நிலக்கரி அகழ்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய அமெரிக்காவின் வியோமிங் என்னுமிடத்தில் மேற்பரப்பில் நிலக்கரி அகழப்படுகிறது.
இந்தியாவின் பீகாரில் உள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கம்

நிலக்கரி அகழ்தல் என்பது, நிலத்தில் இருந்து நிலக்கரியை அகழ்ந்து எடுப்பது ஆகும். எரியும் போது கூடிய ஆற்றலை வெளிவிடக்கூடிய நிலக்கரி 1880 ஆம் ஆண்டுகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்காகப் பரவலாகப் பயன்பட்டு வருகிறது. அத்துடன், எஃகு, சீமெந்து போன்றவற்றின் உற்பத்தியிலும் நிலக்கரி ஒரு முக்கிய எரிபொருளாகப் பயன்படுகின்றது. இதனால் நிலக்கரி அகழ்தல் பல நாடுகளில் ஒரு முக்கியமான தொழில் துறையாக உள்ளது.

வரலாறு[தொகு]

கைத்தொழிற் புரட்சி 18 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் தொடங்கியது. இது பின்னர் ஐரோப்பாக் கண்டப் பகுதிக்கும், வட அமெரிக்காவுக்கும் பரவியது. இந்தப் புரட்சி அதன் அடிப்படையாக விளங்கிய நீராவி எந்திரங்களை இயக்குவதற்குத் தேவையான நிலக்கரி கிடைப்பதிலேயே தங்கியிருந்தது. நீராவி எந்திரங்களால் இயங்கிய தொடர்வண்டிச் சேவை, நீராவிக் கப்பல்கள் ஆகியவற்றின் அறிமுகத்துடன் பன்னாட்டு வணிகம் பல மடங்காகியது. இதனால் நிலக்கரியின் தேவையும் கூடியது. 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய புதிய நிலக்கரிச் சுரங்கங்களில் சிறுவர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள், ஆபத்தான வேலை நிலைமைகளில் நீண்ட நேரம் வேலை செய்தனர்.[1]

சவுத் வேல்சு நிலக்கரிப்புலத்தின் மையப் பகுதியில் காணப்படும் சவுத் வேல்சு பள்ளத்தாக்கில் உள்ள டவர் நிலக்கரிச் சுரங்கமே தொடர்ச்சியாக நீண்டகாலம் இயங்கிய ஆழ் நிலக்கரிச் சுரங்கம் ஆகும். 1805 ஆம் ஆண்டில் தொடங்கிய இந்தச் சுரங்கம், 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மூடப்பட இருந்தது. அதைத் தவிர்ப்பதற்காக, அதன் தொழிலாளர்கள் அதனை விலை கொடுத்து வாங்கினர். எனினும், 200 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ச்சியாக இயங்கி வந்த டவர் நிலக்கரிச் சுரங்கம் 2008 ஆம் ஆண்டு சனவரி 25 ஆம் தேதி இறுதியாக மூடப்பட்டது. அமெரிக்காவில் 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலக்கரி அகழப்பட்டது. வணிக அடிப்படையிலான நிலக்கரி அகழ்வு 1970 ஆம் ஆண்டு வாக்கில் வெர்சீனியாவின் மிட்லோத்தியனில் தொடங்கியது.[2]

1880களில் நிலக்கரியை வெட்டியெடுக்கும் எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதற்கு முன்னர், அலவாங்கு, மண்வெட்டி போன்ற கருவிகளே நிலக்கரியை வெட்டி எடுப்பதற்குப் பயன்பட்டன. 1912 ஆம் ஆண்டில் மேற்பரப்பு அகழ்வு வேலைகளை, அதற்கெனவே உருவாக்கப்பட்ட நீராவியினால் இயங்கிய இயந்திரங்கள் செய்தன.

அகழும் முறைகள்[தொகு]

கென்டக்கியின், கிளே கவுன்டியில் உள்ள நிலக்கரி கழுவும் எந்திரத் தொகுதி.

மேற்பரப்பில் இருந்து நிலக்கரிப் படுகையின் ஆழம், அதன் தரம், வேறு நிலவியல், சூழலியல் காரணிகள் என்பவற்றைப் பொறுத்தே நிலக்கரி அகழ்வதற்கான சிக்கனமான முறை எது என்பதைத் தீர்மானிக்க முடியும். அகழ்வு மேற்பரப்பிலா அல்லது நிலத்துக்குக் கீழா என்பதைப் பொறுத்து அகழ்வு வழிமுறைகள் வேறுபடுகின்றன. மேற்பரப்பு அல்லது நிலத்தின் கீழிருந்து அகழப்படும் நிலக்கரிகளில் பெரும்பாலானவற்றைக் கழுவவேண்டியிருக்கிறது.

