பச்சை குத்துதல்
.
பச்சைக் குத்துதல் என்பது உடலில் பச்சை வண்ணத்தில் ஊசி கொண்டு குத்திப் பல்வேறு வடிவங்களை வரைந்து அழகுபடுத்திக் கொள்வதாகும்.[1] உடலில் தோலின் கீழாக அழியாத மையினை உட்செலுத்துவதன் மூலம் அல்லது தோலின் நிறக்காரணிகளை மாற்றக்கூடிய பதார்த்தங்களால் எழுத்துக்களையும் உருவங்களையும் வரைந்து கொள்ளல் பச்சைக்குத்துதல் எனப்படும். இது ஒரு நாகரிகப் பாணியாகவும் சில இனக்குழுமங்களில் சடங்காகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. பண்ணை விலங்குகளை இனங்காணல் நோக்கில் அடையாளப்படுத்தவும் பச்சைக்குத்தல் பயன்படுத்தப்படுகிறது.
பச்சைக் குத்துதல் பல்வேறு நாகரிகங்களிலும் காலங்காலமாக இருந்து வருகிற ஒன்று. சப்பானிய ஐனு இனக்குழுவைச் சேர்ந்த மக்கள் முகத்தில் பச்சை குத்திக் கொள்ளும் வழக்கத்தை உடையவர்கள். இந்திய, இலங்கை உள்ளிட்ட மக்களிடமும் பழங்காலத்திலிருந்து பச்சைக் குத்தும் வழக்கம் இருந்து வருகிறது.
வரலாறு
[தொகு]பச்சைகுத்துதல் ஐரோ-ஆசியா நாடுகளில் கற்காலத்திலிருந்து நடைமுறையிலுள்ளதாகும். கி.மு 4000முதல்5000ஆம் ஆண்டுகளுக்கு முன் ஒட்சிப் பள்ளத்தாக்கில் வாழ்ந்த ஓட்சி பனிமனிதனின் கை, கால்களில் காணப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவை முழங்காலின் கீழ், மணிக்கட்டு, முண்ணான் முடிவு முதலான பகுதிகளில் இடப்பட்ட புள்ளிகளும் கோடுகளுமாக இருந்தன. இவை நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கான அக்குபஞ்சர் மருத்துவ வகையாகக் கருதப்படக் கூடியது.
பச்சைகுத்துதலின் வகைகள்
[தொகு]அமெரிக்க தோலியல் அகடமி பச்சைக்குத்துதலை ஐந்து வகைகளாகப் பிரிக்கிறது [2]
- இயற்கையிலான (அ) தழும்புகளாலானது-இது விபத்துக்களாலான காயங்களால் ஏற்படுவது.
- தொழில்முறை சார்பிலானது- அனேகப் பச்சைக்குத்தல்கள் குலங்கள்,கூட்டங்கள், சமூகநிலை,சமயம் அல்லது நம்பிக்கை பற்றி,வீர தீரத்தைக் காட்டுவதற்காக, காதலை வெளிப்படுத்தி, தண்டனைகளைக் குறிக்க, பாதுகாப்புக்காக இடப்படுகின்றன. அத்தகைய பச்சைகுத்தல்கள் தொழில் ரீதியிலான பச்சைக்குத்தல்கள் எனப்படும்.,
- அலங்கார அல்லது அழகியல் ரீதியிலான பச்சைக்குத்தல்கள்
- மருத்துவ நோக்கிலான பச்சைக்குத்தல்கள்
- அடையாளப்படுத்துவதற்கான பச்சைக்குத்தல்கள்
செய்முறை
[தொகு]மேற்றோலின் கீழாக நிறப்பொருள்களை உட்செலுத்துவதன் மூலம் பச்சைக்குத்துதல் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு உட்செலுத்தப்பட்ட நிறப்பொருள் கீழ்ப்புற மேற்றோலின் கீழாகப் பரவி மேற்றோல் கலங்களைச் சிதைக்கும். இவ்வாறு தோற்றுவிக்கப்படும் நிறப்பொருளை பிற பொருளாகக் கருதி உடலின் நிர்ப்பீடனத் தொகுதியிலுள்ள பிற பொருள் எதிரிகளைச் சுரந்து வளைத்துக் கொள்ளும்.[3]
பச்சைக் குத்தும் முறை
[தொகு]மார்பு, மேல் கை, முன்னங் கை, கால் போன்ற உடற் பகுதிகளில் பச்சை குத்தப்படுகிறது. குறவர் என்ற இனத்தைச் சேர்ந்தோர் பச்சை குத்தும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.[1] மஞ்சள் பொடியுடன் அகத்திக் கீரை சேர்த்து அரைக்கின்றனர். அதனை ஒரு துணியில் கட்டி, தீயிலிட்டு எரித்துக் கரியாக்கிக் கொள்கின்றனர். நீர் கலந்து அதனைப் பசையாக்குகின்றனர். கூர்மையான ஊசியினால் அந்தப் பசையைத் தொட்டுத் தோலில் குத்திக் குத்தி எடுத்துத் தேவையான உருவங்களை வரைகின்றனர். பச்சை குத்தப்பட்ட பின் சுடுநீரால் கழுவி அதனைச் சுத்தம் செய்கின்றனர். இப்பொழுது பச்சை குத்திய இடம் அழகாகத் தோற்றம் அளிக்கும். இது எந்நிலையிலும் அழியாது.
உருவங்கள்
[தொகு]தெய்வ வடிவங்கள், கோலங்கள், தேள்,பாம்பு போன்ற உருவங்கள்,பெயர்கள் போன்றவை பச்சை குத்துதலில் இடம் பெறுகின்றன. குறிப்பாகப் பெண்கள் அழகிற்காகவும் அடையாளத்திற்காகவும் இக்கலையைப் பயன்படுத்தி வருகின்றனர். அரசியல் தலைவர்கள்,சின்னங்கள், திரைப்பட நடிக, நடிகையர் படங்களைப் பச்சை குத்திக் கொள்ளும் பழக்கம் இன்றைய இளைஞர்களிடம் காணப்படுகிறது. தற்பொழுது மருதாணிப் பசை கொண்டு இத்தகைய உருவங்கள் அச்சினால் உடலில் வரையப்படுகின்றன. இதனால் பச்சைக் குத்துதல் கலை இன்று வழக்கொழிந்து வருகிறது.
பரவல்
[தொகு]இக்கலை தமிழகத்தில் மட்டுமல்லாது ஆசியாவின் பிற பகுதிகளிலும் அமெரிக்கா, நியூசிலாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் பரவிக் காணப்படுகிறது. ஜப்பானியரின் அக்குபஞ்சர் மருத்துவ முறையானது பச்சைக் குத்துதல் கலையோடு தொடர்புப்படுத்தப்படுகிறது[1]
மேற்கோள்களும் குறிப்புகளும்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 முனைவர் ஓ முத்தையா. "பச்சைக்குத்துதல்". தமிழ் இணைய பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 29, 2012.
- ↑ Tattoos, Body Piercings, and Other Skin Adornments
- ↑ Tattoo lasers / Histology, Suzanne Kilmer, eMedicine