நிலையான வைப்புத் தொகை (இந்தியா)
நிலையான வைப்பு தொகை (Fixed deposit) என்பது வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களால் குறிப்பிட்ட முதிர்வு தேதி வரை பராமரிக்கப்படும் ஒரு காலவரையறை வைப்புக் கணக்கு ஆகும். இது வழக்கமான சேமிப்புக் கணக்கை விட முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதில் முதலீடு செய்வதற்கு தனி கணக்கை திறந்தோ, அல்லது முதிர்வு நாள் குறிப்பிட்டு ஒரு சேமிப்பு கணக்கை பயன்படுத்தவோ வேண்டும். இதனை இந்தியாவில் பரவலாக நிலையான வைப்புத் தொகை என்றும், அமேரிக்காவில் கால வைப்பு அல்லது நேர வைப்பு போன்ற சொற்களாலும் குறிப்பிடுகின்றனர். சில வேளைகளில் இந்தியாவிலும் இச்சொற்களை நிலையான வைப்பு தொகையை குறிப்பிட பயன்படுத்துவதுண்டு. ஐக்கிய ராஜ்யத்தில் இதற்கு பத்திரம் (bond) என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர். குறிப்பிட்ட காலவரையறையுடைய வைப்புத் தொகை அல்லது கால வைப்புத் தொகை என்பது நிலையான வைப்பாகவோ, தொடர் வைப்பாகவோ இருக்கக் கூடும். இந்த கட்டுரை நிலையான வைப்பு தொகையை முதன்மையாக கொண்டது ஆகும்.
நிச்சயமற்ற பொருளாதார சூழ்நிலைகளின் போது வங்கிகள் குறைந்த வட்டி விகிதங்களை வழங்கக்கூடும். ஒரு நிலையான வைப்பு தொகையின் முதிர்வு காலம் 7 நாட்கள் முதல் பத்து ஆண்டுகள் வரை இருக்கக்கூடும்.
செயல்பாடு
[தொகு]அதிக வட்டி தரும் நிலையான வைப்புத் தொகைகள் அல்லது கால வைப்புத் தொகைகள் வங்கிகளால் வழங்கப்படுகின்றன. கால வைப்புத் தொகைகளின் மிகவும் பிரபலமான வடிவம் நிலையான வைப்புத்தொகையாகும். குறைந்த பணப்புழக்கத்தை ஈடுகட்ட, சேமிப்பு கணக்குகளை விட நிலையான வைப்புத் தொகைகள் அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. பொதுவாக, நிலையான வைப்புத் தொகைகளின் முதிர்வு காலம் அதிகமிருப்பின் வட்டிவிகிதமும் அதிகமாக இருக்கும். ஆனால், ஒரு நாட்டின் மத்திய வங்கி இதர வங்கிகளுக்கு கடனளிக்கும் வட்டிவிகிதம் (மறு கொள்முதல் ஒப்பந்த வட்டி விகிதம்) வருங்காலத்தில் குறையும் வாய்ப்பு இருக்குமேயானால், அதிக கால வைப்புகளுக்கான வட்டிவிகிதம் கூட குறைவானதாக இருக்கக்கூடும்[1].
நிலையான வைப்பு தொகைக்கு வட்டி முக்கியமாக இரு வகைகளில் வழங்கப்படுகின்றன. ஒன்று, முதலீடு செய்யப்பட்ட தேதியில் இருந்து மாதம் ஒரு முறை, அல்லது கால் ஆண்டுக்கு ஒரு முறை சாதாரண முறையில் குறிப்பிட்ட வட்டி கணக்கிடப்பட்டு வைப்பாளரது சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படுகிறது, அல்லது காசோலையாக அனுப்பப்படுகிறது. மற்றொன்று, வைப்பாளரின் விருப்பத்திர்க்கேற்ப வட்டி மறுமுதலீடு செய்யப்படுகின்றது. இம்முறையில் கூட்டுவட்டி கணக்கிடப்பட்டு வைப்பு முதிர்வடையும் போது அசலுடன் வட்டியையும் சேர்த்து வைப்பாளருக்கு வழங்கப்படுகிறது. முதிய குடிமக்களுக்கு வட்டி விகிதத்தில் தனி சலுகை அளிக்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு வைப்பும் தனித்தனி ஒப்பந்தமாக கருதப்படுவதால், வங்கிகள் ஒவ்வொரு நிலையான வைப்பு தொகைக்கும் தனி ரசீதை வழங்குகின்றன. இந்த ரசீது நிலையான வைப்பு ரசீது (FDR) என அழைக்கப்படுகிறது; இது புதுப்பித்தல் அல்லது பணமாக்குதலின் போது வங்கியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்[2].
