உள்ளடக்கத்துக்குச் செல்

தூர் த பிரான்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூர் தெ பிரான்சின் சின்னம்
2013 ஆண்டுக்கான தூர் தெ பிரான்சின் வழித்தடம்

தூர் த பிரான்சு (Tour de France, தமிழ்: பிரான்சியச் சுற்றுலா, பிரெஞ்சு பலுக்கல்: தூவ தெ பான்சு) உலகில் புகழ்பெற்ற மிதிவண்டி போட்டிப் பந்தயம் ஆகும்.[1] பிரான்சில் ஒவ்வொரு கோடை காலத்திலும் நடத்தப்பெறும் இந்தப் போட்டி 1903இல் துவங்கியது.[2] அண்மைக்காலங்களில் இது பாரிசின் நடுவே ஈபெல் கோபுரத்தைக் கடந்து முடிவடைகிறது. ஐரோப்பாவில் நடத்தப்பெறும் மிதிவண்டி போட்டிப் பந்தயங்களில் இதுவே மிகவும் புகழ்பெற்றதும் கூடுதலான பரிசுத்தொகைகளைக் கொண்டதாகவும் விளங்குகிறது. அண்மையில் இதில் கலந்துகொண்ட விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்து உட்கொண்டதால் ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. இந்தப் போட்டிப் பந்தயம் பிரான்சைச் சுற்றிச் செல்வதுடன், இங்கிலாந்து, பெல்ஜியம், அல்லது எசுப்பானியா நாட்டுப் பகுதிகளிலும் பிரனீசு மலைத்தொடரிலும் செல்கிறது.

இந்தப் போட்டி மூன்று வாரங்களுக்கு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளின் இறுதியிலும் முதலில் வந்தவருக்கு மஞ்சள் சட்டையும் மிக விரைவாக ஓட்டியவருக்கு பச்சை சட்டையும் மலைப்பகுதிகளில் மிக சிறந்த ஓட்டுநருக்கு போல்கா புள்ளிகள் இட்ட சட்டையும் வழங்கப்படுகின்றன. 25 அகவைக்கு குறைவான சிறந்த இளம் வீரருக்கு வெள்ளை சட்டை வழங்கப்படுகிறது. பாரிசை மிகக் குறைந்த நேரத்தில் எட்டுபவர் போட்டியை வென்றவராக அறிவிக்கப்படுகிறார். ஒவ்வொரு நாளும் முன்னிலை பெறும் வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. தவிர வெற்ற பெற்றவரின் அணிக்கும் பல பரிசுகள் வழங்கப்படுகின்றன.

2013ஆம் ஆண்டின் தூர் த பிரான்சு போட்டி இதன் வரலாற்றில் 100வதாக அமைந்தது. இது சூன் 29, 2013 முதல் சூலை 21, 2013 வரை முழுமையும் பிரான்சின் பகுதியிலேயே (2003க்குப் பிறகு) நடத்தப்பெற்றது. இதில் இசுகை அணியைச் சேர்ந்த பிரித்தானியர் கிறிசு ஃபுரூம் வென்றார்.[3]

மேற்சான்றுகள்[தொகு]

  1. Joel Gunter (16 July 2012). "The Tour de France: a guide to the basics". The Telegraph. http://www.telegraph.co.uk/sport/othersports/cycling/tour-de-france/9400588/The-Tour-de-France-a-guide-to-the-basics.html. பார்த்த நாள்: 30 July 2012. 
  2. "1903 Tour de France". Bikeraceinfo.com. 19 January 1903. பார்க்கப்பட்ட நாள் 30 July 2012.
  3. "Chris Froome wins the Tour de France 2013". த கார்டியன் (ஐக்கிய இராச்சியம்). சூலை 23, 2013. பார்க்கப்பட்ட நாள் சூலை 24, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூர்_த_பிரான்சு&oldid=1829196" இலிருந்து மீள்விக்கப்பட்டது