரிக்கப்பட்டு போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்கள், அரசுத்தேர்வு விண்ணப்ப கட்டணங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி விண்ணப்ப, தேர்வு கட்டணங்கள் வசூல் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்நாடு,ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகள் இத்தகைய போக்குவரத்து குற்றங்களுக்கான மின்னணு செலுத்துச் சீட்டினை வேறு வேறு பெயர்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் "வயலட்" (VIOLET- Violation Prevention and Regulation Enforcement) என்ற பெயரில் 2013ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.[1] இத்தகைய மின்னணு அபராதச் செலுத்துச் சீட்டு தயாரிக்கும் கருவிகள் அனைத்தும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்குபவையாகும். இதன்மூலம் அபராதத் தொகையை இணையதள வங்கி பரிமாற்றம் மூலமோ அல்லது பண அட்டைகள் மூலமாகவோ உடனடியாக செலுத்த முடியும். செலுத்தப்பட்ட பணத்திற்கு உடனடியாக ரசீதுகளும் வழங்கப்படும்.

இத்தகைய மின்னணு சீட்டு முறையானது அகமதாபாத் நகரத்திலும்,[2] சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, லக்னோ, டெல்லி [3] மற்றும் விஜயவாடா நகரங்களிலும் படிப்படியாக செயல்படுத்தப்பட்டுள்ளது. மும்பை, புனே நகரங்களிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.[4]

மின்னணு செலுத்துச் சீட்டின் பயன்கள்[தொகு]

  • சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் - காகித அபராதச்சீட்டுகள் பயன்படுத்தும் முறையில் போக்குவரத்து காவலர்களால் கைகளால் மூன்று படிவங்கள் எடுக்கப்பட்டு வாகன ஓட்டி, கோப்புகளுக்கு மற்றும் காவல் ஆணையர் அலுவலகம் என அளிக்கப்படுகிறது. ஆனால் மின்னணு முறையில் காகிதங்கள் பயன்படுத்தப்படுவது அறவே தவிர்க்கப்பட்டுள்ளது. ரசீதுகள் கூட இணையவழியிலேயே வழங்கப்படுகிறது. எனவே காகித பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளது.
  • கையூட்டு தவிர்க்கப்படுகிறது - போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களை வசூலிக்கும் காவலர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையே எந்தவித பணப்பரிமாற்றங்களும் நடைபெறாமல் அனைத்து பரிவர்த்தனைகளும் இணைய வழியிலேயே அமைவதால் கையூட்டு வாங்குவதும் கொடுப்பதும் தவிர்க்கப்படுகிறது.
  • குற்றங்கள் குறைவதுடன் குற்றவாளிகள் இலகுவாக பிடிபடுகின்றனர் - செலுத்துச்சீட்டு வழங்கும் கருவிகளில் ஓட்டுனர் உரிமம் சரிபார்க்கும் வசதியும் உள்ளதால் தேடப்படும் குற்றவாளிகளை உடனடியாக கண்டறிய முடிவதுடன் குற்றங்களின் எண்ணிக்கையும் குறைகிறது.
  • அரசிற்கு வருவாய் அதிகரிக்கிறது - இந்த மின்னணு முறையை அறிமுகப்படுத்திய சில மாதங்களிலேயே அபராத வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளது.[5]

இந்த முறையில் எழுபதுக்கும் மேற்பட்ட் போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்கு அபராதம் விதித்தாலும் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோருக்கு அபராதம் அளிக்க இயலாது. ஏனெனில் அத்தகைய குற்றச் செயல்களுக்கு மருத்துவ பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பின்பே அபராதம் விதிக்க இயலும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Police to use hand-held machines to issue e-challans". The Hindu. 7 October 2013. பார்க்கப்பட்ட நாள் 2014-06-25.
  2. Kaushik, Himanshu (28 March 2018). "E-challan makes a comeback from April 15". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/e-challan-makes-a-comeback-from-april-15/articleshow/63521755.cms. பார்த்த நாள்: 25 August 2019. 
  3. "Frustations rise over new traffic e-challan system in Delhi | IndiaToday". Indiatoday.in. 2018-03-12. https://www.indiatoday.in/mail-today/story/frustations-rise-over-new-traffic-e-challan-system-in-delhi-1187330-2018-03-12. பார்த்த நாள்: 2018-04-05. 
  4. "'E Challan' Hyderabad". e-challan.com.
  5. சாலை விதியை மீறியவர்களால் வருவாய்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பணம்_செலுத்துச்_சீட்டு&oldid=2866416" இலிருந்து மீள்விக்கப்பட்டது