பட்டுப்புழு - பாம்பிக்ஸ் மோரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாம்பிக்ஸ் மோரி பட்டுப்புழு லெபிடாப்டீரா என்ற வரிசையையும்,ஹெட்டிரோநியூரா என்ற உப வரிசையையும்,பாம்பிசிடே என்ற குடும்பத்தையும் சேர்ந்தது.[1]இதன் நிறமூர்த்தத்தின் ஒருமடியம் 28 ஆகும்.இதன் வாழ்நாள் குறுகியதாக இருப்பதாலும்,அதற்குள் மிக அதிகமான சந்ததிகளை உருவாக்குவதாலும், மிகச் சுலபமாகக் கையாள முடிவதாலும், மரபியல், இனப்பெருக்கம், உடற்செயலியல், உயிரி வேதியியல் பற்றி அறிய உதவுகிறது.

பட்டுப்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சியைப் பற்றி அறிவது பட்டுப்புழு வளர்ப்புத் தொழிலை நிர்வாகம் செய்ய ஏதுவாக இருக்கும். பாம்பிக்ஸ் மோரியின் வாழ்க்கைச் சுழற்சி முட்டை, புழு, கூட்டுப்புழு, முதிர்பூச்சி என்ற நான்கு நிலைகளைக் கொண்டது. இதன் காலம் காலநிலையைப் பொருத்தும், இனத்தைப் பொறுத்தும் 45-55 நாட்களாகும்.

முட்டை

சிறிய, தட்டையான, நீள்வட்டமாக, 0.6 மி.கி.எடை கொண்டதாக இருக்கும்.இதில் உறக்கநிலையில் உள்ள முட்டைகள், உறக்கநிலையில் இல்லா முட்டைகள் என இரு வகைகள் காணப்படுகின்றன. உறக்கநிலையில் உள்ள முட்டைகள் இள மஞ்சள் நிறத்திலோ, வெண்மையாகவோ காணப்படும். உறக்கநிலையில் இல்லா முட்டைகள் மஞ்சள் நிறத்திலிருந்து கரும்பழுப்பு நிறத்திற்கு மாறும். இந்த பருவம் சில தினங்கள் நீடிக்கும்.

புழு

இது உயிருடன் வாழும் கருவாகும். இது வெண்மையாகக் காணப்படும். இது தலை, மார்பு, வயிறு என மூன்று பாகங்களைக் கொண்டது. புழுப்பருவத்தில் நான்கு முறை தோலுரித்து கூட்டுப்புழுவாக மாறும். இதன் காலம் 27 நாட்களாகும்.இது மல்பெர்ரி இலைகளை உண்டு உயிர் வாழும்.

கூட்டுப்புழு

 இப்பருவத்தை அடைந்தவுடன் தன் வாயிலிருந்து சுரக்கும் திரவத்தைக் கொண்டு தன்னைச் சுற்றி இனத்தைப் பொறுத்து வெண்மை, இள மஞ்சள் அல்லது மஞ்சள் நிறக் கூட்டைக் கட்டும்.2-3 வாரங்கள் இப்பருவத்தில் இருக்கும். இது கூட்டுப்புழுவிற்கு பாதுகாப்பு உறையாகும். இந்த கூடு 1.5 கி.மீ.நீளம் உள்ள ஒரே இழையாகும். கூட்டிற்குள் சென்ற பின் ஒரு முறை புழு தோலுரித்து பழுப்பு நிறமாக மாறும். கூட்டை உடைத்து முதிர்பூச்சி வெளிவந்தால் இழை அறுந்து போகும். அதனால் பட்டு நூலின் மதிப்பு குறையும்.

பட்டுப்பூச்சி(முதிர்பூச்சி)

இதுவே வாழ்க்கை சுழற்சியின் கடைசி பருவமாகும். கூட்டை உடைத்து முதிர்பூச்சி வெளிவரும். இதற்கும் தலை, மார்பு, வயிறு என மூன்று கண்டங்கள் உள்ளன. இதனால் பறக்க முடியாது. இதன் வாயுறுப்புகளும் வளர்ச்சியடையாமல் இருப்பதால், இது உண்ணாது. ஆண் பூச்சிகள் பெண் பூச்சிகளைக் காட்டிலும் பெரிதாக இருக்கும். முதிர்பூச்சி வெளிவந்தவுடன், இறக்கைகளை வேகமாக அடித்து தன் இணையைத் தேடிப்பிடித்து, இணைவுற்று, 24 மணி நேரத்திற்குள் ஆண்பூச்சி மடிந்து விடும். பெண் பூச்சி முட்டைகளை இட்டவுடன் இறந்துவிடும்.

மீண்டும் பட்டுப்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி தொடங்கிவிடும்.[2]

மேற்கோள்

1.Dhote A.K. 1990. Silkworm Biology and Rearing- Sericulture Instructional-cum-Practical Manual Volume II, NCERT, p:1-9.

2. Ajit Medhekar 2016. Lifecycle of Silkworm( With Diagram),http://www.biologydiscussion.com/animals-2/lifecycle-of-silkworm-with-diagram/2655