பகவல்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பகவல்பூர் (ஆங்கிலம்: Bahawalpur) பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இந் நகரத்தில் 798,509 மக்கள் வசிக்கின்றனர். பகவல்பூர் பாகித்தானின் 11 வது பெரியநகரமாகும்.[1][2]

1748 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட முன்னாள் பகவல்பூர் மாவட்டத்தின் தலைநகராக பகவல்பூர் இருந்தது. இது 1955 வரை நவாப்களின் அப்பாசி குடும்பத்தால் ஆளப்பட்டது. மேலும் பகவல்பூர் தற்போது அக்காலத்தின் நினைவுச்சின்னங்களுக்காக அறியப்படுகிறது.[3] இந்த நகரம் சோலிஸ்தான் பாலைவனத்தின் விளிம்பில் அமைந்துள்ளது. மேலும் அருகிலுள்ள லால் சுகன்ரா தேசிய பூங்காவின் நுழைவாயிலாக செயற்படுகின்றது.

வரலாறு[தொகு]

1947 ஆம் ஆண்டில் சுதந்திரத்தின் போது இந்த மாநிலத்திற்கு பாகிஸ்தான் அல்லது இந்தியாவுடன் இணைவதற்கான விருப்பம் வழங்கப்பட்டது. நகரம் மற்றும் சுதேச மாநிலமான பகவல்பூர் 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று நவாப் சாதிக் முஹம்மது கான் அப்பாஸி வி பகதூரின் கீழ் பாகிஸ்தானுடன் இணைந்தது. சுதந்திரத்தைத் தொடர்ந்து நகரத்தின் சிறுபான்மை இந்து மற்றும் சீக்கிய சமூகங்கள் பெருமளவில் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தன. அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து முஸ்லீம் அகதிகள் நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியத்திலும் குடியேறினர். 1971 ஆம் ஆண்டில் நகரின் காயிட்-இ-ஆசாம் மருத்துவக் கல்லூரி இல் நிறுவப்பட்டது.[4]

பொருளாதாரம்[தொகு]

பகவல்பூரின் முக்கிய விவசாய பயிர்களாக பருத்தி , கரும்பு , கோதுமை , சூரியகாந்தி விதைகள், கடுகு மற்றும் அரிசி என்பன உற்பத்தி செய்யப்படுகின்றன. பகவல்பூரில் இருந்து மாம்பழங்கள் , நாரத்தைகள், பேரீச்சம் பழங்கள் மற்றும் கொய்யா பழங்கள் என்பன ஏற்றுமதி செய்யப்படும் பழங்களில் சிலவாகும். காய்கறிகளில் வெங்காயம் , தக்காளி , பூக்கோசு , உருளைக்கிழங்கு மற்றும் கேரட் ஆகியன ஏற்றுமதி செய்யப்படுகின்றன. விரிவடைந்துவரும் தொழிற்துறை நகரமாக இருப்பதால் எரி சோடா, பருத்தி வித்து நீக்கல், மாவு ஆலைகள், பழச்சாறுகள், இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி ஆலைகள், தறிகள், எண்ணெய் ஆலைகள், கோழி தீவனம், சர்க்கரை ஆலைகள், நெசவுத்தொழில் என்பன நடைப்பெறுகின்றன.[5]

புள்ளிவிபரங்கள்[தொகு]

2007 ஆம் ஆண்டில் நகரத்தின் மக்கட் தொகை 1998 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 403,408 என்ற சனத்தொகையிலிருந்து 798,509 ஆக உயர்ந்துள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[2] பக்ரி என்பது பகவல்பூரின் ஷாப் ஃபரித் இலாகாவில் காணப்படும் ராஜபுத்திர வம்சாவளியைக் சேர்ந்த ஒரு குலமாகும். அவர்கள் முன்னர் இசுலாமிய மதத்தை தழுவினார்கள். முல்தானில் நெசவாளர்களாக குடியேறினர்.[6]

நிர்வாகம்[தொகு]

பகவல்பூர் பஞ்சாபின் ஆறு நகரங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. அதன் பாதுகாப்பு பஞ்சாப் பாதுகாப்பான நகரங்கள் ஆணையத்தால் மேம்படுத்தும் திட்டத்திற்காக 5.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[7] இது லாகூர் சேஃப் நகர திட்டத்தின் மாதிரியாக வடிவமைக்கப்பட உள்ளது. இதில் நகரம் முழுவதும் 8,000 சிசிடிவிகேமராக்கள் 12 பில்லியன் ரூபாய் செலவில் நிறுவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.[8]

விளையாட்டு[தொகு]

பகவல் விளையாட்டு மைதானம் என்பது பல்நோக்கு அரங்கமாகும். இது 1955 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒரு தேர்வு துடுப்பாட்ட போட்டியொன்றை நடத்தியது. நாட்டின் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச வளைக்கோற் பந்தாட்ட போட்டிகளுக்குப் பயன்படுத்தப்படும் விளையாட்டரங்கமாக பகவல் விளையாட்டரங்கின் மோட்டியுல்லா மைதானம் காணப்படுகின்றது. துடுப்பாட்ட மைதானத்தைத் தவிர ஒரு உடற்பயிற்சி கூடம் மற்றும் நீச்சல்தடாக வசதியும் இவ்வரங்கில் உள்ளது. பகவல்பூர் வரிப்பந்தாட்ட கழக நிர்வாகத்தின் கீழ் சிறந்த வரிப்பந்தாட்ட திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. கால்பந்து மைதானத்தை சுற்றி 2 கிலோமீற்றர் மெதுவோட்ட தடம் அமைக்கப்பட்டுள்ளது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகவல்பூர்&oldid=3561377" இருந்து மீள்விக்கப்பட்டது