தேவரதாசிம்மயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கன்னட இலக்கிய வரலாற்றில் வசன இலக்கியத்தின் முன்னோடியாக அமைபவர் தேவர தாசிமய்யன் (Devara dasimayya). 10 ஆம் நூற்றாண்டு இவர் காலமாகக் கணிக்கப்படுகிறது.

பிறப்பும் வாழ்க்கையும்[தொகு]

கர்நாடக மாநிலத்தில் முதனூரு கிராமத்திலுள்ள சிவன் கோயிலின் இறைவன் இராமனால் வணங்கப்பட்டதால் இராமநாதன் எனப் பெயர் கொண்டுள்ளார். இந்த இறைவன் மீது தாசிமய்யனுக்கு தனி விருப்பம் ஏற்பட்டது. இதை வெளிப்படுத்தும் வகையில் தாசிம்மையனின் ஒவ்வொரு வசனமும் ”ராமநாதா " என்ற முத்திரையோடு அமைகிறது. கடவுள் அருள் வேண்டிக் காட்டில் கடுமையான தவம் செய்த போது சிவன் தரிசனம் தந்து, ’காயக’ தத்துவத்தைச் [உடல் உழைப்புக் கொள்கை] சொல்லித் தன்னை உணர்த்தியதாகவும், தாசிம்மையன் பிறகு தன் பரம்பரைத் தொழிலான நெசவுத் தொழிலைச் செய்ததாகவும் வரலாறு அமைகிறது.

திருமண வாழ்க்கை[தொகு]

தாசிம்மையானின் திருமணம் பற்றிய செய்தி சுவையானதாக உள்ளது. மணல் கலந்த அரிசி, ஒரு கரும்புத் துண்டு ஆகியவற்றைத் தந்து தண்ணீர் இல்லாமல், விறகு இல்லாமல் பாயசம் செய்யும் பெண்தான் தனக்கு மனைவியாக முடியும் என்று தாசிம்மையன் சொல்ல, துக்களை என்ற பெண் கரும்பிலிருந்து பால் பிழிந்து, சக்கையைக் காய வைத்து விறகாக்கி, கரும்புப் பாலில் அரிசியைக் கலந்து சமைக்க, மணல் கீழே தங்கி பாயசம் தயாராகிறது. துக்களையின் அறிவுத்திறனைக் கண்டு அவரைத் திருமணம் செய்து கொள்கிறார்.

நெய்த தலைப்பாகையும் அட்சய பாத்திரமும்[தொகு]

ஒருமுறை தான் விரும்பி நெய்த மிக அழகான வேலைப்பாடு உடைய தலைப்பாகையை விற்கச் சந்தைக்குப் போகிறார். அதை ஒரு திருடன் தொட முயன்றபோது ஒரு கூர்மையான சகரம் அவன் கையைத் துண்டாக்கி விடு்கிறது. அந்தக் காட்சியைப் பார்த்தவர்கள் மந்திரத் தன்மை உடைய அதை வாங்கக் கூடாது என்று முடிவு செய்கின்றனர். என்ன முயற்சி செய்தும் பலனில்லை. தாசிம்மையன் வீடு திரும்புகிறார். அப்போது எதிர்ப்படும் ஒரு முதியவர் நடுக்கமான குரலில் அதைத் தனக்குத் தரும்படி வேண்ட, அவருக்குக் கொடுத்து விடுகிறார். சிரிப்போடு வாங்கியவர் அதைத் துண்டுகளாகக் கிழித்து தலையிலும், கையிலும், உடலிலும் சுற்றிக் கொள்கிறார். அதைப் பார்த்த தாசிம்மையனுக்கு எந்தக் கோபமும் இல்லை. ’உனக்குக் கொடுக்கப்பட்ட பிறகு அதை நீ எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்" என்று சொல்லிவிட்டுப் முதியவரைத் தன் வீட்டுக்கு உணவு உண்ண அழைத்து வருகிறார். உரிய மரியாதைக்குப் பிறகு சாப்பிட்டு விட்டு பெரியவர் விடை பெறும்போது அம் முதியவர் கைப்பிடி அரிசியைத் துக்களையிடம் தந்து அரிசிப் பானையில் போடும்படி சொல்கிறார். அது அட்சய பாத்திரம் ஆகிறது.

தன்னால் முடிந்தவரை உழைத்தும், சிவனைப் போற்றியும் வாழ்ந்த தாசிம்மையனுக்கு வாழ்வின் பிடிப்பு போய் விடுகிறது. ராமநாதன் கோயிலுக்குச் சென்று தன்னை அழைத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறார். சிவ தரிசனம் கிடைக்கிறது. ’கணவன் பாதையே என் பாதையும்" என்று வேண்டுதலில் துக்களையும் சேருகிறாள். இருவரும் அருள்பெற்றதாக தாசிம்மையனின் வரலாறு அமைகிறது.

தாசிம்மையனின் பாடல்கள்[தொகு]

  • ஆண், பெண் பாகுபாடு எல்லாம் புறத் தோற்றப் பாகுபாடே தவிர வேறில்லை என்பதை உணர்த்தும் பாடல்:

   "மேலே முடிவந்தால் பெண்ணென்பார்
    தாடிமீசை வந்தால் ஆணென்பார்
    நடுவில் சுற்றும் ஆத்மா ஆணும் அல்ல
    பெண்ணும் அல்ல காண் ராமநாதா"

என்கிறார்.

  • எளிமையான உவமை மூலம் இணைவுத் தத்துவம்

 "தீ எரியும் அசையாது
   காற்று அசையும் எரியாது
   தீ காற்றைச் சேரும் வரை
   ஒரசைவும் இல்லை
   தெரிவதும் செய்வதும் அது போன்றே
   மனிதர்களுக்குத் தெரியுமா ராமநாதா"

  • மனித உடலின் உண்மை நிலை கூறும் பாடல்

  "இது என்னுடல் என்றால்
    என் விருப்பபடி நடக்க வேண்டும்
    இது உன்னுடல் என்றால்
    உன் விருப்பப் படி நடக்க வேண்டும்
    இது என்னுடையதும் இல்லை
    உன்னுடையதும் இல்லை
    சலனபுத்தி உள்ள வஸ்து ராமநாதா"

  • யதார்த்த நிலை விளக்கும் பாடல்

" ஒவ்வொருவரும் சாகவே
    போருக்குப் போகின்றனர்
    நூறில் ஆயிரத்தில் ஒருவர்தான்
    எதிரியைக் கொல்கிறார்
    ஒவ்வொரு புளியம்பூவும்
    பழமாக முடியுமா ராமநாதா"

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவரதாசிம்மயன்&oldid=3217457" இலிருந்து மீள்விக்கப்பட்டது