தென் கொரியாவில் போக்குவரத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தென் கொரியாவில் போக்குவரத்து (Transportation in South Korea) வசதிகள் விரிவான வலைப்பின்னல் அமைப்புகளின் மூலம் வழங்கப்படுகிறது. இரயில்வே, நெடுஞ்சாலைகள், பேருந்து வழித்தடங்கள், படகு சேவைகள், வான் வழிகள் என நாடுமுழுவதும் குறுக்கும் நெடுக்குமாக அவ்வலைப்பின்னலின் பகுதிகளாக இணைந்துள்ளன. உலகில், காந்தவழித்தட தொடர் வண்டிகளை வணிகரீதியாக இயக்கும் மூன்றாவது நாடு தென் கொரியா என்பது குறிப்பிடத்தக்கதாகும்[1].

வரலாறு[தொகு]

1962-1966 காலத்தின் முதலாவது ஐந்தாண்டுத் வளர்ச்சி திட்டத்தில், நவீன உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கம் தொடங்கப்பட்டது. 275 கிலோமீட்டர் தொலைவு இரயில் பாதைகளும் பல சிறிய நெடுஞ்சாலைத் திட்டங்களும் இத்திட்டத்தில் உள்ளடங்கும்[2]. முக்கிய நகரங்களான சியோலையும் புசானையும் இணைக்கும் கியாங்பு விரைவுச்சாலை திட்டம் இத்திட்டக் காலத்தில் தொடங்கப்பட்டு, 1970 ஆம் ஆண்டு சூலை மாதம் ஏழாம் தேதியில் நிறைவடைந்தது.

உள்கட்டமைப்புகளுக்கான முதலீடுகள் 1970 களில் மேலும் அதிகரித்தது. 1972-1976 காலத்தின் மூன்றாவது ஐந்தாண்டுத் வளர்ச்சி திட்டத்தில் சியோலில், விமான நிலையங்கள், துறைமுகங்கள். சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டன. நெடுஞ்சாலை வலைப்பின்னல் மேலும் 487 கிலோமீட்டர் தொலைவுக்கு விரிவாக்கப்பட்டது, முக்கிய துறைமுக திட்டங்களான போகாங், உல்சான், மசான், இஞ்சியோன், மற்றும் புசான் முதலான திட்டங்கள் தொடங்கப்பட்டன[2]

மின்மயமாக்கல், கூடுதல் இருப்புப் பாதைகள் அமைத்தல் போன்ற திட்டங்களால் இரயில் போக்குவரத்து வலைப்பின்னல் 1980 களில் முன்னேற்றம் கண்டது. பிரதானமான முக்கியப் பாதைகளில் இரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டது. சரக்குப் போக்குவரத்திற்கு இரயில் பாதைகள் மிகவும் உபயோகமாக இருந்தாலும், பயணிகள் போக்குவரத்திற்குமான வசதிகள் வளர்ந்தன. 1988 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி நாட்டில் 51000 கிலோமீட்டர் சாலைவழிகள் இருந்தன. இந்த பத்தாண்டுகள் முடிவதற்குள், முக்கிய நகரங்களை இணைக்கின்ற விரைவு வழிச்சாலைகள் மேலும் 1539 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டன.

இரயில் பாதைகள்[தொகு]

கே.டி.எக்சு இரயில்

இரயில்போக்குவரத்தை இயக்கும் மிகப்பெரிய அமைப்பாக கொரெயில் விளங்குகிறது. கொரியா இரயில்வே வலைப்பின்னல் ஆணையம் தென்கொரியாவில் இரயில்வே வலைப்பின்னல் போக்குவரத்தை மேலாண்மை செய்கிறது.

