நடவாவி கிணறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நடவாவி கிணறு என்பது தமிழ்நாட்டின், காஞ்சிபுரம் அருகே ஐயங்கார் குளம் என்ற ஊரில் சஞ்சீவிராய சுவாமி கோயில் அருகே உள்ள வித்தியாசமான ஒரு குளம் ஆகும்.[1]

பெயராய்வு[தொகு]

வாவி என்றால் கிணறு என்றும் நட என்றால் நடத்தல் என்றும் பொருள் ஆகும். அதாவது நடவாவி கிணறு என்றால் படிகட்டுள்ள கிணறு என்று பொருளாகும்.

அமைப்பு[தொகு]

நடவாவிக் கிணறானது வித்தியாசமான தோற்றத்தில் உள்ளது. இந்தக் கிணற்றுக்கு முன்பு கல்லால் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கபட்ட ஒரு தோரண வாயில் உள்ளது. வாயிலின் உச்சியில் கயலட்சுமியின் உருவமும், தூணின் இரு புறங்களிலும் வீரர்கள் அமர்ந்த யாளியின் உருவங்கள் அமைந்துள்ளன. இந்தக் கிணற்றுக்கு செல்ல தரை மட்டத்தில் இருந்து படிக்கட்டுடன் கூடிய சுரங்கம் போன்ற பாதை உள்ளது. அந்தப் பாதையில் இறங்கிச் சென்றால் ஒரு மண்டம் உள்ளது. அந்த மண்டபத்துக்குள் ஒரு கிணறு உள்ளது. இதுவே நடவாவிக் கிணறு ஆகும். தரைமட்டத்தில் இருந்து கீழே செல்ல 48 படிகள் உள்ளன. 27 படிகளைக் கடந்தால் மண்டபத்தை அடைய முடியும். இந்த மண்டபமானது 12 தூண்களுடன் குளத்தைச் சுற்றி அமைந்துள்ளது. தூண்களில் பெருமாளின் அவரதாரங்கள் சிறியதும் பெரியதுமாக செதுக்கபட்டுள்ளன.

விழா[தொகு]

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முழுநிலவு நாளில் இங்கு நடவாவி உற்சவம் நடத்தப்படுகிறது. அந்த நாளுக்கு இரு நாட்களுக்கு முன்னதாகவே கிணற்றில் உள்ள மண்டபத்தில் நீர் தேங்காதவாறு கிணற்றில் கூடுதலாக உள்ள நீர் வெளியே இறைக்கப்படுகிறது. விழா நாளில் காஞ்சி வரதராசப் பெருமாள் இந்தக் குளத்தில் உள்ள மண்டபத்தில் வந்து மூன்று முறை வலம் வருகிறார். பின்னர் கோயில் கிணற்று நீரில் வரதராசருக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. அடுத்த நாள் கோயிலில் இருந்து இராமர், இலக்குன், சீதை ஆகியோர் இந்தக் கிணற்றுக்கு வந்து செல்கின்றனர். அதன்பிறகு உள்ளூர் பக்தர்கள் நடவாவிக் கிணற்றில் புனித நீராடுகின்றனர்.[2] விழாவுக்குப் பின்னர் கிணற்றில் ஊற்றெடுத்து மண்டபத்தையும் கிணற்றையும் நீர் நிரப்பிவிடும்.

பரவலர் பண்பாட்டில்[தொகு]

நான் கடவுள் திரைப்படத்தின் சில காட்சிகள் இந்த நடவாவிக் கிணற்றில் படமாக்கபட்டன.

குறிப்புகள்[தொகு]

  1. கிஷோர் (2022-04-26). "ஆச்சர்யங்கள் நிறைந்த காஞ்சிபுரம் அய்யங்கார்குளம் நடவாவி கிணறு". tamil.abplive.com. 2022-06-25 அன்று பார்க்கப்பட்டது.
  2. Correspondent, Vikatan. "காஞ்சிபுரம் வரதராஜர் நடவாவி உற்சவத்தில் என்ன சிறப்பு?". www.vikatan.com/. 2022-06-25 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடவாவி_கிணறு&oldid=3588951" இருந்து மீள்விக்கப்பட்டது