பல வங்கிகள் நிலையான வைப்புத் தொகையை தானாக புதுப்பிக்கும் வசதியை வழங்குகின்றன. வைப்பு முதிர்வடையும் போது வாடிக்கையாளர்களுக்கு புது அறிவுறுத்தல்கள் ஏதெனுமிருப்பின் அவற்றை வங்கிக்கு தெரியப்படுத்தும் வாய்ப்பு அளிக்கப்படுகின்றது. அவ்வாறு அறிவுறுத்தல்கள் இல்லாத பட்சத்தில் முதிர்வுத் தேதியைத் தொடர்ந்து அத்தகைய வைப்புத் தொகைகள் புதுப்பிக்கப்படும் தேதியில் நிலவும் வட்டி விகிதத்தில் அசல் வைப்புத்தொகையின் அதே காலத்திற்கு வைப்பு புதுப்பிக்கப்படும்.
2021 சூலை மாதம் வெளியிடப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி ஒரு நிலையான வைப்பு முதிர்ச்சியடைந்து, ஆனால் அது உரியவருக்கு செலுத்தப்படாமலும், வங்கியில் உரிமை கோரப்படாமலும் இருந்தால், உரிமை கோரப்படாத தொகையானது சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதம், அல்லது முதிர்ச்சியடைந்த நிலையான வைப்பு மீதான ஒப்பந்த வட்டி விகிதம், இவை இரண்டில் எது குறைவோ, அதை ஈர்க்கும்[3].
முதிர்வுக்கு முன்பு திரும்பப் பெறுதல்
[தொகு]கால வைப்புத் தொகை என்பது வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே ஒரு திட்டவட்டமான காலத்திற்கான ஒப்பந்தமாகும், மேலும் அதை வங்கியின் விருப்பப்படி முன்கூட்டியே செலுத்த முடியாது. வாடிக்கையாளரின் வேண்டுகோளின்படி கால வைப்புத்தொகையை முன்கூட்டியே செலுத்தலாம்.[4].
வங்கிகள் பொதுவாக தனிநபர்கள் மற்றும் பிரிக்கப்படாத இந்து குடும்பங்களின் (HUF) கால வைப்புகளை (வைப்புத் தொகை எவ்வளவு இருந்தாலும்) முன்கூட்டியே திரும்பப் பெறுவதை மறுக்கக்கூடாது. எவ்வாறாயினும், தனிநபர்கள் மற்றும் பிரிக்கப்படாத இந்து குடும்பங்கள் தவிர பிற வைப்பாளர்களின் பெரிய வைப்புகளை முதிற்ச்சிக்கு முன்னரே திரும்பப் பெறுவதை வங்கிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் அனுமதிக்காது. முதிற்ச்சிக்கு முன்னரே தொகை திரும்பப்பெறுவதை மறுக்கும் கொள்கையை வங்கிகள் அத்தகைய வைப்பாளர்களுக்கு வைப்புகளை ஏற்றுக்கொள்ளும் போதே தெரிவிக்க வேண்டும்.[5].
கால வைப்புத் தொகையை முதிர்ச்சிக்கு முன் திரும்பப் பெறுவதற்கான வட்டி விகிதங்களைத் தாங்களே தீர்மானிக்க வங்கிகளுக்கு சுதந்திரம் உள்ளது[6]. இது பொதுவாக 0.5% முதல் 1% வரை இருக்கும்.
