உள்ளடக்கத்துக்குச் செல்

நாயன்மார்கட்டு வெயிலுகந்த விநாயகர் ஆலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாயன்மார்கட்டு ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் ஆலயம் யாழ்ப்பாணம் நல்லூரை இராசதானியாக கொண்டு அரசாட்சி புரிந்த தமிழ் மன்னர்களாகிய ஆரியச் சக்கரவர்த்திகளால் அமைக்கப்பட்ட கோயில்கள் ஒன்றாகும்.

தோற்றமும் வளர்ச்சியும்[தொகு]

யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள இவ்வாலயம் ஏறத்தாழ ஆயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன்னே யாழ்ப்பாணத்தை ஆட்சிபுரிந்த தமிழ் மன்னனாகிய சிங்கையாரியச் சக்கரவர்த்தியாலே தனது கோட்டையின் கீழைக்கோபுரவாயிலிலே தான் வெளியே போகும் போதெல்லாம் தரிசித்து வழிபாடு செய்து போவதற்காக அமைக்கப்பட்டது என்பது புராதன யாழ்ப்பாண வரலாற்று நூல்களிலிருந்து அறியப்பட்ட செய்தி ஆகும். இன்னும் எல்லைக் கடவுளாக நல்லையின் பதியிலே கிழக்குப் புற எல்லையிலே நாயன்மார்கட்டு என்னும் கிராமத்தில் சிறந்து விளங்கும் ஆலயங்களுள் ஒன்றாகச் சைவத்தமிழ் மக்களால் போற்றப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாண மன்னர்கள் ஆட்சியிலே சைவப் பண்பாடு மேலோங்கி இருந்ததற்கு அக்காலத்தில் அமைக்கப்பெற்ற சைவ ஆலயங்கள் சான்றாகவுள்ளன. தமிழ் மன்னர் காலத்திலே யாழ்ப்பாண அரசிலே விநாயக வழிபாடும் பிரபல்யம் ஆடைந்தே இருந்தது. யாழ்ப்பாண வைபவ மாலை என்ற நூலில் யாழ்ப்பாண மன்னர்கள் நல்லூரில் தலைநகரை நிறுவிய இராஜதானியின் நாற்புறமும் அமைந்த காவற் கோவில்களிலே கிழக்கிலே அமைந்த வெயிலுகந்த விநாயகர் ஆலயமும் ஒன்றாக விளங்கியதை ஆய்வாளர் பலரும் இன்று ஏற்றுக் கொள்வர்.

பெயர்க் காரணம்[தொகு]

வெயிலுகந்த பிள்ளையார் என்னும் பெயரிற்குப் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றது. இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டதால் அந்தச் சிலையின் ஊர்ப் பெயரைச் சேர்த்து வெயிலுகந்த விநாயகர் என அழைக்கப்பட்டதெனவும் கருதப்படும். கரிய மழை பெய்து கொண்டிருக்கும் போது கூடச் சூரியனுடைய கதிர்களில் ஒரு கற்றை இப்பிள்ளையார் மீது விழுந்து பரவிக் கொண்டிருந்தது என்ற காரணத்தினால் இப்பெயர் உருவானது எனவும் கூறுவர். சூரிய தரிசனம் எப்போதும் படக்கூடிய கிராதிக் கோயிலாக இக்கோயிலின் கருவறை அமைந்திருப்பதனால் இப்பெயர் ஏற்பட்டதெனவும் கூறப்படும். எனினும் இப்பிராந்தியத்தில் மேற்கொண்ட இடப்பெயர் பற்றிய வரிசையில் மடத்துவாசல் கோட்டை வாசல், காட்டு வாசல் என்பன ஒரு தனிப் பண்பாட்டுக் குறியீடுகளாக விளங்குகின்றன. இதன் காரணமாக வாசல் உகந்த பிள்ளையார் என்று குறிக்கப்பட்டு பின்னர் அது மருவி வெயிலுகந்த பிள்ளையார் என மாறியிருக்கலாம் என்றும் கருதுவர்.

அமைப்பு[தொகு]

இவ்வாறு பல வரலாற்று சான்றுகளோடு மிளிரும் இவ்வாலயம் இன்று துவிதள கற்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், தரிசன மண்டபம், தம்ப மண்டபம், வசந்த மண்டபம், யாகசாலை, வாகன சாலை, மடப்பள்ளி, மணிக்கூட்டுக் கோபுரம், வைரவர் ஆலயம், நாகதம்பிரான் ஆலயம், ஆதி விநாயகர் ஆலயம் ஆகியவற்றைக் கொண்டு பெரிய ஆலயமாக விளங்குகின்றது.

