நூலகப்பணி (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூலகப்பணி
நூல் பெயர்:நூலகப்பணி
வகை:முதியோர் இலக்கியம்
துறை:நூலகவியல்
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:36
பதிப்பகர்:வள்ளுவர் பண்ணை,
137 பிராட்வே,
சென்னை 600 001
பதிப்பு:5 – 8 - 1960
ஆக்க அனுமதி:வள்ளுவர் பண்ணை,
சென்னை

நூலகப்பணி என்னும் இந்நூல் நூலகப்பணி பற்றிச் சொல்கிறது; அதன் தொடர்பாக மொழி பிறந்த கதையைப் பேசுகிறது; எழுத்து உண்டானதை இயம்புகிறது; புத்தகம் உருவானதை உரைக்கிறது; நூலகம் வளர்ந்த கதையைக் கூறுகிறது; சென்னை மாநில நூலகப் பணியைப் பற்றியும் பகர்கிறது.[1] இந்நூலை எழுதியவர் அந்நாளைய பொதுக்கல்வி இயக்குநர நூலகரும் பின்னாளைய பொதுநூலகத் துறை இயக்குநருமான வே. தில்லைநாயகம் ஆவார். அன்றைய சென்னை மாகாண அரசின் ஒப்புதலோடு இந்நூல் 5.8.1960ஆம் நாள் வெளியிடப்பட்டு உள்ளது.[2]

பின்புலம்[தொகு]

1949 சூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு பொதுக்கல்வித் துறையில் நூலகராகப் பணியில் சேர்ந்த வே. தில்லைநாயகம் 1949 - 1950 ஆம் கல்வியாண்டில் சென்னை பல்கலைக் கழகத்தில் நூலகவியலில் பட்டயம் பெற்றார்.[3] பின்னர் பொதுக் கல்வி இயக்குநரக நூலகராகப் பணியாற்றினார். 1958 நவம்பர் – திசம்பர் மாதங்களில் கோயமுத்தூர் பீளமேட்டில் தமிழ்நாடு அரசு நடத்திய மூன்றாவது முதியோர் இலக்கியப் பண்ணை பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றார். அங்கு கற்ற எழுத்து நுட்பத்தைப் பயன்படுத்தி தான் பணியாற்றும் துறை பற்றி நூலொன்று எழுத விழைந்தார். அவ்விழைவே 36 பக்கங்களைக் கொண்ட நூலகப்பணி என்னும் இந்நூல் ஆகும்.[4]

அணிந்துரை[தொகு]

“நூலகப் பணி என்னும் இந்த நூல் நூலகப்பணிக்கு ஒரு பணி ஆகும். அளவில் சிறிது; ஆகையால், இதை எளிதில் படிக்கலாம். நடை மெலியது; இனிமை ஆனது; கருத்து நிரம்பியது; பொதுமக்கள் அறிய வேண்டியது…. சென்னை நூலாலயச் சட்டம் நன்கு நிறைவேறி எல்லா மக்களும் அதன் நன்மையைப் பெற இந்த நூல் ஒரு துண்டுகோல்.” என இந்திய நூலகவியலின் தந்தையெனவும் நூலகவியலின் ஐன்சுடின் எனவும் புகழப்படும் சீ. இரா. அரங்கநாதன் (S. R. Ranganathan) இந்நூலிற்கு 1960 சூன் 24 ஆம் நாள் அணிந்துரை வழங்கி இருக்கிறார்.[5]

நூலமைப்பு[தொகு]

வேலய்யா என்னும் தாத்தாவும் அவர்தம் பெயரன் அருளப்பன் என்பவரும் நூல், நூலகம், நூலகப்பணி ஆகியவற்றைப் பற்றி (1) நேரம் ஆயிற்று!, (2) புத்தகம் எப்படி வந்தது?, (3) நூலகம் வளர்ந்த கதை!, (4) நூலகம் எப்படி இயங்குகிறது?, (5) சென்னை நூலகப் பணி! என்னும் ஐந்து இயல்களில் உரையாடுவதைப் போல இந்நூல் அமைக்கப்பட்டு இருக்கிறது.

