பிலிப்பீன் முதலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிலிப்பீன் முதலை
Croc.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முண்ணாணி
துணைத்தொகுதி: முதுகெலும்பிகள்
வகுப்பு: ஊர்வன
வரிசை: முதலை வரிசை
குடும்பம்: முதலைக் குடும்பம்
பேரினம்: Crocodylus
இனம்: C. mindorensis
இருசொற் பெயரீடு
Crocodylus mindorensis
சிமித்து, 1935
Distribution crocodylus mindorensis.PNG
பிலிப்பீன் முதலையின் பரவல் நீல நிறத்தில்

பிலிப்பீன் முதலை (Crocodylus mindorensis) என்பது பிலிப்பீன்சு நாட்டில் காணப்படும் முதலை இனமொன்றாகும்.[1] இவ்வினம் மிண்டோரோ முதலை என்றும் பிலிப்பீனிய நன்னீர் முதலை என்றும் அழைக்கப்படுவதுண்டு. பிலிப்பீன்சு நாட்டில் முதலையொன்றைக் கொல்வது வன்மையாகத் தடுக்கப்பட்டுள்ளபோதிலும் வேட்டையாடுதல் மற்றும் வெடிமருந்து மீன்பிடிமுறை[2] போன்ற பொருத்தமற்ற மீன்பிடி முறைகள்[3] என்பன காரணமாக இவற்றின் இருப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. இவற்றைப் பாதுகாப்பதற்கான செயன்முறைகளை ஒல்லாந்து/பிலிப்பீனிய நிறுவனமான மபுவாயா அமையம்[4] எனும் முதலைப் பாதுகாப்புச் சங்கமும் மிண்டோரோத் தீவிலுள்ள ஹெர்ப்பாவேர்ல்ட் விலங்கியல் நிறுவனமும் மேற்கொள்கின்றன.

உடற்கூறு[தொகு]

பிலிப்பீன் முதலையானது நன்னீர் முதலையினங்களில் ஓரளவு சிறியதும் பிலிப்பீன்சு நாட்டுக்குத் தனிச் சிறப்பானதுமான விலங்கினமாகும். மூன்று மீட்டர் நீளத்துக்கு மேல் வளராத இவ்வினத்தின் மூஞ்சுப் பகுதி ஏனைய முதலையினங்களுடன் ஒப்பிடும்போது அகலம் கூடியதாக இருப்பதுடன், இதன் முதுகில் தடித்த முள் போன்ற செதில்கள் காணப்படும். இவ்வினத்தின் பெண் விலங்குகள் இவற்றின் ஆண் விலங்குகளை விட ஓரளவு சிறியவையாகும். பொன்னிறம் கலந்த கபில (பழுப்பு) நிறத்தில் காணப்படும் இந்த பிலிப்பீன் முதலையினம் வளர்ச்சியடையும்போது இவற்றின் நிறம் மேலும் கடுமை கூடிவிடும் (அடர்நிறமாகிவிடும்).

பரவல்[தொகு]

இந்த பிலிப்பீன் முதலையினம் பிலிப்பீன்சு நாட்டின் தீவுகளில் மாத்திரமே காணப்படுகின்றன. உலகில் மிகக் கூடுதலாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் உயிரினங்களில் இவ்வினமும் ஒன்றாகும். இயலிடத்தில் தப்பி வாழும் பிலிப்பீன் முதலைகளின் எண்ணிக்கை ஒரு நூற்றுக்கும் குறைவாகவே உள்ளது.

இந்த முதலையினம் பிலிப்பீன்சு நாட்டின் சமார், ஜோலோ, நெக்ரோசு, மஸ்பாதே, புசுவாங்கா ஆகிய தீவுகளிலிருந்து முற்றாக அழிந்துவிட்டது. எனினும், இவற்றில் சில பபுயான் தீவுகளைச் சேர்ந்த வடக்கு சியெரா மாட்ரே தேசிய கானகம், சான் மரினோ, இசபெல்லா, தலுபிரி தீவு ஆகிய இடங்களிலும், லூசொன் பகுதியின் அப்ரா மாகாணத்திலும், மிண்டனாவோத் தீவின் லிகாவாசான் சதுப்பு நிலத்திலும் இன்னமும் தப்பி வாழ்கின்றன.[5].

சூழலியலும் உயிரின வரலாறும்[தொகு]

ஏனைய நன்னீர் முதலையினங்களுடன் ஒப்பிடுகையில் பிலிப்பீன் முதலைகள் ஓரளவு சிறியவையாகும். மிக அண்மைய காலம் வரை இவ்வினம் நியூகினி முதலையின் (Crocodylus novaeguinae) துணையினத்தில் ஒன்றாகக் கருதப்பட்டது.[6] முக்கியமாக, இவற்றின் வாழிடம் வெகுவாக அழிக்கப்படுவதன் காரணமாக வாழிட இழப்பு ஏற்படுவதனால் இவற்றின் தொகை பெரிதும் குறைவடையும் வரையில், லூசொன் பகுதியிலும் மிண்டனாவோத் தீவினதும் விசாயாசு தீவினதும் சில பகுதிகளிலும் வராலாற்றுக் காலம் முழுவதும் இவை வாழ்ந்துள்ளன.


