திருமண முறைகள் எட்டு
வடநூல் கூறும் திருமணம் எட்டு வகைப்படும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.[1] அந்த எட்டு இவை என 7 ஆம் நூற்றாண்டு நூல் இறையனார் களவியல் உரை குறிப்பிடுகிறது.[2]
சிவதருமோத்தர உரை மேற்கோள்களாகத் தரப்பட்டுள்ள இந்த எட்டுவகை மணம் பற்றிய பாடல்கள் பொருள் விளங்குமாறு சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்வகை மணம் பற்றித் தனித்தனியே விளக்கும் பாடல்கள் அந்தாதித் தொடையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
12 ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய இளம்பூரணர் இந்த 7 திருமண முறைகளின் பெயரை வடமொழிப் பெயர்களால் குறிப்பிடுகிறார்.
எண் | சிவதருமோத்தர உரை குறிப்பிடும் தமிழ்ப்பெயர் | வடமொழிப் பெயர் | இளம்பூரணர் விளக்கம் |
---|---|---|---|
1 | அறநிலை | பிரமம் [3] | கன்னியை அணிகலன் அணிந்து பிரமசாரியாய் இருப்பவன் ஒருவனுக்குத் தானமாகக் கொடுப்பது |
2 | ஒப்பு | பிரசாபத்தியம் [4] | பெண்வீட்டார் வேண்ட ஆண்வீட்டார் இசைந்து பெற்றோர் திருமணம் செய்து தருவது. |
3 | பொருள்கோள் | ஆரிடம் [5] | ஒன்றானும் இரண்டானும் ஆவும் ஆனேறும் வாங்கிக் கொடுத்துப் பெறும் திருமணம். |
4 | தெய்வம் | தெய்வம்[6] | வேள்வி செய்வோர் பலருள் ஒருவருக்குத் தன் மகளை வேள்வித் தீ முன் மணம் முடித்துத் தருவது. |
5 | யாழோர் கூட்டம் | கந்திருவம் [7] | ஒத்த இருவர் தாமே கூடும் கூட்டம். |
6 | அரும்பொருள் வினை | அசுரம் [8] | வில்லேற்றினானாதல், திரிபன்றி எய்தானானாதல்கோடற்கு உரியான் எனக் கூறியவழி, அது செய்தார்க்குக் கொடுத்தல். |
7 | இராக்கதம் | இராக்கதம் [9] | தலைமகன் தன்னினும், தமரினும் பெறாது, வலுக்கட்டாயமாகப் பெண்ணை அடைதல். |
8 | பேய்நிலை | பைசாசம் [10] | கள்ளுண்டு களித்தார் மாட்டும், துயின்றார் மாட்டும் உடலின்பம் துய்த்தல். |
இவற்றில் தமிழர் களவுத் திருமண முறைமை
அறநிலை (பிரம்மம்)
[தொகு]வேத வித்தகனாகவும், நல்லொழுக்கமுடையவனாகவும் இருக்கும் பிரம்மச்சாரியை வலியச் சென்று அழைத்து அவனைப் புத்தாடை அணிவித்து ஆடையணிகளால் அழகு செய்த பெண்ணை அவனுக்குத் தானம் செய்வது அறநிலை
“ | ஒப்பாருக் கொப்பா ரொருபூப் பிரிந்தபின்
இன்பான் மதிதோன்றா வெல்லைக்க- ணப்பால் தருமமே போல்கென்று தக்கார்க்குச் சேர்த்தல் பிரமமாம் போலும் பெயர் |
” |
தெய்வம் (தைவம்)
[தொகு]வேள்வி செய்து அதன் முடிவில் அதனை நடத்திய ஆசிரியன் ஒருவற்கு மகளை அணிகலனணிந்து அவ்வேள்வித்தீ முன்னர் காணிக்கையாகப்க் கொடுப்பது, தெய்வம் எனப்படும்.
