நுனோ சா புன்சோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நுனோ சா புன்சோ ( Nuno sa punso ) ("மேட்டின் முதியவர்"), அல்லது வெறுமனே நுனோ ("வயதானவர்" அல்லது "தாத்தா பாட்டி" "மூதாதையர்"), என்பது பிலிப்பீன்சு புராணங்களில் கூறப்படும் ஒரு குள்ளமான இயற்கையான ஆவி ஆகும். இது ஒரு எறும்பு அல்லது கரையான் மேட்டில் வாழ்வதாக நம்பப்படுகிறது. எனவே அதன் பெயர், 'எறும்புப் புற்றில் வாழும் மூதாதையர்/தாத்தா பாட்டி' என வந்தது.

விளக்கம்[தொகு]

நுனோ என்பது முன்னோர்களின் ஆவிகள் என நம்பப்படுகிறது. ஒரு மரத்தை வெட்டும்போது, அல்லது ஒரு நிலத்தை பணபடுத்தும்போது, அல்லது வேறு பல சந்தர்ப்பங்களில், மரமோ அல்லது நிலமோ கோபப்படுவதால் வரும் துரதிர்ஷ்டத்தைத் தவிர்ப்பதற்காக நுனோவிடம் அனுமதி கேட்கப்படுகிறது. நுனோ நீண்ட தாடியுடன் காணப்படும் குள்ளமான முதியவர் என்று விவரிக்கப்படுகிறது. ஆனால் பிலிப்பீன்சு நாட்டுப்புறக் கதைகளில் தோன்றும் துவெண்டே என்ற ஆவியிலிருந்து வேறுபட்டது. துவெண்டே ஒரு குறும்புத்தனமான ஆவியாகும். அது குழந்தைகளிடம் தன்னை வெளிபடுத்திக் கொள்கிறது.

அதே நேரத்தில் நுனோ எளிதில் கோபமடைகிறது. அது தனது மேட்டு நிலத்தை சேதப்படுத்துபவர்களுக்கு அல்லது தொந்தரவு செய்பவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். மேலும் பழிவாங்கும். எடுத்துக்காட்டாக, தனது மேட்டு நிலத்தை உதைத்த ஒருவரின் காலில் வீக்கம் ஏற்படுத்துவதன் மூலம் அது பழிவாங்குகிறது. பெரிய பாறைகள், மரங்கள், ஆற்றங்கரைகள், குகைகள் அல்லது கொல்லைப்புறம் போன்ற இடங்களில் நுனோ சா புன்சோ வசிப்பதாகவும் நம்பப்படுகிறது.

மந்திர திறன்கள்[தொகு]

அத்துமீறி நுழைபவர்களை சபிக்கும் திறன் நுனோக்களுக்கு உண்டு. [1] அதனுடைய சாபம் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கலாம்:

  • உடலின் எந்தப் பகுதியிலும் வீக்கம் அல்லது வலி
  • இரத்த வாந்தி
  • சிறுநீர் கருப்பாக பிரிவது
  • முதுகில் அதிகப்படியான முடி வளர்ச்சி

ஒரு நுனோ ஒரு நபரை வெற்றிகரமாக சபிக்க, அத்துமீறி நுழைபவர் நுனோவுக்கு அருகாமையில் இருக்க வேண்டும். அத்துமீறி நுழைபவர் அதனுடைய எல்லைக்குள் இருந்தால், அது அத்துமீறுபவரின் உடலின் எந்தப் பகுதியிலும் எச்சிலைத் துப்பும். வயிற்று வலி, பிறப்புறுப்பு வீக்கம் (மேட்டு நிலத்தில் சிறுநீர் கழித்த பிறகு) அல்லது வீங்கிய பாதங்கள் (மேட்டை உதைத்த பிறகு) போன்ற போன்றவற்றை அத்துமீறுபவர் அனுபவிப்பார்.

நுனோவின் சாபங்களை எதிர்கொள்வது[தொகு]

நவீன மருத்துவத்தால் ஒரு குறிப்பிட்ட நோயைக் குணப்படுத்த முடியாவிட்டால், அந்த நோய் நுனோவின் சாபம் காரணமாக இருக்கலாம் என்பது பிலிப்பீன்சில்ல் உள்ள பொதுவான நம்பிக்கை.


நுனோவின் சாபத்திலிருந்து குணமடைய, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் நுனோவிற்கு பழங்கள் அல்லது பிற உணவு, பானம் அல்லது பொருள் போன்றவற்றை வழங்குவார்கள். இதற்கு பிறகும் பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், நுனோவிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பைக் கேட்பது அவசியமாக இருக்கலாம். இது ஒரு தீய ஆவியால் பாதிக்கப்பட்டவரை நிரந்தரமாக பேய் பிடித்தல் எனும் நடவடிக்கையிலிருந்து தடுக்கும் ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கை என்று நம்பப்படுகிறது. இவ்வாறு செய்யாமல் போனால் பின்னர் பைத்தியக்காரத்தனத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் நம்புகின்றனர்..

தற்காப்பு நடவடிக்கைகள்[தொகு]

நுனோ சா புன்சோவின் கோபத்தைத் தவிர்க்க, குழந்தைகள் மதியமும் மற்றும் மதியம் மூன்று மணி வரையிலும் வெளியில் விளையாட வேண்டாம் என்று அறுவுறுத்துவார்கள். மாலை ஆறு மணிக்குள் வீட்டிற்கு வந்துவிடுமாறு அவர்களது பெற்றோர் கேட்டுக் கொள்கின்றனர். நுனோ வசிப்பதாக நம்பப்படும் இடங்களில் சத்தம் போடுவதைத் தவிர்க்கவும் குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. "தபி தபி போ" (அதாவது "தயவுசெய்து பக்கத்தில் இருங்கள்" அல்லது "தயவுசெய்து ஒதுங்கவும்", அதாவது, நுனோவை ஒதுங்கி நிற்கச் சொல்லுங்கள்), அல்லது "மேட்டின் பெரியவரே தயவுசெய்து என்னைக் கடந்து செல்ல அனுமதியுங்கள்" அல்லது "நான் உங்கள் பிரதேசத்தின் வழியாகச் செல்லும்போது எந்தத் தீங்கும் எனக்கில்லை என்று சொல்கிறேன்" என்பர்.

அவமரியாதை[தொகு]

ஆவி நம்பிக்கை கொண்ட பெரும்பாலான மக்கள் நுனோவை மதித்து, மனிதர்களுக்கும் நுனோவிற்கும் இடையே அமைதியான சகவாழ்வை உறுதிப்படுத்தும் பல எழுதப்படாத விதிகளுக்குக் கட்டுப்பட்டாலும், மற்றவர்கள் பல்வேறு காரணங்களுக்காக, அவர்களை அவமரியாதை செய்யவோ அல்லது புண்படுத்தவோ தீவிரமாக முயல்வார்கள். ஒரு மரியாதையற்ற நபர், உயரமான புல்வெளிப் பகுதிகளில், நுனோ வசிப்பதாக நம்பப்படும் இடங்களில் வேண்டுமென்றே மிதிப்பார் அல்லது மேட்டில் வசிப்பவர் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக சந்தேகிக்கப்படும் நுனோ எறும்புகளின் மீது வேண்டுமென்றே சிறுநீர் கழிப்பார் .

மேற்கோள்கள்[தொகு]

  1. Martinez, Napoleon. "The Curse of the Nuno Sa Punso | USC Digital Folklore Archives" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுனோ_சா_புன்சோ&oldid=3881550" இலிருந்து மீள்விக்கப்பட்டது