பாதுகாப்பு[தொகு]

இந்த முதலையினம் ஒரு காலத்தில் பிலிப்பீன்சு நாடு முழுவதும் காணப்பட்ட போதிலும் தற்காலத்தில் இவ்வினம் மிக அருகிவிட்டது. இவ்வினத்தின் இயற்கை வரலாறு, இனச் சூழல், இதனால் பரம்பலில் இடம் பிடிக்கப்படும் உவர்நீர் முதலையுடனான தொடர்பு என்பன பற்றி மிகக் குறைவாகவே அறியப்பட்டுள்ளது. இவை எந்த அளவில் காணப்படுகின்றன என்பது பற்றி அறிவதற்காக, கூடுதலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையுள்ளது. வேகமாகப் பெருகி வரும் மக்கள்தொகையின் பயிர்த்தொழில் தேவையை நிவர்த்தி செய்வதற்காக இவற்றின் வாழிடங்களை அழிப்பதனால் இவற்றின் இருப்பு கேள்விக்குள்ளான போதிலும், இவற்றின் எண்ணிக்கை வெகுவாகக் குறைவடைவதற்கு இவை வணிகத்திற்காக வேட்டையாடப்படுவது முக்கிய காரணமாகும். இவற்றைப் பாதுகாப்பதற்காக பிலிப்பீன்சு அரசின் நடவடிக்கைகள் மிகக் குறைந்த மட்டத்திலேயே இடம்பெறும் அதேவேளை உள்ளூர்வாசிகளால் இவை அடிக்கடி கொல்லப்படுவதுண்டு. இந்நிலையை மாற்றுவதற்கு இது பற்றிய விழிப்புணர்வுச் செயற்றிட்டங்கள் தேவைப்படுகின்றன. பெரும்பாலும் பாதுகாக்கப்பட்ட பகுதியொன்றிலேயே வாழும் இவ்வினத்தின் இருப்பை இயலிடத்தில் முகாமை செய்வதற்கான திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ள போதிலும், இவற்றைப் பிடித்து, காப்பகத்தில் நீண்ட காலம் வளர்த்த பின்னர் விடுவிப்பது இப்போதைக்கு இவ்வினத்தைப் பாதுகாப்பதற்கான மிகச் சிறந்த வழியாகாக் காணப்படுகிறது. 1992 இல் ஓராயிரம் விலங்குகளே எஞ்சியிருப்பதாகக் கணக்கிடப்பட்ட இவ்வினத்தில், அதன் பின்னர் 1995 இல் வெறுமனே நூற்றுக்கும் குறைவான வளர்ந்த விலங்குகளே காணப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. (குறிப்பு: இவற்றின் குஞ்சுகள் பிழைத்து வாழும் விகிதம் மிகக் குறைவு என்பதால், குஞ்சுகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படவில்லை).

2007 இல், முதலைப் பாதுகாப்புத் தொடர்பில் பிலிப்பீன்சு நாட்டில் சிறப்பாகப் பணியாற்றும் குழுவொன்று அமைக்கப்பட்டது. பிலிப்பீன்சு முதலைப் பாதுகாப்புச் சங்கம் எனப்படும் அவ்வமைப்பும் ஹேர்ப்பாவேர்ல்ட் விலங்கியல் நிறுவனமும் இவற்றைப் பிடித்து, காப்பகத்தில் வளர்த்துப் பின்னர் விடுவிக்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துகின்றன.

வடக்கு லூசொன் பகுதியில் முன்னர் பரவிக் காணப்பட்ட பிலிப்பீன் முதலையின் (Crocodylus mindorensis) உயிருள்ள விலங்கொன்று 1999 ஆம் ஆண்டு சான் மரினோ, இசபெல்லா பகுதியில் காணப்படும் வரை, அவ்வினம் முற்றாக அழிந்துவிட்டதாகவே கருதப்பட்டது. அதனைப் பிடித்தவர்களால் 'இசபெல்லா' எனப் பெயரிடப்பட்ட அந்த முதலையானது முதலை மறுவாழ்வுக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் என்னும் அமையத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது. அங்கு பாதுகாப்பாக வளர்க்கப்பட்ட அவ்விலங்கு 2007 ஆகத்து மாதம் விடுவிக்கப்பட்டது. அப்போது அதன் நீளம் 1.6 மீட்டராகக் காணப்பட்டது.[7] மேற்படி விலங்கு நேஷனல் ஜியோக்ரஃபிக் அலைவரிசையில் Dangerous Encounters என்று தலைப்பிட்டுக் காட்டப்பட்டது.[8]

மேலும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. பிலிப்பீன்சில் மாத்திரம் - பிலிப்பீன்சின் தனிச் சிறப்பான விலங்குகள் txtmania.com.Accessed October 22, 2007.
  2. BPM_05one_Philipines_text.pdf (Application/pdf Object) bp.com. Accessed October 22, 2007.
  3. முதலை இனங்கள் - பிலிப்பீன் முதலை (Crocdylus mindorensis) flmnh.ufl.edu.Accessed October 22, 2007.
  4. Philippine Crocodile Comeback cepf.net.Accessed October 22, 2007.
  5. [1] iucncsg.org. Accessed December 5, 2010
  6. Species Accounts:cmind.htm flmnh.ufl.edu.Accessed October 22, 2007.
  7. Burgonio, TJ (2007-08-25). "‘Isabela,’ the croc, to be freed in wilds" (in English). Breaking News: Regions (Inquirer.net). http://newsinfo.inquirer.net/breakingnews/regions/view_article.php?article_id=84577. பார்த்த நாள்: 2007-09-02. 
  8. National Geographic Channel Videos - Adventure Shows, Natural History & More channel.nationalgeographic.com.Accessed October 22, 2007.

வெளித் தொடுப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிப்பீன்_முதலை&oldid=2228407" இருந்து மீள்விக்கப்பட்டது