2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொரியா விரைவு இரயில் தன்னுடைய அதிவிரைவு சேவையைத் தொடங்கியது. நகரங்களுக்கு இடையில் சைமாயுல்-ஓ, முகுங்கவா-ஓ விரைவு வண்டிகள் இயக்கப்பட்டன. முகுங்கவா-ஓ விரைவு வண்டியைக் காட்டிலும் சைமாயுல்-ஒ விரைவு வண்டிகள், இருக்கைகள் சற்று வசதியாகவும், குறைவான நிறுத்துமிடங்கள் கொண்டதாகவும் இருந்தன. முன்னதாக தொங்கில்-ஓ என்றழைக்கப்பட்ட தொங்கியுன் வகை இரயில்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழித்தடங்களில் இயக்கப்பட்டன. இவை எல்லா இரயில் நிறுத்தங்களிலும் நின்று செல்லும். இருக்கை முன்பதிவு வசதியும் தொங்கியுன் வகை இரயில்களில் கிடையாது.

சியோல், சின்சாங்கு நிலையங்களுக்கு இடையில் சமீபத்தில் நியுரிரோ-ஓ இரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தொடருந்து சியோல் பெருநகரைச் சுற்றி வரும் விதமாக இயங்குகிறது. சியோல் சுரங்க இரயிலைக் காட்டிலும் குறைவான நேரத்தைக் கொண்ட பயணச்சேவையை இந்த நியுரிரோ-ஓ இரயில் வழங்குகிறது. முகுங்கவா-ஓ விரைவு வண்டியைப் போல முன்பதிவு வசதியும் அதே கட்டணமும் இத்தொடருந்தின் சிற்ப்புகளாகும். இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த கொரெயில் திட்டமிட்டுள்ளது[3]. இவ்வாறே, சைமாயுல்-ஓ விரைவு இரயிலையும் நவீன வசதிகள் கொண்ட ஐ.டி.எக்சு.சைமாயுல் விரைவு வண்டியாக மாற்றவும் கொரெயில் திட்டமிட்டுள்ளது.

சுரங்க இரயில்[தொகு]

தென்கொரியாவின் ஆறு முக்கிய நகரங்களான கியோல், புசான், தேய்கு, தேய்யோன், குவாங்கியு, இஞ்சியோன் அனைத்தும் சுரங்கப்பாதை இரயில் போக்குவரத்து வசதியைக் கொண்டுள்ளன.

சியோல் நகரின் சுரங்கப்பாதை இரயில் திட்டம் நாட்டிலேயே மிகவும் பழமையானது ஆகும். 1974 ஆம் ஆண்டில் சியோல் நிலையம்- சியோங்நையாங்கினி பிரிவின் பாதை ஒன்று திறக்கப்பட்டது.

அமிழ் தண்டூர்தி[தொகு]

முதலாவது டிராம் எனப்படும் அமிழ் தண்டூர்தி பாதைப் போக்குவரத்து, சியோலில் சியோடைமுன்னுக்கும் சியோங்நையாங்கினிக்கும் இடையில் டிசம்பர் 1898 இல் தொடங்கப்பட்டது. நகரத்தின் மையப்பகுதி முழுவதையும் இணைக்கின்ற வகையில் டிராம் வலைப்பின்னல் விரிவுபடுத்தப்பட்டது. இதனால், கிழக்கில் சியோங்நையாங்கினி, மேற்கில் மாபோ-கு, தெற்கில் ஆங் ஆற்றுக்குக் குறுக்கிலுள்ள நார்யாங்யின் உள்ளிட்ட யுங்-கு, யொங்னொ-கு மாவட்டங்கள் இவ்வசதியைப் பெற்றன.

டிராம் வலைப்பின்னல் போக்குவரத்து 1941[4] ல் அதன் உச்சத்தை அடைந்தது. ஆனால் கார்களுக்கு ஆதரவாகவும் 1968 இல் சுரங்க இரயில் திட்டம் வளர்ச்சியாலும் டிராம் போக்குவரத்து கைவிடப்பட்டது. சியோல் சுரங்கப்பாதை 1 மற்றும் பாதை 2 திட்டங்கள் முறையே, யொங்னொ, யுல்யிரொ வழியாக பழைய டிராம் பாதைகளைப் பின்பற்றின.