“ | மெய்ப்பாலைப் பெண்டன்மை யெய்தியபின் மெல்லியலை
யொப்ப வுணர்ந்த பொழுதுண்ட - லொப்பார்க்கு நெய்தயங்கு தீமுன்னர் நேரிழையை யீவதோ தெய்வப்பே ராகுந் தெரிந்து |
” |
பொருள்கோள் (ஆரிடம்)
[தொகு]பொருள் கோள் எனப்படுவது "ஏறும் ஆவும் கொணர்ந்து நிறீஇ, அவற்றின் முன்னர் கைக்கு நீர்பெய்து கொடுத்தல்" அதாவது மணமகனிடம் இரண்டு பசுக்களை அல்லது காளைகளைப் பெற்றுக் கொண்டு பெண்ணைக் கொடுப்பது ஆரிடம் எனப்படும்.
“ | இற்குலத்தோ டொப்பானுக் கொப்பா னிமிலேறாப்
பொற்குளம்பிற் பொற்கோட்ட வாப்புனைந்து-- முற்படுத்து வாரிடம்பே ராமுலையை வாழ்க்கைக்கண் வைப்பதுரை ஆரிடம் பேரா மதற்கு |
” |
விதிமணம் அல்லது ஒப்பு
[தொகு]ஒப்பு (விதிமணம் அல்லது பிரசாபத்தியம்) ஆவது, மணமகம் கொடுத்த பரிசத்தினை விட மணமகளைப் பெற்றவர்கள் இருமடங்கு கொடுத்து, மணமகளும், மணமகனும் சேர்ந்து அறவழியில் செல்லட்டும் என்று தீர்மானித்துக் கொண்டு பெண்ணைக் கொடுப்பது ஒப்பு எனப்படும்.
“ | கொடுத்த பொருள் வாங்கிக் கொண்டபேர்
மடுப்பர் மடுத்தற் கமைந்தா-- லடுப்போ னிரண்டா மடங்கு பெய்தீவ ததுவே யிரண்டா மணத்தி னியல்பு |
” |
அரும் பொருள் வினை
[தொகு]அரும் பொருள் வினை (அசுரம்) எனப்படுவது அரிய சாதனைகளைச் செய்து மணமகன் மணப்பெண்ணைப் பெறுதலாகும். இவையன்றி பெற்றவன் குறிக்கும் பெரும் பொருளைக் கொடுத்துப் பெண்ணை வாங்கி அணிகள் பூட்டி இம்மணம் நிகழ்தலும் உண்டு.
“ | இன்னது செய்தார்க்கு இவளுரியள் என்ற இடத்து,
அன்னது செய்தெய்துவது. அவை வில்லேற்றுதல், திரிபன்றி யெய்தல் கொல்லேறு கோடல் முதலிய. |
” |
யாழோர் கூட்டம்
[தொகு]யாழோர் கூட்டம் (கந்தருவம்) எனப்படுவது "ஒத்த குலம், குணம், அழகு, அறிவு, பருவம் உடையார், யாருமில்லாத ஒரு சிறைக்கண் அன்பு மீதூரத் தாமே புணர்ந்து ஒழுகும் ஒழுக்கம். அதாவது பெண்ணும் ஆணும் மனமொத்துத் தாங்களாகவே கலந்து கொள்வது
“ | ஒத்த குலத்தார் தமியரா யோரிடத்துத்
தத்தமிற் கண்டதம் மன்பினா-- லுய்த்திட வந்தர மின்றிப் புணர்வ ததுவரோ கந்தருவ மென்ற கருத்துழு |
” |
“ | "முற்செய் வினையது முறையா வுண்மையி
னொத்த விருவரு முள்ளக நெகிழ்ந்து காட்சி யையந் தெரிதல் தேற்றலென நான்கிறந் தவட்கு நாணு மடனும் அச்சமும் பயிர்ப்பு மவற்கு முயிர்த்தகத் தடக்கிய, அறிவு நிறைவு மோர்ப்புந் தேற்றமும் மறையவர்க்கு மாண்டதோ ரிடத்தின் மெய்யுறு வகையும் முள்ளல்ல துடம்புறப்படாத் தமிழியல் வழக்கமெனத் தன்னன்பு மிகைபெருகிய களவெனப் படுவது கந்தருவ மணமே"[13] |
” |
பேய்நிலை~அசுரம்
[தொகு]பேய்நிலை எனப்படுவது தூக்கத்திலோ குடி மயக்கத்திலோ, இறந்தோ உள்ள ஒருபெண்ணைத் தூக்கிக் கொண்டு போய் ஒருவன் புணர்வது பேய்நிலை எனப்படும்.
