திருமலைராயன்பட்டினம் ஆயிரங்காளி அம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமலைராயன்பட்டினம் ஆயிரங்காளி அம்மன் கோயில் என்பது புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் திருமலைராயன்பட்டினத்தில் உள்ள ஒரு அம்மன் கோயிலாகும். இந்த ஆயிரங்காளியம்மனுக்குப் படைக்கப்படும் பொருட்கள் ஒவ்வொன்றும் ஆயிரம் ஆயிரமாகப் படைக்கப்படுவதால் அம்மனின் இந்த அம்மன் ஆயிரங்காளியம்மன் என்று அழைக்கப்படுகிறார்.

தலவரலாறு[தொகு]

ஒரு காலத்தில் கலிங்கத்தை ஆண்டுவந்த அரசன் ஒருவன் அன்னைக்காளி தேவியை உருவாக்கி நாளும் அவளுக்கு ஆயிரமாயிரம் பொருட்களும் பழங்களும் மலர்களும் சித்திரான்னமும் செய்து பூசை செய்து வழிபட்டுவந்தான். அந்த மன்னனின் இறுதிக் காலத்தில் அவன் கனவில் தோன்றிய காளி, “தன்னை ஒரு பேழையில் வைத்துக் கடலில் விட்டுவிடுமாறும், தான் வேறு இடம் சென்று கோயில் கொண்டு தங்குவதாகவும்” என்று கூறினாள். மன்னனும் அவ்வாறே செய்தான்.

கடலில் மிதந்துவந்த பெட்டி திருமலைராயன்பட்டினக் கரையோரம் வந்துசேர்ந்தது. அந்நகரில் வசித்துவரும் செங்குந்த மரபைச் சேர்ந்த பெரியவர் ஒருவரின் கனவில் தோன்றிய அன்னை, கலிங்க மன்னனின் குலதெய்வமான தான் இப்போது கடலில் தவழ்ந்துகொண்டிருப்பதாகவும் தன்னை எடுத்து வந்து வழிபாடு செய்யுமாறும் கூறினாள். விடிந்ததும் அந்தப் பெரியவர் அனைவரையும் அழைத்துக்கொண்டு கடற்கரைக்குச் சென்று அன்னை இருந்த பேழையை எடுத்துக் கொண்டுவந்தார்.

பேழையைத் திறந்து பார்த்து அதனுள் இருந்த ஓலைக் குறிப்பைக் கொண்டு அன்னைக்குத் தினமும் பூஜை செய்யும் முறையையும், அன்னைக்குப் படைக்கும் பொருட்கள் ஆயிரமாக இருக்க வேண்டும் என்பதையும் அறிந்துகொண்டு பூசைகளை நடத்தினர். ஒவ்வொரு நாளும் படையளுக்கு வகைக்கு ஆயிரம் படைக்க முடியாத காரணத்தால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூஜை செய்திட முடிவெடுத்து, அதன்படி தற்போதும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அம்மன் சிலைக்கு பூசைகள் நடைபெற்றுவருகின்றன. அதுவரை பேழையை மட்டுமே வழிபடுகின்றனர்.[1]

பூசை[தொகு]

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் விழாவில், இரண்டு நாள்கள் மட்டுமே அம்மனை தரிசிக்க முடியும். வைகாசி மாத வளர்பிறையில் இரவு பெட்டி திறக்கப்பட்டு பூசைகள் நடக்கும் இவ்வாறு 2017 சூன் 5 அன்று இரவு பேழையிலிருந்து அம்மனை பக்கர்கள் எழுந்தருளச் செய்தனர். ஆறாம் தேதியன்று அபிராமி அம்மன் சமேத ராஜசோளீசுவரர் கோயிலிலிருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க பூசை பொருட்கள், பழங்கள் உள்பட சீர்வரிசைப் பொருட்கள் ஒவ்வொன்றும் 1,000 வீதம் ஆயிரங்காளியம்மன் கோவிலுக்கு 70 ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டன. இதையடுத்து ஏழாம் தேதி ஆயிரங்காளியம்மனுக்கு சோடச உபச்சார தீபாராதனை காட்டப்பட்டது. அன்றும் மறுநாளும் பக்தர்கள் அம்மனைத் தரிசித்தனர். பின்னர் 9 ஆம் தேதி அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பாக அம்மன் மீண்டும் பேழைக்குள் வைக்கப்பட்டாள். இதற்கு அடுத்து 2022-ம் ஆண்டில் அம்மன் மீண்டும் பேழையிலிருந்து எடுக்கப்பட்டுப் பூசை நடைபெறும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. கரு. முத்து (15 சூன் 2017). "ஆயிரம் காளியம்மன் அபூர்வ தரிசனம்". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 16 சூன் 2017.
  2. "ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையே தரிசனம்!". செய்திக்கட்டுரை. தினமணி. பார்க்கப்பட்ட நாள் 16 சூன் 2017.