நடராஜ தத்துவம் என்பது ஆனந்த தாண்டவம் ஆடும் நடராசரின் தோற்றத்தினை விளக்குவதாகும். நடராசர் இந்துக் கடவுளான சிவபெருமானின் நடனத் தோற்றமாவார். இந்நடனக் கோலத்தில் சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவருக்காக சிவன் ஆடினார்.
கங்கை: இறைவன் பேராற்றலையும் வேகங்கெடுத்தாளும் வித்தகத்தையும் விளக்குவது.
பிறைசூடுதல்: சரண் என அடைந்தவரைத் தாங்கித் தாழ்வு நீக்கிப் பாதுகாக்கும் வள்ளல்தன்மை.
குனித்த புருவம்: பரதக் கலையின் மெய்ப்பாடு உணர்த்துவது. தன்பாற்போந்து குறையிரந்து முறையிடும் அடியார்களின் விண்ணப்பங்களைக் கூர்ந்து நோக்கி ஊன்றிக் கேட்டருளும் கருணைத் திறத்தினைக் காட்டுவது.
குமிண்சிரிப்பு: அடைக்கலம் புகுந்தோரை, என்று வந்தாய் என்று அருளோடு வரவேற்று, பிழைபொறுத்து வாழ்வளித்து மகிழ்விக்கும் மாட்சியைக் குறிப்பது.
பவளமேனி: இறைவன் நீ வண்ணத்தான் நெருப்பை யொத்தவன். நெருப்புத் தன்பால் எய்தும் பொருள்களை எல்லாம் தூய்மையாக்கிப் புனிதம் அடையச் செய்வது போல, இறைவனும் தன் அடியார்களின் மாசுக்களை நீக்கி - மலநீக்கி மாண்புறச் செய்யும் அருட்டிறத்தைக் குறிப்பது.
பால்வெண்ணீறு: எப்பொருளும் இறுதியில் எய்தும் நிலை சாம்பல்தானே! நீறு மற்றொன்றாக மாறி அழியாது. ஆகவே பால்வெண்ணீறு தூய இயல்பினையும் அழியாத் தன்மையையும் குறிக்கின்றது. தொழுதெழுவார் வினைவளம் நீறெழ இறைவன் நீறு அணிகின்றார். மேலும் செந்நிற மேனியில் வெண்ணீறு அணிந்த கோலம் எவர் நெஞ்சையும் கவர்ந்து பிணிக்கும் பான்மையுடையது.
நெற்றிக்கண்: மேல் நோக்கிய நிலையில் நிமிர்ந்து நிற்கும் நெற்றிக்கண் சிவபிரானின் தனிப்பெரும் முதன்மையை உணர்த்துவது. இது சிவபெருமானுக்குரிய சிறப்பு அடையாளம்.
நீலகண்டம்: ஒருவரும் உண்ணாத நஞ்சு உண்டும் இருந்தருள் செய்யும் இறைவனின் நயத்தக்க நாகரிக நலனையும் பெருங்கருணைத் திறத்தையும் காட்டுவது.
உடுக்கை: தமருகம் எனப்படும் உடுக்கை, இறைவன் உலகப் பொருள்களைப் படைக்கும் சிருஷ்டியைக் குறிப்பது. பரநாதத்தைப் பரமன் தோற்றுவிக்கும் பான்மையை இது காட்டுகிறது.
நெருப்பு: இறைவன் இடக்கரத்தில் ஏந்தியுள்ள நெருப்பு உயிர்களின் பிறவித் தளைகளின் இணைப்பினை நீக்கும் பொருட்டுச் செய்யும் சம்ஹாரத் தொழிலைக் காட்டுவது.
அபயகரம்: அமைந்தகை காத்தல் தொழிலைக் குறிப்பது. அடியார்களுக்கு ஆறுதல் கூறித் தேற்றும் நிலை இது.
வீசியகரம்: யானையின் துதிக்கையைப் போன்று திகழும் இவ்விடக்கை கஜஹஸ்தம் எனப்படும். இக்கையின் விரல், தூக்கிய திருவடியைக் காட்டுகின்றது. திருவடியை நம்பித் தொழுக. இது உம்மை ஈடேற்றும் என்பது குறிப்பு.
எடுத்த திருவடி: இறைவனின் இடது திருவடி இது; அம்பிகைக்கு உரியது. துன்பக் கடலிடைத் தோணித் தொழில் பூண்டு தொண்டர் தம்மை இன்பக் கரை முகந்து ஏற்றும் திறத்தைக் காட்டுவது.
ஊன்றிய திருவடி: இறைவனின் வலது திருப்பாதம் இது. முயலகனை மிதித்து அவன் மீது ஊன்றிய நிலை மலத்தை முழுதாக அழித்து விடாமலும், மலத்தால் உயிர்கள் பெரிதும் வருந்தாமலும், வினைப் பயன்களை உயிர்கள் நுகர இறைவன் இயற்றும் மறைத்தல் தொழிலைக் குறிப்பது.
முயலகன்: இது ஆணவ மலத்தைக் குறிப்பது. முத்தி நிலையில் உயிர்கள் மாட்டு ஆணவமலம் அடங்கிக் கிடப்பதைப் போன்று. முயலகனும் இறைவன் திருவடியின் கீழ், மாயாதே தன் சத்தி மாய்ந்து கிடக்கின்றான்.
தெற்குநோக்குதல்: ஆடவல்லான் தெற்கு நோக்கியே ஆடுகின்றார். யமபயத்தை நீக்கியருளி நம்மை உய்விப்பதற்காக தென்றற்காற்றின் மீதும் தென் தமிழின் மீதும் உள்ள விருப்பாலும் தெற்கு நோக்கி இறைவன் ஆடுகின்றார் எனக் கூறுகிறார் திருவிளையாடற் புராண ஆசிரியர் பரஞ்சோதி முனிவர்.
திருவாசியால் குறிக்கப்படும் இப்பிரபஞ்சத்துள்ளே அனைத்து இயக்கங்களுக்கு அவரது தாண்டவமே மூலமாக அமைந்துள்ளது.
மாயையின் தளையிலிருந்து எண்ணிறந்த உயிர்களை விடுவிப்பதையே அவரது தாண்டவம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரபஞ்சத்தின் மையத்தானமான சிதம்பரம் நமது இதயத்தானமாகும். இதயத்தில் தான் அவரது நடனம் திகழ்கிறது.