உள்ளடக்கத்துக்குச் செல்

தொடக்க ஏற்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொடக்கச் செயல் (booting) என்பது கணினிகளில் ஒரு பயனர் தமது கணினிக்கு மின்னாற்றல் வழங்கித் தொடங்கும்போது அதன் வழமையானப் பணிகளை நிகழ்த்த கணினியைத் தயார்ப்படுத்தும் ஒரு நெறிமுறை ஆகும். தற்கால கணினிகளில் இது பொதுவாக இயக்கு தளத்தை ஏற்றித் தொடங்குவதாகும். மின்னாற்றல் வழங்கப்பட்டவுடன் ஒரு கணினி ஆற்றும் தொடக்கப் பணித்தொகுப்பு ஏற்றத் தொடர்வினைகள் என அழைக்கப்படுகின்றன. தொடக்க ஏற்றி என்பது மின்னாற்றல் பெற்றபின் தற்சோதனைகளை முடித்த கணினியில் முதன்மை இயக்கு தளத்தை ஏற்றும் அல்லது நிகழ்நிலைச் சூழலை அமைக்கும் ஒரு நிரல்தொகுதி ஆகும்.

1950 களில் பெருமுகக் கணிப்பொறிகள் காலத்திலிருந்தே தொடக்கநிலை நிரல்களையும் இயக்கு தளங்களையும் சேமிப்பு நாடாக்களிலிருந்து கணினி நினைவகத்திற்கு ஏற்றுவது வழமையாக இருந்தது. இந்த நெறிமுறை பெருமுகக் கணிப்பொறிகள், மினி கணினிகள், மைக்ரோ கணினிகள், தனிநபர் கணினிகள், பயனாளர் இலத்திரனியல் கருவிகளில் நடைமுறையில் உள்ளது. சில எளிமையான பதிகணினி கருவிகளில் இந்த ஏற்றத் தொடர்வினைகள் தேவையிராது; மாற்றவியலா நினைவகங்களில் சேமிக்கப்பட்டுள்ள நிரலியக்கம் மூலம் மின்னாற்றல் பெற்றவுடனேயே இயங்கத் தொடங்கும். இத்தகைய மாற்றவியலா நினைவகத்தில் உள்ள நிரலியக்கத்தில் தொடங்கி ஒருகட்ட மற்றும் பலகட்ட ஏற்றத் தொடர்வினைகள் கொண்ட பல எடுத்துக் காட்டுகள் உள்ளன. தொடக்க ஏற்றத்தின் இத்தகைய ஏற்றத் தொடர்வினைகளின்போது இயக்குதளத்தின் அல்லது நிகழ்நிலை சூழல் தரவுகளின் இரட்டை இலக்கக் குறியீடுகள் அழியாச் சேமிப்பான இரண்டாம்கட்ட நினைவகங்களிலிருந்து (வன்தட்டு நினைவகம்) மறையக்கூடிய குறிப்பில்வழி அணுகல் நினைவகங்களுக்கு ஏற்றப்பட்டு கணினிச் செயல்படத் தொடங்குகிறது. ஐபிஎம் பெருமுகக் கணினிகளில் இந்த நெறிமுறை தொடக்க நிரல் ஏற்றம் (Initial Program Load) என்று அறியப்பட்டது.

மேலும் அறிய

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடக்க_ஏற்றி&oldid=3559598" இலிருந்து மீள்விக்கப்பட்டது