உள்ளடக்கத்துக்குச் செல்

நிதியறிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிதியறிக்கை என்பது ஒரு நிறுவனத்தில் அல்லது அரசில் இனி வரும் ஆண்டில் அல்லது குறிப்பிட்ட காலப்பகுதியில் ஏற்பட இருக்கும் வரவு செலவுகளுக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட நோக்கங்களுடன் திட்டமிட்டுப் பணம், பொருள் முதலிவற்றைப் ஒழுங்கு நிறுத்துவதாகும் இதனை ஆங்கிலத்தில் பட்செட் (budget) என்னும் பிரான்சிய மொழிவழி பெற்றச் சொல்லால் குறிப்பர். சிறு பொருள்முதலியல் அல்லது நுண்ணியல் பொருளியல் (மைக்ரோ-எக்கனாமிக்ஃசு) துறையில் வரவு-செலவுத்திட்டம் ஒரு முக்கிய கருத்துரு.[1][2][3]

சுருக்கமாக, நிதியறிக்கையின் குறிக்கோள்கள்:

  1. இனி வரவிருக்கும் காலத்தில் பணக்கணக்கில் வரவுகளும் செலவுகளும் காலக்கெடுவுடன் முன்கணிப்பு செய்து (குறிப்பிட்ட ஒப்பியலாக்கத்தின் (மாதிரிகளின்)படி), அதற்கேற்ப ஒரு தொழில், அல்லது நிறுவன நடவடிக்கை எவ்வாறு இருக்க வேண்டுமென கூறுவது
  2. உண்மையான தொழில்நடப்புகளை நிதியறிக்கையில் முன்கணித்தவாறு நடத்த பணப்புழக்கம்/நடவடிக்கைகள் எடுப்பது.

நல்ல நிதியறிக்கையின் விதிமுறைகள்

[தொகு]

நிதியறிக்கை உருவாக்க சில அடிப்படை விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அவை,

ஓராண்டு அடிப்படையிலானது

[தொகு]

நாடாளுமன்றமானது செயலாட்சியருக்கு (executive) ஓராண்டிற்காக மட்டுமே நிதி அளிக்க வேண்டும் என்பது நிதியியலில் சிறந்த கொள்கையாகக் கருதப்படுகிறது. காரணம், 1. செயலாட்சியருக்குத் தேவையான நிதி அதிகாரத்தை ஓராண்டுக்கு வழங்குவது ஏற்கத்தக்கது, 2. நிதியறிக்கையை திறன்பட நடைமுறைப்படுத்துவதற்கு செயலாட்சியருக்குத் தேவையான குறைந்தபட்சக் கால அளவு ஓராண்டு, 3. மனிதர்களின் கணக்கீடுகள் ஆண்டை அடிப்படையாகக் கொண்டுள்ள மரபு. இந்தியா மற்றும் பிரிட்டனில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து அடுத்த ஆண்டு மார்ச்சு மாதம் 31-ஆம் தேதி வரையிலும், அமெரிக்காவில் சூலை மாதம் 1-ஆம் தேதி முதல் சூன் மாதம் 30-ஆம் தேதி வரையிலும், பிரான்சு நாட்டில் சனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி வரையிலும் நிதியறிக்கை காலமாக பின்பற்றப்படுகிறது.

துறை அடிப்படையிலானது

[தொகு]

ஒவ்வொரு துறையின் வருவாய் மற்றும் செலவு மதிப்பீடுகள் அந்தத் துறையாலேயே தயாரிக்கப்பட வேண்டும். ஏனெனில், அவை ஒவ்வொரு துறையின் திட்டங்கள், செயல்கள் ஆகியவற்றை தெளிவாகக் காட்டுவதோடு, அந்தத் துறையின் நிதி பலத்தையும் உறுதிப்படுத்தும். அதே நேரம், அந்தத் துறையின் செயல்திட்டங்களை வேறு துறைகள் நடைமுறைப்படுத்தினால் அது பற்றிய அடிக் குறிப்பையும் தனது மதிப்பீட்டு அறிக்கையில் தொடர்புடைய துறை தெரிவிக்க வேண்டும்.

சமமானதாக இருத்தல்

[தொகு]

வருவாய் மதிப்பீட்டை விட செலவு மதிப்பீடு அதிகமாக இருக்கக் கூடாது. அதாவது, செலவு மற்றும் வருவாய் மதிப்பீடுகள் சம அளவில் இருக்க வேண்டும். செலவை விட வருவாய் அதிகமாக இருந்தால் அது உபரி அல்லது எச்ச நிதியறிக்கை (surplus budget) என்றும், வருவாயை விட செலவு அதிகமாக இருந்தால் அது பற்றாக்குறை நிதியறிக்கை (Deficit budget) என்றும் அழைக்கப்படும்.

ஒரே நிதியறிக்கை

[தொகு]

அரசானது அனைத்துத் துறைகளின் வருவாய், செலவுகளை ஒரே நிதியறிக்கையில் உட்படுத்த வேண்டும். இதற்கு ஒற்றை நிதியறிக்கை (single budget) என்று பெயர். துறைதோறும் தனித்தனியாக உருவாக்கினால் அது பன்மை நிதியறிக்கை (plural budget) எனப்படும். பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒற்றை நிதியறிக்கை முறையும், பிரான்சு, சுவிட்சர்லாந்து, செர்மனி ஆகிய நாடுகள் பன்மை நிதியறிக்கை முறையும், இந்தியா இரண்டு நிதியறிக்கை முறையும் (two budget) கடைப்பிடிக்கின்றன.