நேரம் ஆயிற்று[தொகு]

அருளப்பன் கையில் இரண்டு புத்தகங்களோடு கல்லூரியிலிருந்து நேரம் கடந்து வருகிறார். அதற்கான காரணத்தை தாத்தா வேலய்யா வினவுகிறார். தன் அப்பாவிற்காக நூலகத்திற்குச் சென்று இரண்டு நூல்களை பெற்றுக்கொண்டு வரவேண்டியிருந்ததால் நேரமாகிவிட்டது என அருளப்பன் கூறுகிறார். அந்த நூலகம் எப்படி உருவானது என தாத்தா வேலய்யா வினவுகிறார்.

புத்தகம் எப்படி வந்தது?[தொகு]

இந்த இயலில் மொழி எப்படி பிறந்தது, எழுத்து எப்படி உண்டாயிற்று, காகிதம் எப்படி உருவாயிற்று என்பன விளக்கப்பட்டு இருக்கின்றன.

நூலகம் வளர்ந்த கதை[தொகு]

மனிதர்கள் கல்லில் எழுதி, களி மண்ணில் எழுதி, ஓலைச்சுவடியில் எழுதி, கூடுகளில் வைத்து அடுக்குகளில் அடுக்கி வைத்தனர். அவ்விடம் ஏடு பார்த்து ஏட்டைப் படியெடுக்கும் இடமாக இருந்தது. பின்பு அவ்விடம் சுவடிகளைச் சேர்த்து வைக்கும் இடமாக மாறியது. காலம் மாறியது. காகிதம் வந்தது. அச்சு வந்தது. நூல்கள் அச்சாகி வெளிவந்தன. அவை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக நூலகம் பிறந்தது என்பதனை மூன்றாவது இயல் விளக்குகிறது.

நூலகம் எப்படி இயங்குகிறது?[தொகு]

விவசாயத்திற்கு வயல், விதை, உழைப்பு ஆகிய மூன்றும் தேவைப்படுவதைப் போல நூலகப் பணிக்கு நூலகம், நூல்கள், நூலகர் ஆகிய மூன்று கூறுகளும் ஒத்து வேலை செய்ய வேண்டும் என்பதனை இந்த இயல் எடுத்துரைக்கிறது.

ஒரு நூலகம் எங்கு இருக்க வேண்டும், அதில் எத்தகு நூல்கள் இருக்க வேண்டும். அதன் நூலகர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும், அதன் அன்றாட நடைமுறை எவையெவை என்பதனை இந்த இயல் விளக்குகிறது.

சென்னை நூலகப் பணி[தொகு]

1948ஆம் ஆண்டில் சென்னை மாநில நூலகச் சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டத்தின்படி எப்படி தமிழகத்தில் நூலகத்துறை கட்டமைக்கப்பட்டு இருக்கிறது, அத்துறைக்கான நிதி எவ்வாறு திரட்டப்படுகிறது என்பதனை எடுத்துரைக்கிறது இந்த இயல்.

சான்றடைவு (List of Reference)[தொகு]

  1. தில்லைநாயகம் வே, நூலகப்பணி நூலின் முன்னுரை, வள்ளுவர் பண்ணை சென்னை, 1960, பக். 3
  2. Government of Madras G.O. (Rt) No. 382 Education dated 28.5.1960
  3. கனக அரிஅரவேலனும் பிறரும் (பதி), நூலக வித்தகர் எழுபது, கோமதி பதிப்பகம் கம்பம், 1995, பக். 18
  4. கனக அரிஅரவேலனும் பிறரும் (பதி), நூலக வித்தகர் எழுபது, கோமதி பதிப்பகம் கம்பம், 1995, பக். 41
  5. தில்லைநாயகம் வே, நூலகப்பணி நூலின் முன்னுரை, வள்ளுவர் பண்ணை சென்னை, 1960, பக். 5

வெளி இணைப்பு[தொகு]

நூலகப்பணி என்னும் இந்நூலின் எண்மப்படி (Digital copy)

"https://ta.wikipedia.org/w/index.php?title=நூலகப்பணி_(நூல்)&oldid=3711188" இருந்து மீள்விக்கப்பட்டது