பேருந்துகள்[தொகு]

மண்டல சேவைகள்[தொகு]

தென் கொரியாவில் கியோங்பு விரைவுப்பாதையில் தேசியநெடுஞ்சாலை பேருந்து வழிப்பாதை

நடைமுறையில் கிட்டத்தட்ட அனைத்து தென் கொரிய நகரங்களிலும் பிராந்திய பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது. மண்டலப் போக்குவரத்துப் பேருந்துகள் கோசோக் பேருந்துகள் என்றும் சியோவி பேருந்துகள் என்றும் பிரிக்கப்பட்டுள்ளன. கோசோக் பேருந்துகள் அதிவிரைவுப் பேருந்துகளாகும். தொலைதூரப் பேருந்துகளான இவை குறைந்த அளவு நிறுத்தங்களில் நின்று செல்லக்கூடியனவாகும். சியோவி பேருந்துகள் பொதுவாக குறுகிய தொலைவுக்கு புறநகரங்களுக்கு இடையில் செல்லும் பேருந்துகளாகும். இவை வேகம் குறைவாகவும் அதிகமான நிறுத்தங்களில் நின்று செல்லக்கூடியனவாகவும் இருக்கின்றன.

உள்ளுர் சேவைகள்[தொகு]

சியோலில் ஓர் உள்ளூர் பேருந்து.

பெரிய மற்றும் சிறிய நகரங்களில் பொதுவாக இவாசியோக் எனப்படும் மூடுவண்டிகள், தோசியோங் அல்லது இப்சியோக் எனப்படும் நகரப்பேருந்துகள் என இரண்டு வகையான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலும் இவ்விருவகைப் பேருந்துகளும் ஒரே பாதையில், அதே நிறுத்தங்களுடன், அதே இடைவெளியில் இயங்குகின்றன. இவாசியோக் வகைப் பேருந்துகளில் வசதியான இருக்கைகள் இருக்கும். ஆனால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு நேரெதிராக தோசியோங் வகைப் பேருந்துகளில் வசதிக் குறைவான இருக்கைகளும் குறைவான கட்டணமும் அனுமதிக்கப்படுகின்றன. சில சிறு நகரங்களில் இவாசியோக் வகைப் பேருந்து சேவை அளிக்கப்படவில்லை. அவ்வூர்களின் வகைகளுக்கு ஏற்ப அங்கு அகிராமப்புற பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பிற போக்குவரத்து சேவைகள்[தொகு]

A limousine bus departing from Incheon Airport bus station to Jamsil subway station in Seoul.
இஞ்சியோன் விமான நிலையப் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் ஒரு பேருந்து.

விரிவான வலைப்பின்னல் மூலமாக இஞ்சியோன் அனைத்துலக விமானநிலையத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அதிவேக பேருந்துகளின் சேவை கிடைக்கிறது. 1990 களின் தொடக்கத்தில் பல பல்துறை அங்காடிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்காக இலவச பேருந்து சேவையை அளித்து வந்தன. 2001 சூன் 28 இல் நீதிமன்ற முடிவின்படி அரசு இந்தச் சிறிய வலைப்பின்னலை தடை செய்தது. இருந்தாலும், பல பேராலயங்கள், பகல்நேரக் கவனிப்பு மையங்கள் மற்றும் தனியார் பள்ளிகள் இன்னமும் பேருந்துகளை இயக்கிவருகின்றன[5].

சாலைகள்[தொகு]

தென்கொரியா முழுவதும் விரைவு வழிச்சாலைகள்

தென் கொரியாவிலுள்ள நெடுஞ்சாலைகள் இலவச சாலைகள் (விரைவுச்சாலைகள்/உந்துபொறிச்சாலைகள்), தேசிய சாலைகள் மற்றும் தேசியச் சாலைகளுக்குக் கீழான பல்வேறுவகை வகைப்படுத்தப்பட்ட சாலைகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட அனைத்து இலவச சாலைகளும் பாதைவரிக்கு உட்பட்டவை. பெரும்பாலான நெடுஞ்சாலைகள் யாவும் கொரிய விரைவுச்சாலைக் கழகத்தால் அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. தென்கொரியாவின் பெரும்பாலான பகுதிகள் இலவசசாலை வலைப்பின்னலால் இணைக்கப்பட்டுள்ளன. மின்னணு வரிவசூல் முறையில் பாதை வரி வசூலிக்கப்படுகிறது.