26 அக்டோபர் 2023 தேதியிட்ட சுற்றறிக்கை ஒன்றின் வாயிலாக இந்திய ரிசர்வ் வங்கி நிலையான வைப்பு கணக்குகள் தொடர்பான சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.[7] அவை பின்வருமாறு: -
- நிலையான வைப்புக் கணக்குகளில் முன்கூட்டியே திரும்பப்பெறுதல் (Premature Withdrawal) தொகையை ₹15 லட்சத்தில் இருந்து ₹1 கோடியாக ரிசர்வ் வங்கி மாற்றியமைத்துள்ளது. காலவைப்பை பொறுத்தவரை வைப்புத் தொகையின் அளவு மற்றும் கால அளவு ஆகியவற்றின் அடிப்படையிலேயே வட்டிவிகிதங்களை வங்கிகள் வழங்கி வருகின்றன.
- உள்நாட்டு கால வைப்புகளுக்கு (Domestic Term Deposits) அல்லது நிலையான வைப்புகளுக்கு (Fixed deposits) முன்கூட்டியே திரும்பப்பெறும் விருப்பத்தேர்வு வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படாமல் இருந்து வந்தது. ஆனால் கால வைப்புகளில் ₹15 லட்சத்துக்கும் குறைவான தொகையை வைப்பு செய்யும் நபர்களுக்கு முன்கூட்டியே திரும்பப்பெறும் விருப்பத்தேர்வு வழங்கப்பட்டு வந்தது. இந்த வகையான வைப்பு காலெபில் (Callable deposits) என்று வங்கி மொழியில் அழைக்கப்படுகின்றது.
- முன்கூட்டியே திரும்பப்பெற முடியாத வகை கால வைப்பு அல்லது நிலையான வைப்பு நான்-காலெபில் (non-callable deposits) என்றும் அழைக்கப்படுகின்றது. வைப்புத் தொகை ₹15 லட்சத்துக்கு மேல் இந்த வகை என்றிருந்ததை புதிய சுற்றறிக்கையின் வாயிலாக ₹1 கோடியாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
- வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கால வைப்புகள் மற்றும் நிலையான வைப்புகளுக்கு (NRE/NRO) முன்கூட்டியே திரும்பப்பெறும் விருப்பத்தேர்வு வழங்கும் சுதந்திரம் வங்கிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் வைப்புத் தொகை ₹1 கோடிக்கும் குறைவாக இருக்குமானால் அத்தகைய வைப்பாளர்களுக்கும் முன்கூட்டியே திரும்பப்பெறும் சலுகை அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு
[தொகு]இந்தியாவில் வங்கி முதலீடுகள் வைப்புக் காப்பீட்டு மற்றும் கடன் உத்தரவாத கழகத்தின் (DICGC) மூலம் பாதுகாக்கப்படுகின்றன. ஒரு வங்கியில் ஒரு காப்பாளருக்கு அனைத்து வகை கணக்குகளுக்கும் உள்ளிட்டு ₹5,00,000 (சுமார் $6,000) வரை கழகத்தால் உத்தரவாதத் தொகையாக வழங்கப்படுகிறது[8].
நன்மைகள்
[தொகு]- சேமிப்புக் கணக்கில் பணத்தை வைப்பதை விட நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி கிடைக்கும்.
- வைப்பாளர்கள் வைப்புத் தொகையின் மீது அதன் மதிப்பில் 90 சதவீதம் வரை வட்டி சலுகைகளுடன் கடன்களைப் பெறலாம்.
- முதலீடு செய்யும் தொகைக்கு ஓரளவு வரை வைப்புக் காப்பீட்டு மற்றும் கடன் உத்தரவாத கழகத்தின் (DICGC) பாதுகாப்பு உத்தரவாதம் உள்ளது.
- இந்தியாவில் வசிப்பவர்கள் குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்கு இந்தக் கணக்குகளைத் திறக்கலாம்.
வரிவிதிப்பு
[தொகு]இந்தியாவில், எந்தவொரு வங்கியிலும் ஒரு வைப்பாளருக்கு ஒரு நிதியாண்டில் வட்டி அந்தந்த நிதியாண்டுக்கு பொருந்தக்கூடிய நிதிச் சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள படி குறிப்பிட்ட தொகைக்கு மேல் இருக்குமானால் வங்கிகளால் நிலையான வைப்புத் தொகை வட்டியின் மூலத்தில் வரி கழிக்கப்படும்.
