உள்ளடக்கத்துக்குச் செல்

தொல்லியல் அருங்காட்சியகம், நாகார்சுனகொண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொல்லியல் அருங்காட்சியகம், நாகார்சுனகொண்டா இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள மாச்சேர்லா மண்டலப் பகுதியில் உள்ளது. நாகார்சுனசாகர் அணைக்கட்டுப் பகுதியில் உள்ள தீவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. நாகார்சுனசாகர் அணையின் தெற்குப் பகுதியில் உள்ள விசயபுரி என்னும் துறையில் இருந்து இந்தத் தீவுக்குச் செல்ல முடியும்.

நாகார்சுனகொண்டா ஒரு காலத்தில் இந்து, பௌத்த மதங்களுக்கான சிறந்த மையமாகத் திகழ்ந்து அம் மதங்களுடன் தொடர்புடைய கலை, கட்டிடக்கலை ஆகியவற்றின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தது. இவ்விடம் பௌத்த மதத்தின் பல பிரிவுகளுக்கு இடமளித்துப் மிகவும் விரிவான பௌத்த நிறுவனமாக விளங்கியது. நாகாசுனகொண்டா அணைக்கட்டுத் திட்டத்தின்போது நீரில் மூழ்கவிருந்த பல பண்பாட்டுச் சின்னங்கள் இடம்பெயர்க்கப்பட்டோ, மீளமைப்புச் செய்யப்பட்டோ இந்தத் தீவில் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் பிந்திய மத்தியகாலம் வரையான காலப்பகுதிகளைச் சேர்ந்த பண்பாட்டுச் சின்னங்கள் அடங்கும்.

அகழ்வுகளின் போது பெறப்பட்ட தொல்பொருட்களை வைப்பதற்காக அமைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் பௌத்த விகாரம் ஒன்றை ஒத்த தளவமைப்பைக் கொண்ட பெரிய கட்டிடம் ஆகும். இது மத்தியகால அரண்களுக்கு நடுவே தீவின் வடக்குப் பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு காலகட்டங்களிலும் நாகார்சுனகொண்டா பள்ளத்தாக்குப் பகுதியில் நிலவிய பண்பாடுகளைச் சேர்ந்த காட்சிப்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. ஐந்து காட்சிக் கூடங்களில் வைக்கப்பட்டுள்ள இப் பொருட்களில், செதுக்குவேலைகள் கொண்ட சுண்ணக்கற் பலகைகள், சிற்பங்கள், கல்வெட்டுக்கள், மற்றும் பல அரும்பொருட்கள் என்பன அடங்குகின்றன. இவற்றுட் பெரும்பாலானவை கிபி 3-4 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியைச் சேர்ந்தவை.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]