நிலக்கரி அகழ்தலின் தொழில்நுட்பச் சாத்தியப்பாடு, பொருளாதாரச் சாத்தியப்பாடு என்பன பல்வேறு காரணிகளைக் கவனத்தில் எடுத்து மதிப்பீடு செய்யப்படுகின்றன. அவற்றுள், பகுதியின் நிலவியல் நிலைமை; மேற்படிவின் இயல்பு; நிலக்கரிப் படுகையின் தொடர்ச்சி, தடிப்பு, அமைப்பு, தரம், ஆழம் என்பன; படிவுகளின் மேலும், கீழும் உள்ள பொருட்களின் பலம்; உயரம், சரிவு என்பவற்றை உள்ளடக்கிய இடவமைப்பு; தட்பவெப்பம்; நில உரிமை; வடிகால் நிலைமை; நிலத்தடி நீர் நிலைமை; தேவையான பொருட்களும், தொழிலாளர்களும் கிடைக்கக்கூடிய தன்மை; தேவையான அளவு, தரம், கொண்டுசெல்லவேண்டிய இடம் என்பவை தொடர்பான வாங்குபவர்களின் தேவைகள்; தேவைப்படும் முதலீடு என்பனவாகும்.

நிலக்கரி அகழ்தலில், மேற்பரப்பு அகழ்வு, ஆழமான நிலக்கீழ் அகழ்வு என்பனவே அடிப்படையான இரண்டு முறைகள் ஆகும். நிலக்கரிப் படுகையின் ஆழம், மேற்படிவின் அடர்த்தி, படுகையின் தடிப்பு என்பவைற்றை அடிப்படையாகக் கொண்டே இவற்றுள் ஒரு முறையைத் தெரிவு செய்கின்றனர். நில மேற்பரப்பில் இருந்து ஏறத்தாழ 50 மீட்டர் (180 அடிகள்) ஆழம் வரையில் உள்ள படுகைகள் ஒப்பீட்டளவில் மேற்பரப்புக்கு அண்மையில் உள்ள படுகைகளாகக் கொள்ளப்படுகின்றன. இவ்வாறான இடங்களில் மேற்பரப்பு அகழ்வு முறை பயன்படுகிறது. படுகைகளின் ஆழம் 50 - 100 மீட்டர்களாக (180 - 300 அடிகள்) இருக்கும்போது நிலக்கீழ் சுரங்க முறையே பயன்படுகிறது எனினும், சில வேளைகளில் மேற்பரப்பு அகழ்வுத் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்துவது உண்டு. எடுத்துக்காட்டாக, மேற்கு ஐக்கிய அமெரிக்காவில் உள்ள சில 60 மீட்டர் (200 அடிகள்) ஆழத்துக்கும் கீழுள்ள படுகைகளில் திறந்த குழி முறையைப் பயன்படுத்துகின்றனர். நிலக்கரிப் படிவின் தடிப்பு 20-30 மீட்டர் (60-90 அடிகள்) அளவே இருப்பது இதற்குக் காரணம் ஆகும். 100 மீட்டருக்கும் கூடிய ஆழத்தில் இருக்கும் படுகைகளில் நிலக்கீழ் சுரங்க முறையே பயன்படுகிறது.[3] எனினும் சில விதி விலக்குகள் இல்லாமல் இல்லை.

குறிப்புக்கள்[தொகு]

  1. "19th Century Mining Disaster". The National Archives.
  2. Historical Overview Of The Midlothian Coal Mining Company Tract, Chesterfield County, Virginia பரணிடப்பட்டது 2007-04-19 at the வந்தவழி இயந்திரம், Martha W. McCartney, December, 1989
  3. Christman, R.C., J. Haslbeck, B. Sedlik, W. Murray, and W. Wilson. 1980. Activities, effects and impacts of the coal fuel cycle for a 1,000-MWe electric power generating plant. Washington, DC: U.S. Nuclear Regulatory Commission.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

  • நிலக்கரி அளவை
  • சுரங்கத் தீ
  • சுரங்க விபத்து
  • உலக நிலக்கரி நிறுவனம்

வெளியிணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Coal mining
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலக்கரி_அகழ்தல்&oldid=3349686" இலிருந்து மீள்விக்கப்பட்டது