மத்திய வங்கி கொள்கைகளின் தாக்கம்
[தொகு]மத்திய வங்கிகள் பொருளாதார ஏற்ற இறக்கங்களை நிர்வகிப்பதற்கும் விலைவாசியின் நிலையான தன்மையை சீரமைப்பதற்கும் பணவியல் கொள்கையைப் பயன்படுத்துகின்றன. இதனால் பணவீக்கம் குறைவாகவும் நிலையானதாகவும் இருக்கிறது. பல மேம்பட்ட பொருளாதாரங்களில் உள்ள மத்திய வங்கிகள் வெளிப்படையான பணவீக்க இலக்குகளை அமைக்கின்றன. பல வளரும் நாடுகளும் பணவீக்க இலக்கை நோக்கி நகர்கின்றன.[9] இந்தியாவின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியும் அவ்வப்போது நாட்டின் பொருளாதார நிலைமைக்கு ஏற்ப வகுக்கும் கொள்கைகள் வங்கித்துறையில் ஏற்படுத்தும் தாக்கம் நிலையான வைப்பு தொகை விதிகளை பாதிக்கக்கூடும்.
மேலும் பார்க்கவும்
[தொகு]- காலவைப்புக் கணக்குகள்
- வைப்புச் சான்றிதழ்கள்
- தொடர் வைப்புக் கணக்கு
- சேமிப்புக் கணக்கு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஆர்.பி.மகேசுவரி (1997). இந்திய பள்ளி சான்றிதழுக்கான ஒரு முழுமையான வணிகவியல் படிப்பு. பீதாம்பர் பதிப்பகம். p. 102. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-209-0643-3.
- ↑ முரளிதரன். நவீன வங்கியியல்: கோட்பாடு மற்றும் நடைமுறை. பிஎச்ஐ கற்றல் பிரைவேட். லிமிடெட். p. 274. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-203-3655-1.
- ↑ இந்திய ரிசர்வ் வங்கியின் நிலையான வைப்பு விதிகள்: "காலாவதியான கால டெபாசிட்டுகளுக்கான வட்டிக்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி மாற்றுகிறது". குயின்ட் பத்திரிக்கை. 2021-07-05. பார்க்கப்பட்ட நாள் 2023-10-16.
- ↑ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் "வங்கிகள் தாங்களாகவே கால வைப்புத் தொகையை முன்கூட்டியே திருப்பிச் செலுத்த முடியுமா?". இந்திய ரிசர்வ் வங்கி. 2005-09-15. பார்க்கப்பட்ட நாள் 2023-10-16.
- ↑ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் "கால வைப்புகளை முதிர்ச்சிக்கு முன் திரும்பப் பெறுவதை வங்கிகள் மறுக்க முடியுமா?". இந்திய ரிசர்வ் வங்கி. 2005-09-15. பார்க்கப்பட்ட நாள் 2023-10-16.
- ↑ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் "வங்கிகளால் முதிர்ச்சிக்கு முன் கால வைப்புத் தொகையை திரும்பப்பெறுவதற்கு அபராதம் விதிக்க முடியுமா?". இந்திய ரிசர்வ் வங்கி. 2005-09-15. பார்க்கப்பட்ட நாள் 2023-10-16.
- ↑ ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை"ஃபிக்சட் டெபாசிட் கணக்குகளில் அதிரடி மாற்றம்.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு". NEWS 18 தமிழ். 2023-11-11. பார்க்கப்பட்ட நாள் 2023-11-13.
- ↑ "DICGC - நிலையான வைப்பு தொகைக்கு ஒரு வழிகாட்டி". பார்க்கப்பட்ட நாள் 16 அக்டோபர் 2022.
- ↑ "பணவியல் கொள்கை மற்றும் மத்திய வங்கி". சர்வதேச நாணய நிதியம். பார்க்கப்பட்ட நாள் 2023-10-17.
வெளி இணைப்புகள்
[தொகு]வைப்புக் காப்பீட்டு மற்றும் கடன் உத்தரவாத கழகத்தின் (DICGC) அதிகாரப்பூர்வ இணையதளம்