திமீத்திரி மக்சூத்தொவ்
திமீத்திரி திமித்திரியேவிச் மக்சூத்தொவ் Dmitri Dmitrievich Maksutov | |
---|---|
திமீத்திரி திமித்திரியேவிச் மக்சூத்தொவ் (Dmitry Dmitrievich Maksutov, உருசியம்: Дми́трий Дми́триевич Максу́тов) (23 ஏப்ரல் [யூ.நா. 11 ஏப்ரல்] 1896 – 12 ஆகத்து 1964) ஒரு சோவியத், உருசிய ஒளியியல் பொறியாளரும் பயில்நிலை வானியலாளரும் ஆவார். இவர் மக்சியூதவ் தொலைநோக்கி வடிவமைத்து பெயர்பெற்றவர்.
வாழ்க்கை
[தொகு]இவர் 1896 இல் நிகோலயேவில் அல்லது [1] உருசியப் பேரரசில் ஒதேசா துறைமுகத்தில் பிறந்தார்.[1][2] இவரது தந்தையார் கருங்கடல் படையணியில் பணிபுரிந்த நாவாயியல் அலுவலர். இவர் நெடிய நாவாயியல் பட்டறிவுடைய குடும்பக் கால்வழியினர். இவரது கொள்ளுப் பாட்டனார் பீட்டர் இவனோவிச் மக்சியூதவ் தன் போர்களில் காட்டிய வல்லமைக்காக இளவரசர் பட்டம் பெற்றவர். இவரது பாட்டனார் திமித்ரி பெத்ரோவிச் மக்சியூதவ் உருசிய-அமெரிக்கப் பகுதியாகவிருந்த அலாசுக்காவின் ஆளுநராக, அப்பகுதியை அமெரிக்கா 1867 இல் விலைக்கு வாங்குவதற்கு முன்பு திகழ்ந்தவர் .
இவர் இளம்பருவத்தில் இருந்தே வானியலில் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் தன் பன்னிரண்டாம் அகவையிலேயே 7.2 அங்குல/180மிமீ நீள ஒளித்தெறிப்புவகைத் தொலைநோக்கியைச் செய்துள்ளார். பின்னர் இவர் பெயர்பெற்ற உருசிய ஒலியியலாளரான அலெக்சாந்தர் ஆந்திரியேவிச் சிக்கினின் நூல்களைப் படித்துள்ளார். அவரைத் தன் ஆசிரியராக வரித்துக் கொண்டார். இவர் மேலும் சீரிய 10 அங்குலத் தெறிப்பு வகைத் தொலைநோக்கியை உருவாக்கி ஆழமான வானியல் நோக்கீடுகளில் ஈடுபட்டுள்ளார். இவர் தன் 15 ஆம் அகவையிலேயே உருசிய வானியல் கழக உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவர் மூன்று அண்டுகளுக்குப் பிறகு புனித பீட்டர்சுபர்கில் இருந்த நிகோலயேவ்பொறியியல் நிறுவனத்தில் (இப்போது படைத்துறைப் பொறியியல்-தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்) பட்டம் பெற்றார். இவர் 1921 முதல்1930 வரை ஒதேசா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் நிறுவனத்தில் வானியல்சார் ஒளியியல் துறையில் பணிபுரிந்துள்ளார்.