நித்திய நைமித்திய பூசை வழிபாடுகள்[தொகு]

இங்கு மூன்று காலப் பூசை நடைபெறுகின்றது. அத்தோடு தைப் பொங்கல், சிவராத்திரி, நவராத்திரி, மார்கழித் திருவெம்பாவை ஆகிய தினங்களில் விஷேட பூசை வழிபாடுகள் நடைபெறுகின்றது. அதுமட்டுமன்றி சித்திரைப் புதுவருடப்பிறப்பு, ஆனி உத்தரம், மானம்பூ, கார்த்திகை விளக்கீடு ஆகிய தினங்களில் அபிஷேகமும் திருவிழாவும் நடைபெறுகின்றது. வருடாந்த மகோற்சவ விழா பங்குனி உத்தர நட்சத்திரத்தை தீர்த்தமாகக் கொண்டு பத்துத் தினங்கள் நடைபெறுகின்றது.

ஆலய பரிபாலகர்களும் குருமார்களும்[தொகு]

இவ்வாலயத்தின் பரிபாலகராகவும் குருவாகவும் 19ம் நூற்றாண்டின் இறுதியில் சைவக்குருமார் பரம்பரையைச் சேர்ந்த இராமசாமி ஐயர் அவர்கள் விளங்கினார்கள். அவரைத் தொடர்ந்து அவரின் பிள்ளையாகிய சின்னையர் அவர்கள் ஆலய நித்திய நைமித்திய பூஜை வழிபாடுகளை ஆற்றியதோடு ஆலயத்தை பரிபாலித்தும் வந்தார்கள். இவருடைய காலத்தில் கற்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், சபா மண்டபம் என்பன அமைக்கப்பட்டு காலயுக்தி வருடம் பங்குனி மாதம் (1919ஆம் ஆண்டு) சம்புரோக்ஷண கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இவரைத் தொடர்ந்து இவர் பிள்ளைகளாகிய சதாசிவம் ஐயர், இராமசாமி ஐயர், பரமசாமி ஐயர் ஆகியோரினால் பரிபாலிக்கப்பட்டு வந்தது. இவர்களைத் தொடர்ந்து இராமசாமி ஐயரின் மகன் சோதிலிங்கம் ஐயா அவர்களினால் ஆலயம் பரிபாலிக்கப்பட்டு வந்தது. இவரின் காலத்தில் (1962 களில்) ஆலய கோபுர வாசல், வசந்த மண்டபம், யாகசாலை ஆகியன அமைக்கப்பட்டன.

சோதிலிங்கம் ஐயாவைத் தொடர்ந்து அவரின் மகன் பாலசுந்தரக்குருக்களினாலும், சோதிலிங்கம் ஐயாவின் சிறிய தந்தை பரமசாமி ஐயாவின் மகன் விநாயகமூர்த்தி ஐயாவினாலும் ஆலயம் பரிபாலிக்கப்பட்டு வந்தது. இவர்களின் காலத்தில் கற்பக்கிரகம் துவிதள விமானமாக அமைக்கப்பட்டதோடு அர்த்த மண்டபம், மகா மண்டபம், தரிசன மண்டபம் என்பன மீள அமைக்கப்பட்டு 1993ம் ஆண்டு சிவஸ்ரீ க. சிவபாதசுந்தரக்குருக்கள் அவர்களைக் கொண்டு மகா கும்பாபிஷேகத்தை நடாத்தி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து 1994 ஆம் ஆண்டு தொடக்கம் ஆலங்கார உற்சவமாக நடைபெற்ற வருடாந்த உற்சவம் மகோற்சவமாக நடைபெற்றது. இதனை பாலசுந்தரக்குருக்களின் மகன் விக்னேஸ்வரக்குருக்கள் பிரதமகுருவாக இருந்து நடாத்தினார்கள். இன்று பாலசுந்தரக்குருக்களினதும் விநாயகமூர்த்தி ஐயாவினதும் பேரப்பிள்ளைகளாகிய சி. ஜதீஸ்வரன் ஐயர், தி. சசிக்காந்த் ஐயர் ஆகியோரினால் ஆலயம் பரிபாலிக்கப்பட்டு வருகின்றது. இவர்கள் காலத்தில் மணிக்கூட்டுக் கோபுரம் மீள அமைக்கப்பட்டது. அத்தோடு 2008ம் ஆண்டு நடைபெற்ற நிஷா புயலினால் சேதமுற்ற கோபுர வாசல் மண்டபம் வில்லு மண்டபமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை நூல்கள்[தொகு]