தனியார் முதலீட்டில் அமைந்த பல சாலைகளும் தென்கொரியாவில் உண்டு. நான்சந்சியோனான் விரைவுச்சாலை, தேய்கு-புசான் விரைவுச்சாலை, இஞ்சியோன் அனைத்துலக விமானநிலைய விரைவுச்சாலை, சியோல்-சன்சியோன் விரைவுச்சாலை போன்றவை தனியார் முதலீட்டில் அமைந்துள்ள சாலைகளாகும்.

1998 ஆம் ஆண்டின்படி தென்கொரியாவிலுள்ள சாலைகளின் மொத்த நீளம் 86,989 கிலோமீட்டர்களாகும். இதில் 1996 கிலோமீட்டர்கள் விரைவுச்சாலைகள் மற்றும் 12,447 கிலோமீட்டர் சாலைகள் தேசியச் சாலைகள் ஆகும். 2009 இல் விரைவுச்சாலைகளின் ஒருங்கிணைந்த நீளம் 3000 கிலோமீட்டர் அளவை எட்டியது.

இஞ்சியோன் விமான நிலையத்திலிருந்து சியோலை நாஓக்கிய பயணம்
மொத்தம் (2014)[6] விரைவுப்பாதைகள் தேசிய சாலைகள் சீரமைக்கப்பட்டவை சீரமைக்கப்படாதவை
105,672 km 4,138 km 13,708 km 89,701 km 8,218 km

நீர்வழிகள்[தொகு]

தென் கொரியா உலகின் மிகப்பெரிய கப்பல் கட்டும் தளங்களில் ஒன்றாகும். விரிவான படகு சேவையும் கடற்பயணத்திற்கான வசதிகளும் இங்கு மிகுதியாக உள்ளன. வணிகக்கப்பல் தொகுதிகளை சீனா, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தென் கொரியா இயக்குகிறது. கப்பல் இயக்குபவர்களில் பெரும்பாலோனோர் பல்துறை தொழில் வல்லுநர்கள் ஆவர். படகுப் போக்குவரத்தில் ஈடுபடும் பலர் சிறு தொழில்முனைவர்களாக உள்ளனர். மொத்தமாக தென்கொரியாவில் 1,609 கிலோமீட்டர் தொலைவுக்கு நீர்வழிச்சாலைகள் உள்ளன.

படகுச்சேவை[தொகு]

புசான் அனைத்துலக படகுத்துறை

தென்கொரியாவின் தெற்கு மற்றும் மேற்குக் கடற்கரைகளில் இருக்கும் சிறிய தீவுகள் படகுப் போக்குவரத்தைக் கொண்டுள்ளன. கூடுதலாக கரையண்மைப் பரப்பிலுள்ள யெச்யு மற்றும் உல்லியுங்கு தீவுகளும் இவ்வசதியைப் பெற்றுள்ளன. இஞ்சியோன், மோக்போ, போகாங் மற்றும் புசான் போன்ற நகரங்களும் சீனா மற்றும் சப்பான் போன்ற நாடுகளும் படகுப் போக்குவரத்து மையங்களாகச் செயற்படுகின்றன.

துறைமுகங்கள்[தொகு]

இயின்கேய், இஞ்சியோன், கன்சான், மசான், மோக்போ, போகாங், புசான், தோங்கே, உல்சன், இவோசு, யெச்யு போன்ற நகரங்கள் பிரதானமான துறைமுகங்களாக விளங்குகின்றன.

வாணிபக் கப்பல்கள்[தொகு]

1999 ஆம் ஆண்டு நிலவரப்படி தென்கொரியாவில் மொத்தமாக 461 வாணிபக் கப்பல்கள் இருந்தன:[7].