மக்சியூதவ் 1930 இல் வானியல்சார் ஒளியியல் ஆய்வகத்தினை இலெனின்கிராதில் அமைந்த வாவிலோவ் அரசு ஒளியியல் நிறுவனத்தில் நிறுவி, 1952 வரை வழிநட்த்தினார். இந்த ஆய்வகம் சோவியத் ஒன்றியத்தில் பலசிறந்த வானியலாளர்களின் புகலிடமாக விளங்கியது. இவர் 1932 இல் வெளியிட்ட Анаберрационные отражающие поверхности и системы и новые способы их испытания [பிறழ்வற்ற தெறிப்புப் பரப்புகளும் அமைப்புகளும் அவற்றை ஓர்வுசெய்யும் புதிய முறைகளும்] எனும் ஆய்வில், தளமற்ற இரட்டை ஆடி அமைப்புகளைப் பகுப்பாய்வு செய்து தான் 1924 இலேயே முன்வைத்த ஈடுசெய்யும் முறையை அறிமுகப்படுத்தினார். பின்னர், இம்முறை ஆடியைக் கட்டுப்படுத்தும் முறையாக நீழல் முறைக்கு இணையாக விளங்கியது. இந்த ஆய்வு இவரை 1944 இல் பேராசிரியராக்கியது. இவர்1946 முதல் சோவியத் ஒன்றியத்தின் அறிவியல் கலவிக்கழகத்தின் உயர்நிலை உறுப்பினர் ஆனார். இவர் 1952 இல் இருந்து இலெனின்கிராதில் இருந்த புல்கோவோ வான்காணகத்தில் பணிபுரிந்தார். இவர் 1964 இல் இலெனின்கிராதில் (இன்றைய புனித பீட்டர்சுபர்கில்) இறந்தார்.[2]
கண்டுபிடிப்புகள்
[தொகு]இவரது பெயர்பெற்ற மக்சியூதவ் தொலைநோக்கியை 1941 புதிதாகப் புனைந்தார். சுகிமிட் தொலைநோக்கியைப் போல மக்சியுதவ் கோளப் பிறழ்வை முதன்மை வில்லைக்கு முன்பாக ஒரு திருத்த வில்லையை வைத்துத் திருத்துகிறார். ஆனால் முன்னவர் ஒரு கோளமற்ற திருத்தியைக் கருவிழி முன்வைத்துப் பயன்படுத்த, இவரோ ஆழ்வளைமையுள்ள முழுவிட்ட எதிர்வில்லையைப் அதாவது வில்லைத் திருத்தக் கூடொன்றைப் பயன்படுத்துகிறார். இவர் இந்த வடிவமைப்பை 1944 இல் "Новые катадиоптрические менисковые системы" புதிய எதிருரு வில்லை அமைப்புகள் எனும் ஆய்வுக் கட்டுரையில் வெளியிட்டார்.[3] இது அவரது ஆய்வகத்திலும் சோவியத் ஒன்றிய வான்காணகங்களில் மட்டுமன்றி உலகமெல்லாம் பயன்படுத்தப்படுகிறது. பல வணிகத் தொலைநோக்கி நிறுவனங்கள் மக்சியூதவ்களை உருவாக்குகின்றன. இவற்றில் செலெசுடிரான், மியாடே, குவெசுடார் ஆகியவை அடங்கும்.
இவர் பொருள் வில்லைகளையும் ஆடிகளையும் பட்டகங்களையும் பல்வேறு நோக்கங்களுக்காக பல்வேறு உருவளவுகளில் செய்தவர். இவர் அயிற்ரு ஒளிப்படவியல் கருவியையும் ஊசி நுண்ணோக்கியையும் காற்றியக்கக் குழல்களுக்கான நீழல் கருவிகளையும் தொலைநோக்கிக் காட்சிவில்லைகளையும் மேலும் பல பிற கருவிகளையும் வடிவமைத்துச் செய்துள்ளார்.
விருதுகள்
[தொகு]- சுடாலின் பரிசு (1941, 1946)
- இரண்டு இலெனின் ஆணைகள் (1945,1958)
- தகைமைப் பட்டை ஆணை(1943)
- பிரசல்சு எக்சுபோ, '58 இல் கிரேண்டு பிரிக்சு பதக்கம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 http://www.springerlink.com/content/k7j14v2117168489/[தொடர்பிழந்த இணைப்பு] The Biographical Encyclopedia of Astronomers 2007, Part 13, 730-731, எஆசு:10.1007/978-0-387-30400-7_892, Maksutov, Dmitry Dmitrievich, by Alexander A. Gurshtein
- ↑ 2.0 2.1 Reflecting Telescope Optics, By Ray N. Wilson, page 498. Google Books, pg 498
- ↑ Dmitri Maksutov: The Man and His Telescopes பரணிடப்பட்டது 2012-02-22 at the வந்தவழி இயந்திரம் by Eduard Trigubov and Yuri Petrunin.
வெளி இணைப்புகள்
[தொகு]- Biography - on the website of Vavilov State Optical Institute
- Dmitri Maksutov: The Man and His Telescopes பரணிடப்பட்டது 2012-02-22 at the வந்தவழி இயந்திரம்