உள்ளடக்கத்துக்குச் செல்

தொல்லியல் அருங்காட்சியகம், கொண்டாப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொல்லியல் அருங்காட்சியகம், கொண்டாப்பூர், இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் மேடக் மாவட்டத்தில் கொண்டாப்பூர் என்னும் ஊருக்குத் தெற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஒரு சிறு குன்றின்மேல் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள காட்சிப் பொருட்கள் அருங்காட்சியகத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் அமைந்துள்ள கோட்டகட்டா என அழைக்கப்படும் இடத்தில் இருந்து பெறப்பட்டவையாகும்.

தொல்லியலாளரான என்றி கோசென்சு (Henry Cousens) என்பவர் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் இவ்விடத்தில் தொல்லியல் ஆய்வுகளைச் செய்தார். பின்னர் ஐதராபாத் நிசாமின் கீழ் ஐதராபாத் அரசின் தொல்லியல் துறையினரும் 1940 ஆம் ஆண்டு முதல் பல தடவைகள் இப்பகுதியில் அகழ்வாய்வுகளில் ஈடுபட்டனர். இங்கு கிடைத்த பொருள்களைக் கொண்டு சிறிய அருங்காட்சியகம் ஒன்று அத்தொல்லியல் களத்திலேயே நிறுவப்பட்டிருந்தது. பின்னர் அது இப்போதைய இடத்துக்கு மாற்றப்பட்டது. 1952 ஆம் ஆண்டில் இந்த அருங்காட்சியகம் இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இந்த அருங்காட்சியகத்தில் 1940-42 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின் போது பெறப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கே வரலாற்றுக் காலத்தின் தொடக்கப் பகுதிப் பண்பாட்டைக் காட்டும் மட்பாண்டத் துண்டுகள், களிமண் உருவங்கள், விலங்குகளின் எலும்பு மற்றும் ஓடுகளால் செய்யப்பட்ட பொருட்கள், உலோகப் பொருட்கள், அணிகலன்களுக்கான மணிகள், நாணயங்கள் போன்ற பல பொருட்கள் உள்ளன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]