உள்ளடக்கத்துக்குச் செல்

நஞ்சகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நஞ்சகன் [1] என்பவன் பெருங்கதை இலக்கியத்தில் வரும் கதை மாந்தர்களில் ஒருவன். குபேரன் என்னும் தேவனுக்குத் தொண்டு செய்துவந்தவன். அழைத்தபோது தான் வரும் மந்திரத்தை உருமண்ணுவாவுக்கு உபதேசித்தவன்.

மந்திரம் சொன்ன கதை

[தொகு]

உதயணன் தன் தாய்மாமனிடமிருந்து பெற்ற நாட்டின் ஆட்சிப் பொறுப்பினை யூகியிடம் ஒப்படைத்துவிட்டுத் தன் தந்தை தனக்கு அளித்த நாட்டை ஆண்டுவந்தான். அப்போது அவனுக்கு வயந்தகன், உருமண்ணுவா, இடவகன் என்னும் மூவர் உற்ற தோழர்களாவும், அமைச்சர்களாகவும் விளங்கினர். ஒரு நாள் உதயணன் இவர்களுடனும் மற்றும் சில வீரர்களுடனும் காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். சுற்றி அலைந்தனர். களைப்படைந்தனர். நீர் வேட்கையால் வருந்தினர். புரசமரத்தடியில் சாய்ந்து சோர்ந்து கிடந்தனர். இந்தக் காட்டிலிருக்கும் தெய்வம் வந்து காப்பாற்றவேண்டும் என வேண்டிக்கொண்டனர்.

அப்போது தோன்றிய தெய்வமகன் இந்த நஞ்சகன். வெண்ணிற உடை, இடுப்பில் கச்சு, சந்தனம் பூசிய மார்பு, ஒளிரும் மேனி, பிறைவடம் என்னும் அணிகலன் கிடங்கும் கழுத்து, செங்கழுநீர்ப் பூவால் தொடுக்கப்பட்ட தலை-மாலை, ஆயிரம் இதழ் கொண்ட தாமரை போன்ற கண்கள் ஆகியவற்றுடன் நஞ்சகன் பொலிவுடன் தோன்றினான்.

சோர்ந்து கிடப்பது ஏன் எனக் கேட்டான். அவர்கள் அப்போதைக்குத் தமக்குள்ள நீர்-வேட்கை பற்றிக் கூறினர். நஞ்சகன் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போய்க்கொண்டிருந்தான். உருமண்ணுவா நஞ்சகனைத் தடுத்து நிறுத்தி, அவனது உதவிக்கு நன்றி தெரிவித்த பின்னர், அவர்கள் துன்புறும்போது மீண்டும் வந்து உதவ்வேண்டும் என வேண்டிக்கொண்டான். ஒப்புக்கோண்ட நஞ்சகன் வேண்டும்போது தன்னை அழைக்கும் மந்திரத்தை உருமண்ணுவாவுக்குச் சொல்லிக்கொடுத்துவிட்டுப் போய்விட்டான்.

அடிக்குறிப்பு

[தொகு]
  1. கொங்குவேளிர் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு). பெருங்கதை (4 தொகுதிகள்). சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40. {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நஞ்சகன்&oldid=1839582" இலிருந்து மீள்விக்கப்பட்டது