உள்ளடக்கத்துக்குச் செல்

தாய்வானின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாய்வானின் வரலாறு, இத்தீவில் மனிதர் வாழ்ந்ததற்கான சான்றுகளின் அடிப்படையில் பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடங்குகிறது.[1][2] கிமு 3000 ஆண்டளவில் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட பண்பாடொன்றின் சடுதியான தோற்றம் இன்றைய தாய்வான் முதுகுடியினரின் மூதாதையர்களின் வர்கையை வெளிப்படுத்துவதாக நம்பப்படுகின்றது.[3] 17 ஆம் நூற்றாண்டில் இத்தீவை ஒல்லாந்தர் கைப்பற்றினர். தொடர்ந்து, தாய்வான் நீரிணையூடாகப் பெருமளவு ஹக்கா குடியேறிகள் உள்ளிட்ட பெருமளவு ஹான் சீனர்கள் பூசியான், குவாங்டோங் போன்ற சீனப் பகுதிகளிலிருந்து தாய்வானுக்கு வந்தனர். குறுகிய காலம் இசுப்பானியர்கள் வடக்கில் ஒரு குடியேற்றத்தை அமைத்தனராயினும் 1642 ஆம் ஆண்டில் ஒல்லாந்தர் அவர்களைத் துரத்திவிட்டனர்.

1644 இல், சீனத் தலைநிலத்தின் கட்டுப்பாட்டை இழந்துவிட்ட மிங் வம்சத்தின் நம்பிக்கைக்கு உரியவரான கோசிங்கா என்பவர், 1662 இல் ஒல்லாந்தரைத் தோற்கடித்துத் தாய்வான் தீவில் ஒரு தளத்தை அமைத்துக்கொண்டார். அவரது படைகள் 1683 இல் சின் வம்சத்தினரிடம் தோல்வியுற்றன. அத்துடன், தாய்வானின் ஒரு பகுதி பெரும்பாலும் சின் பேரரசுடன் ஒன்றிணைக்கப்பட்டே இருந்தது. சீன - சப்பானியப் போரைத் தொடர்ந்து 1895 இல் சின் அரசு, பெங்குவுடன் சேர்த்து தாய்வான் தீவையும் உடன்படிக்கைப்படி சப்பானியப் பேரரசிடம் இழந்தது. தாய்வானில் அரிசி, சர்க்கரை என்பவற்றை உற்பத்தி செய்து சப்பானியப் பேரரசுக்கு அனுப்பினர். அத்துடன், இரண்டாம் உலகப் போரின்போது, தென்கிழக்காசிய நாடுகளையும், பசுபிக் பகுதிகளையும் கைப்பற்றுவதற்குத் தாய்வானை சப்பான் ஒரு தளமாகவும் பயன்படுத்தியது.

1945 இல், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் குவோமிந்தாங்கின் தலைமையிலான சீனக் குடியரசு தாய்வானைத் தனது கட்டுப்பாடுக்குள் வைத்திருந்தது. சீன உள்நாட்டுப் போரில் 1949 ஆம் ஆண்டு சீனத் தலைநிலத்தின் கட்டுப்பாடை இழந்த குவோமிந்தாங் தலைமையிலான சீனக் குடியரசு அரசாங்கம் தாய்வானுக்குப் பின்வாங்கியதுடன் சியாங் கை சேய்க் இராணுவச் சட்டத்தையும் நடைமுறைக்குக் கொண்டுவந்தார். குவோமிந்தாங், தாய்வானையும் தாய்வான் நீரிணைக்கு எதிர்புறம் இருந்த கின்மென், வுக்கியு, மாசுத்து ஆகிய தீவுகளையும், 1980களின் மக்களாட்சியை நோக்கிய சீர்திருத்தங்கள் வரை, ஒரு கட்சி அரசாக 40 ஆண்டுகள் ஆட்சி செய்தது. 1996 இல் நேரடியான சனாதிபதித் தேர்தல் அறிமுகமானது. போருக்குப் பிந்திய காலத்தில் தாய்வானில் விரைவான தொழில்மயமாக்கமும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட்டு "நான்கு ஆசியப் புலிகள்" எனப்படும் நான்கு நாடுகளுள் ஒன்றானது.

குடியேற்றத்துக்கு முந்திய காலம்

[தொகு]

பிளீசுத்தோசீன் காலத்தில், கடல் மட்டம் இப்போது இருப்பதிலும் 140 மீட்டர்கள் தாழ்வாக இருந்ததால், தாய்வான் நீரிணையின் ஆழம் குறைந்த பகுதிகள் தலைநிலத்துக்கும் தாய்வானுக்கும் இடையில் ஒரு நிலப் பாலமாக அமைந்திருந்தது. இதன் ஊடாக விலங்குகள் இரண்டு பகுதிகளுக்கும் இடையில் போய்வந்தன.[4] மனிதர் தாய்வானில் வாழ்ந்ததற்கான மிகப்பழைய சான்றுகளில், தாய்வானின் சுவோசென் மாவட்டத்தில் உள்ள சோக்கு, காங்சிலின் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட மூன்று மண்டையோட்டுத் துண்டுகளும், ஒரு கடைவாய்ப் பல்லும் அடங்குகின்றன. இவை 20,000 தொடக்கம் 30,000 வரையான ஆண்டுகள் பழமையானவை.[1][5] பழமையான பொருட்களுள் பழங்கற்காலக் கற்கருவிகள் சாங்பின்னில் உள்ள நான்கு குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டன. இவை 15,000 தொடக்கம் 5,000 ஆண்டுகள் வரை பழமையானவை. இவை பூசியானில் உள்ள சமகாலக் களங்களை ஒத்தவை. இதே பண்பாடு தாய்வானின் தெற்கு முனையில் உள்ள எலுவன்பியிலும் காணப்பட்டுள்ளது. இது 5,000 ஆண்டுகளுக்கு முன்புவரை நிலைத்திருந்தது.[2][6] ஹொலோசீன் காலத் தொடக்கத்தில் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர்கடல் மட்டம் உயர்ந்துதாய்வான் நீரிணையை உருவாக்கித் தாய்வானை ஆசியத் தலைநிலத்தில் இருந்து பிரித்துவிட்டது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்வானின்_வரலாறு&oldid=3792785" இலிருந்து மீள்விக்கப்பட்டது