நகர உருவவியல்
நகர உருவவியல் என்பது மனிதக் குடியிருப்புக்களின் உருவ அமைப்புப் பற்றியும், அவற்றின் உருவாக்க வழிமுறைகள், மாற்றங்கள் என்பன குறித்தும் ஆய்வு செய்யும் ஒரு துறை ஆகும். இவ்வாய்வுகள், பெருநகர்ப் பகுதிகள், பெருநகரங்கள், நகரங்கள், ஊர்கள் போன்றவற்றின் கூறுகளின் கோல அமைப்புக்களையும் அவற்றின் வளர்ச்சி வழிமுறைகளையும் ஆராய்வதன் மூலம் அவை தொடர்பான வெளிசார் அமைப்புக்களையும், இயல்புகளையும் புரிந்துகொள்ள முயல்கின்றன.
இவ்வாய்வுகள், இயற்பிய அமைப்புக்களைப் பகுத்தாய்தல், நகர்வுக் கோலங்கள், நிலப் பயன்பாடு, உரிமை மற்றும் கட்டுப்பாடு நிலை, குடியேற்ற நிலை போன்றவற்றின் பகுப்பாய்வுகளை உள்ளடக்கும். பொதுவாக, இயற்பிய வடிவங்கங்களின் பகுப்பாய்வின்போது, தெருக்களின் கோலவமைப்பு, மனைகளின் கோலவமைப்பு, கட்டிடங்களின் கோலவமைப்பு ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவர். குறிப்பிட்ட குடியேற்றங்களை ஆய்வு செய்யும்போது, நிலப்படவரைவியல் வளங்களைப் பயன்படுத்துவர். இம்முறையில், வரலாற்று நிலப்படங்களுடன் ஒப்பிட்டுக் குடியேற்றங்களின் வளர்ச்சிப் படிமுறைகளை அறிந்துகொள்வர். குடியேற்றங்களின் இயற்பிய வடிவம் எவ்வாறு மாறுகிறது என்பதையும், வெவ்வேறு நகரங்கள் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று ஒத்து அமைகின்றன அல்லது வேறுபடுகின்றன போன்றவற்றையும் அறிந்து கொள்வதில் கூடிய கவனம் செலுத்தப்படுகின்றது. இதன் இன்னொரு குறிப்பிடத்தக்க துணைத் துறை நகரங்களின் இயற்பியத் தளக் கோலங்களினால் வெளிப்படுத்தப்படும் சமூகக் கோலங்களையும், இயற்பிய வடிவங்கள் உருவாக்கும் சமூக வடிவங்களையும் ஆய்வு செய்வதில் ஈடுபடுகின்றது.
உருவவியல் என்னும் எண்ணக்கருவின் அடிப்படைகள் பெரும் கவிஞரும், மெய்யியலாளருமான கொய்தே (1790) என்பவரின் எழுத்துக்களில் முதன்முதலாக வெளிப்பட்டன. இது பின்னர் உயிரியல் துறையில் பயன்பட்டது. அண்மைக் காலங்களில் புவியியல், நிலவியல், மொழியியல் ஆகிய துறைகளிலும் இது பரவலாகப் பயன்பட்டு வருகிறது. அமெரிக்கப் புவியியலில், நகர உருவவியல் என்னும் குறிப்பிட்ட ஆய்வுத்துறையைத் தொடக்கி வைத்தோர் லூயிசு மம்ஃபோர்டு (Lewis Mumford), ஜேம்சு வான்சு (James Vance), சாம் பாசு வார்னர் (Sam Bass Warner) என்போர் ஆவர்.
சில அடிப்படைக் கருத்துருக்கள்
[தொகு]மனித குடியேற்றங்கள், பல தலைமுறைகளின் கட்டிடச் செயற்பாடுகளின் தொகுப்பாக, நீண்ட காலம் தன்னியல்பாக உருவாகி வளர்வன என்ற அடிப்படையிலேயே நகர உருவவியல் அதனை அணுகுகின்றது. இவ்வாறான உருவாக்கம் விட்டுச்செல்லும் தடங்கள், தொடர்ந்துவரும் காலங்களில் இடம்பெறும் மனைகளைப் பிரித்தல், உட்கட்டுமான வளர்ச்சி, கட்டிட அமைப்பு போன்ற கட்டிடச் செயற்பாடுகளுக்கு வடிவம் கொடுப்பதுடன், நகர உருவாக்கச் செயல் முறைகளில் வாய்ப்புக்களையும், கட்டுப்பாடுகளையும் உருவாக்குகிறது. இவ்வாறான தடங்களுக்கான ஏரணங்களை அறிவதும், அவற்றைப் பகுத்தாய்வதுமே நகர உருவவியலின் முக்கியமான பிரச்சினை ஆகும்.
நகர உருவவியல் பொதுவாக பொருள் மைய அணுகுமுறை கொண்டதல்ல. அது நகரின் கூறுகளுக்கு இடையேயான தொடர்புகள் மீதே கூடுதல் கவனம் செலுத்துகிறது. இந்த அணுகுமுறை மொழியியலில் சொற்களுக்கும் அவற்றின் தொடரமைப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பதற்கு இணையானதாகும்.