திருச்சிராப்பள்ளியின் வரலாறு
திருச்சிராப்பள்ளி இந்தியாவின், தமிழகத்தில் உள்ள ஒரு நகரமாகும். திருச்சிராப்பள்ளி மிகவும் பழமையான நகரமாக கருதப்படுகின்றது. இதனை முக்கால சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், முத்தரையர்கள்,இடைக்காலச் சோழர்கள், பிற்கால சோழர்கள், பிற்கால பாண்டியர்கள், தில்லி சுல்தான்கள், விஜயநகர பேரரசர்கள், ஆற்காடு நவாப்புகள், நாயக்கர்கள், ஆங்கிலேயர்கள் ஆகிய அனைவரும் பல்வேறு காலகட்டங்களில் ஆண்டுள்ளனர். தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த நகரமான உறையூர் முற்கால சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. அது தற்போது திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு நகரம் ஆகும். முற்காலச் சோழர்களின் தலைநகரில் அதிகமாக வசித்த இனமான முத்து ராஜாக்கள் இப்பொழுதும் திருச்சியில் அதிக எண்ணிக்கையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
முற்கால வரலாறு
[தொகு]திருச்சிராப்பள்ளியிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் கற்காலத்தில் இருந்தே மனிதர்கள் வசிப்பதாக நம்பப்படுகிறது. முற்கால சோழர்களின் எழுச்சிக்கும் முன் நாகர் என்னும் இனத்தவர் வசித்ததாக வி. கனகசபை கூறுகின்றார்.
முற்கால சோழர்கள்
[தொகு]முற்கால சோழர்களின் காலத்தில் திருச்சிராப்பள்ளி ஒரு முக்கியமான நிர்வாகத் தலைநகரமாகவும், பண்பாட்டுக் கூடமாகவும் விளங்கியது. தற்போது திருச்சிராப்பள்ளியின் நகராக இருக்கும் உறையூர் அன்றைய சோழர்களின் தலைநகராக விளங்கியது. இதற்குரிய ஆதாரம் கிமு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பேரரசரான அசோகரின் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிமு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தொலெமி என்னும் கிரேக்க புவியியலாளரும் திருச்சிராப்பள்ளியைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். மனிதனால் கட்டப்பட்ட மிகவும் பழமையான அணை கரிகாலச் சோழனால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட கல்லணை ஆகும்.[சான்று தேவை] இது உறையூரிலிருந்து 10 மைல்(16 கிலோமீட்டர்) தொலைவில் கட்டப்பட்டுள்ளது.
பல்லவர் காலம்
[தொகு]கிபி ஐந்தாம் நூற்றாண்டில் பல்லவர்கள் எழுச்சி பெறத் தொடங்கினர். திருச்சிராப்பள்ளி அவர்களின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் திருச்சி மலைக்கோட்டைக் கோயிலை சீரமைத்து, குடைவரைகளையும் கட்டினார்.
சோழர்கள்
[தொகு]ஒன்பதாம் நூற்றாண்டின் பின்பாதியில் திருச்சிராப்பள்ளியை இடைக்காலச் சோழ மன்னனான விஜயாலய சோழன் கைப்பற்றினார். கைப்பற்றி மீண்டும் சோழ சாம்ராஜ்யத்தை நிறுவினார். திருச்சிராப்பள்ளியை சோழ மண்டலத்தின் தலைநகராக மாற்றினார். அதன்பிறகே திருச்சிராப்பள்ளி மகிமை அடையத் தொடங்கியது. ஒன்பதாம் நூற்றாண்டில் தொடங்கி சோழர்கள் தனது அதிகாரங்களை பிரித்து உறையூரிலும், ஸ்ரீரங்கத்திலும் சிறுசிறு நிர்வாக நகரங்களை நிறுவினர். இது இடைக்காலச் சோழர்களின் கடைசி அரசனான முதலாம் குலோத்துங்கன் வரை நீண்டது. பின்னர் இடைக்காலச் சோழர்கள் தொடர்ச்சியான போர்களால் நலிவுற்றனர்.
பாண்டியர்கள்
[தொகு]1296 வரை போசளப் பேரரசின் கல்வெட்டுக்கள் திருச்சியில் இருந்தாலும், ஸ்ரீரங்கத்தில் முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் 1260 இல் வென்றதாகக் கூறப்படுகிறது. 1264 இல் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் போசள மன்னன் வீர சோமேஸ்வரனை போரிட்டு வென்றதாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கின்றது. முதலாம் மாறவர்மன் குலசேகரன், இரண்டாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன், இரண்டாம் மாறவர்மன் குலசேகரன் ஆகிய பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுகள் திருச்சியில் கிடைத்துள்ளன.[1] அரியணைக்காக 1310 இல் பாண்டிய மன்னனான முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் அவரது சொந்த மகனான சுந்தரபாண்டியனால் கொலை செய்யப்படுகிறார். ஆனால் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் இன்னொரு மகனான வீர பாண்டியன் அரியணை ஏறுகிறார். இதனால் கோபமடைந்த சுந்தரபாண்டியன் டெல்லி சுல்தானின் படைத் தலைவரான மாலிக் கபூரின் உதவியுடன் பாண்டிய ராஜ்யத்தை கவிழ்க்க முற்படுகிறான். 1311இல் மாலிக் கபூர் பாண்டிய ராஜ்யத்தை வெல்கிறார்.[2]
நாயக்கர் ஆட்சி
[தொகு]1500 களில் விஜயநகரப் பேரரசு வீழ்ச்சி அடைய ஆரம்பித்தவுடன் நாயக்கர்கள் சுதந்திரமாக செயல்படத் தொடங்கினர். முதல் சுதந்திர நாயக்க மன்னரான விஸ்வநாத நாயக்கர் 1538 முதல் 1563 வரை திருச்சிராப்பள்ளியை ஆண்டார். நாயக்கர்களின் காலத்தில் திருச்சிராப்பள்ளி ஐந்து பாளையங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை உடையார்பாளையம், அரியலூர், மருங்காபுரி, துறையூர், கடலூர். இவர்கள் திருச்சியை சுற்றியுள்ள பல கோயில்களில் மண்டபங்களைக் கட்டினர். 1616 இல் முத்துவீரப்ப நாயக்கர் தலைநகரத்தை மதுரையில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு மாற்றினார். முத்து வீரப்ப நாயக்கருக்கு பிறகு அரியணை ஏறிய திருமலைநாயக்கர் மீண்டும் தலைநகரத்தை மதுரைக்கு 1634 இல் மாற்றினார். 1665 இல் சொக்கநாத நாயக்கர் மீண்டும் மதுரையிலிருந்து திருச்சிராப்பள்ளியை தலைநகரமாக ஆக்கினார். சொக்கநாத நாயக்கர் பாதி திருமலை நாயக்கர் மகாலை இடித்து விட்டார். புதியதாக ராணி மங்கம்மாள் மஹால் என்று ஒன்றை நிறுவுவதற்காக அவர் இவ்வாறு செய்தார். திருச்சியை ஆண்ட கடைசி நாயக்க மன்னர் மீனாட்சி ஆவார்.