நிகரமாக அல்லாமல் மொத்தமாக இருத்தல்

[தொகு]

அரசின் வருவாய் மற்றும் செலவு பரிமாற்றத்தை நிதியறிக்கையில் மொத்தமாகக் குறிப்பிட வேண்டும். உபரி அல்லது பற்றாக்குறை என்று நிகர அளவில் கூறக் கூடாது.

துல்லியத்தன்மை

[தொகு]

நிதியறிக்கை மதிப்பீடு மிகச் சரியான அளவினதாக இருத்தல் வேண்டும். மீமதிப்பீடு (overestimate) அதிக வரிவிதிப்பையும் குறை மதிப்பீடு (underestimate) திட்டங்களை செயல்படுத்துவதில் திறனின்மையையும் ஏற்படுத்தும்.

வருவாய், மூலதனப் பகுதிகளைப் பிரித்தல்

[தொகு]

அரசின் நிதி நடவடிக்கைகளில் வருவாய் மற்றும் மூலதன செலவுகளைத் தனித்தனியே பிரித்து அரசை நடத்துவதற்கான செலவை வருவாய் நிதியறிக்கையிலும் (revenue budget), முதலீடு தொடர்பானவற்றை மூலதன நிதியறிக்கையிலும் (capital buddget) குறிப்பிட வேண்டும். வருவாய் நிதியறிக்கைக்கு அரசின் நடப்பு வருவாயிலிருந்தும் மூலதன நிதியறிக்கைக்கு அரசின் சேமிப்பு மற்றும் கடன் ஆகியவற்றின் மூலம் நிதியளிக்கப்படும்.

தொழில் துவக்க நிலை வரவு செலவுத் திட்டம்

[தொகு]

கூட்டாண்மைக்குரிய வரவு செலவுத் திட்டம்

[தொகு]

அரசு நிதியறிக்கை

[தொகு]

அரசு நிதியறிக்கை என்பது அடுத்து வரும் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் அரசின் வருவாய் மற்றும் செலவினங்களின் சுருக்கமான குறிப்பு அல்லது திட்டம் ஆகும்.நாடளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி, முதன்மை அதிபர், தலைவர், குடியரசுத் தலைவர் (President or Chief-executive) இவர்களில் யாரேனும் ஒருவரால் ஒப்புதல் அளிக்கப்படும் சட்டப்படியான ஆவணம் ஆகும். எந்தவொரு நிதியறிக்கைக்கும் அடிப்படையானது வருவாய் மற்றும் செலவினம்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒன்றிய நிதியறிக்கை (Federal Budget), மேலாண்மை மற்றும் நிதியறிக்கைத் திட்ட அலுவலகத்தால் (Office of Management and Budget) உருவாக்கப்பட்டு, நாடாளுமன்றத்தின் (Congress) பரிசீலனைக்கு சமர்பிக்கப்படுகிறது.நாடாளுமன்றம் அதில் தேவைப்படும் மாற்றங்களை செய்யும்.அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களும் சமநிலை வரவு செலவுத் திட்டம் உருவாக்க கோரப்பட்டாலும், ஒன்றிய அரசானது பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம் (Deficit budget) உருவாக்க அனுமதிக்கப்படுகிறது.
இங்கிலாந்தில் கருவூலத் தலைவர் (chancellor of exchequer) உருவாக்கி அளிக்கும் திட்டத்தை, எவ்வித மாற்றமும் செய்யாமல் நாடாளுமன்றம் நிறைவேற்றுகிறது.

இந்திய அரசின் ஒன்றிய வரவு செலவுத் திட்டம்

[தொகு]

இந்தியாவில் ஒன்றிய பொது நிதியறிக்கையை (union general budget) நிதி அமைச்சகம் உருவாக்குகிறது.இந்த அமைச்சகம் பொருளியல் நடவடிக்கைகள், செலவு, வருவாய், நிதிச் சேவைகள், பங்குவிலக்கல் ஆகிய துறைகளைக் கொண்டது. இதில் நிதியறிக்கை உருவாக்கும் பணி பொருளியல் நடவடிக்கைகள் துறையைச் (Department of economic affairs) சார்ந்தது. (அதே வேளை, தொடர்வண்டி அமைச்சகம் தனக்கான திட்டத்தை (ரயில்வே நிதியறிக்கை தனியே தயாரிக்கிறது.)

நிதியறிக்கை நிறைவேற்றுதல்

[தொகு]

இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "CIMA Official Terminology" (PDF). Archived from the original (PDF) on 2013-08-10.
  2. Cliche, P. (2012). "Budget", in L. Côté and J.-F. Savard (eds.), Encyclopedic Dictionary of Public Administration, [online], http://www.dictionnaire.enap.ca/Dictionnaire/en/home.aspx பரணிடப்பட்டது 2012-11-05 at the வந்தவழி இயந்திரம்
  3. "Constitutional Balanced Budget Amendment Poses Serious Risks". Center on Budget and Policy Priorities (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிதியறிக்கை&oldid=4100084" இலிருந்து மீள்விக்கப்பட்டது