நரசிங்கடி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


வங்காளதேசத்தில் நரசிங்கடி மாவட்டத்தின் அமைவிடம்

நரசிங்கடி மாவட்டம் (Narsingdi District) (வங்காள மொழி: নরসিংদী தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் டாக்கா கோட்டத்தில் அமைந்துள்ளது.[1] வங்காளதேசத்தின் மேற்கு பகுதியில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நரசிங்கடி நகரம் ஆகும். இந்நகரம் வங்காளதேசத்தின் தேசியத் தலைநகரான டாக்காவிலிருந்து வடகிழக்கில் ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இம்மாவட்டம் நெசவுத் தொழிலுக்குப் பெயர் பெற்றது.

மாவட்ட எல்லைகள்[தொகு]

நரசிங்கடி மாவட்டத்தின் வடக்கிலும், வடகிழக்கிலும் கிசோர்கஞ்ச் மாவட்டமும், கிழக்கு மற்றும் தென்கிழக்கில் பிரம்மன்பரியா மாவட்டமும், தெற்கில் கொமில்லா மாவட்டமும், தென்மேற்கில் நாராயணன்கஞ்ச் மாவட்டமும், மேற்கில் காஜிபூர் மாவட்டமும் எல்லைகளாகக் கொண்டது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

1150.14 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நரசிங்கடி மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக நரசிங்கடி சதர், மனோகர்தி, பேலோபூ, ராய்பூர், சிப்பூர் மற்றும் போலேஷ் என ஆறு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டம் ஆறு நகராட்சி மன்றங்களையும், எழுபது கிராம ஒன்றியக் குழுக்களையும், 598 வருவாய் கிராமங்களையும், 1048 கிராமங்களையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 1600 ஆகும். தொலைபேசி குறியிடு எண் 02 ஆகும். இம்மாவட்டம் ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. [2]

பொருளாதாரம்[தொகு]

வேளாண்மைப் பொருளாதாரத்தைச் சார்ந்த இம்மாவட்டத்தில் மெக்னா ஆறு, சிதாலகா ஆறு, பழைய பிரம்மபுத்திரா ஆறு, பஹாரியா ஆறு ஹரிதேவ் ஆறுகள் பாய்வதால் நீர் வளமு, மண் வளமும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் வாழை, நெல், சணல், கரும்பு, எண்ணெய் வித்துக்கள், பலா, மா, அன்னாசி, பப்பாளி, கொய்யா முதலியவைகள் பயரிடப்படுகிறது. இம்மாவட்டம் நெசவுத் தொழிலுக்குப் பெயர் பெற்றது.

மக்கள் தொகையியல்[தொகு]

1150.14 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 22,24,944 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 11,02,943 ஆகவும், பெண்கள் 11,22,001 ஆகவும் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.59% ஆக உள்ளது. பாலின விகிதம் 98 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1934 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 49.6% ஆக உள்ளது.[3]இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.

கல்வி[தொகு]

வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்பு உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைப் பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப் பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப் படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப் படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.

படக்காட்சிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நரசிங்கடி_மாவட்டம்&oldid=3217967" இருந்து மீள்விக்கப்பட்டது