நியூகினி முதலை
நியூகினி முதலை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முண்ணாணி |
துணைத்தொகுதி: | முதுகெலும்பிகள் |
வகுப்பு: | ஊர்வன |
வரிசை: | முதலை வரிசை |
குடும்பம்: | முதலைக் குடும்பம் |
பேரினம்: | Crocodylus |
இனம்: | C. novaeguineae |
இருசொற் பெயரீடு | |
Crocodylus novaeguineae (சிமித்து, 1928) | |
![]() |
நியூகினி முதலை (Crocodylus novaeguineae) என்பது நியூகினி தீவில் காணப்படும் சிறிய முதலையினம் ஒன்றாகும்.
தோற்றம்[தொகு]
நியூகினி முதலைகளில் ஆண் இனம் கிட்டத்தட்ட 3.5 மீற்றர் வளரக்கூடியதாக உள்ள அதே வேளை, இவற்றின் பெண் இனம் கிட்டத்தட்ட 2.7 மீற்றர் வரை வளரும். சாம்பல் கலந்த கபில நிறத்திலான உடலைக் கொண்ட இதன் வாலில் கடுங்கபிலம் முதல் கரு நிறம் வரையான அடையாளங்கள் காணப்படும். இளமைக் காலத்தில் ஒடுங்கியதாகக் காணப்படும் இவற்றின் மூஞ்சு, இவை வளர்ச்சியடையும் போது நன்கு அகன்று வளர்ந்துவிடும். இது தோற்றத்தில் பிலிப்பீன் முதலை (C. mindorensis) மற்றும் சியாமிய முதலை (C. siamensis) என்பவற்றைக் கிட்டத்தட்ட ஒத்திருக்கும். பிலிப்பீன் முதலை ஒரு காலத்தில் இந்த நியூகினி முதலையின் துணையினம் (C. novaeguineae mindorensis) ஒன்றெனக் கருதப்பட்டபோதும் பின்னர் அது தனியினமாக வரையறுக்கப்பட்டது.
வாழிடம்[தொகு]
பொதுவாக இரவில் உலாவும் இந்த நியூகினி முதலைகள் நியூகினித் தீவின் உட்பகுதியில் உள்ள சதுப்பு நிலங்களிலும் ஏரிகளிலுமே காணப்படுகின்றன. இவை உவர்நீரைத் தாங்கிக்கொள்ளக்கூடியன வெனினும் உவர்ப்பான கடனீரேரிகளில் மிக அரிதாகவே காணப்படுகின்றன. அவ்வாறே, இவை உவர்நீர் முதலைகள் இருக்குமிடங்களில் ஒருபோதும் காணப்படுவதில்லை. நியூகினி முதலைகளின் இரு பெரிய தொகுதிகளின் வாழிடங்கள் பெரிய மலைத்தொடர் ஒன்றினால் வேறாக்கப்பட்டிருக்கின்றன. அத்தொகுதிகளிடையே நடத்தப்பட்ட மரபணுச் சோதனைகளின்படி மேற்படி இரு தொகுதிகளும் இரு வேறு இனங்களாகக் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்[தொகு]
- "நியூகினி முதலை". முதலை வரிசை. 2006-10-15 அன்று பார்க்கப்பட்டது.