“ | துஞ்சினாரோடும், மயங்கினாரோடும், சரித்தாரோடும், செத்தாரோடும், விலங்கினோடும், இழிதகு மரபில் யாருமில்லா வொருசிறைக்கண் புணர்ந்து ஒழுகு ஒழுக்கம். | ” |
இராக்கதம்
[தொகு]அவளது உறவினர்களை அடித்துக் கொன்றும் பிளந்தும், ஒரு பெண்ணை அவளது வீட்டிலிருந்து தன் வலிமையால் கவர்ந்து சென்று மணப்பது இராக்கதம் எனப்படும்.
“ | இராக்கதம் ஆவது: "ஆடைமே லிடுதல், பூமே லிடுதல், கதவடைத்தல் முதலியவற்றால் வலிதிற் கோடல். | ” |
தமிழ்நெறிப் பாகுபாடு
[தொகு]தொல்காப்பியர் இந்த எட்டுத் திருமண முறைகளைத் தமிழ் இலக்கிய நெறியில் பாகுபடுத்திக்கொண்டுள்ளார். முதல் நான்கும் (1 முதல் 4) கைக்கிளை எனவும், கடைசியில் உள்ள மூன்றும் (6 முதல 8) பெருந்திணை என்றும், இடையில் உள்ள 'யாழோர் கூட்டம்' 'அன்பின் ஐந்திணை' என்றும் காட்டுகிறார். அன்பின் ஐந்திணை என்பது குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் ஆகிய ஐந்து திணைகள். இவற்றின் பகுப்பு முறையே புணர்தல், காத்திருத்தல், பிரிதல், ஊடல், இரங்கல் ஆகியனவும், அவற்றின் நிமித்தங்களும் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ மறையோர் தேஎத்து மன்றல் எட்டு – தொல்காப்பியம், களவியல், நூற்பா 1
- ↑ பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம்,
தைவம், காந்தருவம், அசுரம், இராக்கதம்,
பைசாசம் என வேதத்து எண்வகை மணமே - ↑ பிரமம் கன்னியைப் பொருங்கலன் அணிந்தே
பிரமசாரியாய் இருப்பான் ஒருவனுக்கு
உரிய வன்னிமுன் உதவுதல் மருவும் - ↑ மருவும் பிரசாபத்தியம் மகட் கோடற்கு
உரிய கோத்திரத்தார் மகள் உதவு என
இருமுது குரவரும் உவந்தே ஈதல் - ↑ ஈயும் ஆரிடம் ஆவும் ஆனேறும்
வாங்கித் தீமுன்னர் மகள் வழங்குதலே - ↑ வழங்கு தெய்வம் வேள்வி ஆசாரியற்கு
முழங்கு தீ முனம் மகட் கொடை முறையே - ↑ முறைமை யாழின் நிறை கந்திருவம்
ஒப்புப் பற்றும் தப்பு இலவாகித்
தாமே கூடும் தகுதியது ஆகும் - ↑ ஆகும் அசுரம் செரு வில் ஏற்றியும்
திரி பன்றியினைத் தெரிவுற எய்தும்
இன்னன பிறவும் பன்னிய செய்தும்
கன்னியை மன்னுதல் துன்னும் என்ப - ↑ துன்னும் இராக்கதம் சுரிகுழல் பேதையைத்
தன்னிற் பெறாதும் தமரிற் பெறாதும்
வலிதிற் கோடல் மரபு காட்டும் - ↑ காட்டு பைசாசம் களித்தார் துயின்றார்
மாட்டுப் புணரும் புணர்ச்சியின் மாண்பே - ↑ தொல்காப்பியம்
- ↑ இறையனார் களவியலுரை
- ↑ அவிநயம்