காஜிபூர் மாவட்டம்

ஆள்கூறுகள்: 24°00′N 90°26′E / 24.00°N 90.43°E / 24.00; 90.43
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்காளதேசத்தில் காஜிபூர் மாவட்டத்தின் அமைவிடம்

காஜிபூர் மாவட்டம் (Gazipur District) (வங்காள மொழி: গাজীপুর জেলা) தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். 1741.53 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 34,03,912 மக்கள் தொகையும் கொண்ட இம்மாவட்டம் டாக்கா கோட்டத்தில் அமைந்துள்ளது. மத்திய வங்காளதேசத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் காஜிபூர் நகரம் ஒரு மாநகராட்சியும் ஆகும். [1]

மாவட்ட எல்லைகள்[தொகு]

காஜிபூர் மாவட்டத்தின் வடக்கில் கிசோர்கஞ்ச் மாவட்டம் மற்றும் மைமன்சிங் மாவட்டத்தின் சில பகுதிகளும், தெற்கில் டாக்காவும், நாராயன்கஞ்சும், கிழக்கில் கிசோர்கஞ்ச் மாவட்டம் மற்றும் நரசிங்கடி மாவட்டக்களும், மேற்கில் டாக்கா மாவட்டம் மற்றும் தங்காயில் மாவட்டமும் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

1806.36 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக காஜிபூர் சதர், சிறீபூர், காளிகுயிர், கப்சியா மற்றும் காளிகஞ்ச் என ஐந்து துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டம் காஜிபூர் எனும் மாநகராட்சி மற்றும் நான்கு நகராட்சி மன்றங்களையும், நாற்பத்தி நான்கு கிராம ஒன்றியக் குழுக்களையும், 715 வருவாய் கிராமங்களையும், 1,114 கிராமங்களையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 1700 ஆகும். தொலைபேசி குறியிடு எண் 02 ஆகும். இம்மாவட்டம் ஐந்து வங்காளதேச நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. [2]இம்மாவட்டம் 273.42 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் காடுகளைக் கொண்டுள்ளது.

பொருளாதாரம்[தொகு]

இம்மாவட்டத்தில் லாப்லோங், பருளி, துரக், சுதி, கோலி, பனார், பாலு, செலய், பங்க்சி, சிதாலக்கா முதலிய வற்றாத ஆறுகளைக் கொண்டுள்ளதால், இங்கு நெல், சணல், கரும்பு, மூங்கில், பலா, பப்பாளி, உருளைகிழங்கு முதலியன பயிரிடப்படுகிறது.

மக்கள் தொகையியல்[தொகு]

1806.36 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 34,03,912 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 17,75,310 ஆகவும், பெண்கள் 16,28,602 ஆகவும் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 5.21% ஆக உள்ளது. பாலின விகிதம் 104 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1884 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 62.6% ஆக உள்ளது.[3]இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.

கல்வி[தொகு]

வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்பு உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைப் பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப் பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப் படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப் படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.

கல்வி நிலையங்கள்[தொகு]

இம்மாவட்டம் பல கல்வி நிலையங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் புகழ் பெற்றவைகள்: இசுலாமிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம், வங்கபந்து சேக் முஜிபுர் ரஹ்மான் வேளாண்மைப் பல்கலைக்கழகம், டாக்கா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், வங்காளதேச திறந்தவெளி பல்கலைக்கழகம் மற்றும் வங்காளதேச தேசிய பல்கலைக்கழகம் என ஐந்து பல்கலைக்கழகங்கள் ஆகும்.

இரண்டு பட்டமேற்படிப்பு கல்லூரிகளும்[4], பத்தொன்பது பட்டப்படிப்பு கல்லூரிகளும், சிறீபூர் பல்கலைக்கழகக் கல்லூரியும் உள்ளது.[1][5][6] இசுலாமிய சமயக் கல்வி வழங்கும் 29 மதராசாகள் இம்மாவட்டத்தில் உள்ளது.[7][8] பல உயர்நிலைப் பள்ளிகளும், மேனிலைப் பள்ளிகளும், தொடக்கப் பள்ளிகளும் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

gazipur.gov.bd

"https://ta.wikipedia.org/w/index.php?title=காஜிபூர்_மாவட்டம்&oldid=3239145" இருந்து மீள்விக்கப்பட்டது