வான்பயணம்[தொகு]

கொரிய தேசிய விமானச்சேவைக்கு மாற்றாக 1962 இல் கொரிய அரசாங்கம் கொரியன் விமான நிறுவனத்தை உருவாக்கியது. 1969 ஆம் ஆண்டு வரையிலும் தனியார் வசமிருந்த இந்நிறுவனமே 1988 வரை நாட்டின் ஒரே விமானச் சேவை நிறுவனமாகத் திகழ்ந்தது. 2008 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் 1249 மில்லியன் அனைத்துலகப் பயணிகள் உள்ளடங்கிய 2164 மில்லியன் பயணிகள்ளுக்கு விமானப்பயணத்தை வழங்கியது[8].

1988 ஆம் ஆண்டு இரண்டாவதாக ஆசியானா ஏர்லைன்சு சியோலில் நிறுவப்பட்டது. யெச்யு, புசான் நகரங்களுக்கு உள்நாட்டுச் சேவையையும், பாங்காக், சிங்கப்பூர், சப்பான், அமெரிக்காவின் லாசு ஏஞ்சல்சு போன்ற நாடுகளுக்கு வெளிநாட்டுச் சேவையையும் ஆசியனா ஏர்லைன்சு வழங்கியது. 2006 கணக்கின்படி ஆசியானா 12 உள்நாட்டு நகரங்கள் மற்றும் 20 நாடுகளைச் சேர்ந்த 66 நகரங்களுக்கு வர்த்தக பயணத்தை மேற்கொண்டுள்ளது. 17 நாடுகளைச் சேர்ந்த 24 நகரங்களுக்கு சரக்குப் போக்குவரத்திற்காகவும் ஆசியானா பறந்துள்ளது[9].

ஒருங்கிணைந்த தென்கொரியன் ஏர்லைன்சு விமானம் தற்பொழுது 297 அணைத்துலக வான்வழிகளில் பறக்கிறது[10].

விமான நிலையங்கள்[தொகு]

தென்கொரியாவின் மிகப்பெரிய விமான நிலையமான இஞ்சியோன் அனைத்துலக விமானநிலையம் 2001 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஓர் ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளுக்கு விமானப் பயணத்தை இவ்விமானநிலையம் அளிக்கிறது[11] . 2005 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நான்கு முறை உலகளாவிய சிறந்த விமானநிலையம் என்ற பெருமையை இஞ்சியோன் அனைத்துலக விமானநிலையம் பெற்றது[12]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Incheon Airport maglev unveiled". Railway Gazette. 20 May 2014. http://kojects.com/2012/01/28/maglev-at-incheon-international-airport-to-be-completed-this-year/. பார்த்த நாள்: 9 January 2015. 
 2. 2.0 2.1 "Infrastructure Development in Korea". United Nations Public Administration Network. பார்த்த நாள் 2005-05-19.
 3. 무궁화호 열차 점차 사라진다, YTN, 2009년 6월 6일
 4. 서대문-청량리~: 이이화, 《한국사이야기22. 빼앗긴 들에 부는 근대화바람》(한길사, 2004) 49쪽.
 5. "Ban on the Shuttle Bus Operation Case". Constitutional Court of Korea. பார்த்த நாள் 2005-05-19.
 6. "Yearly Road Statistics". KOSIS (2014). பார்த்த நாள் 2015-10-08.
 7. "Ships by type (most recent) by country". nationmaster.com. பார்த்த நாள் 2005-05-19.
 8. "Company Info / Overview". Korean Air. பார்த்த நாள் 2005-05-19.
 9. "Overview / General Info". Asiana Airlines. பார்த்த நாள் 2005-05-19.
 10. "International Aviation Policy". Ministry of Land, Transportation and Maritime Affairs. பார்த்த நாள் 2005-05-19.
 11. "Incheon International Airport celebrates its eighth year". Incheon International Airport Corp.. பார்த்த நாள் 2005-05-20.
 12. "Incheon International Airport, Best Airport Worldwide for 4 Years Straight". Incheon International Airport Corp.. பார்த்த நாள் 2005-05-20.

புற இணைப்புகள்[தொகு]