உள்ளடக்கத்துக்குச் செல்

தழை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தழை என்பது சங்ககால மகளிரின் அணிகலன். உடுத்திக்கொள்ளும்போது அது தழையாடை. தொடுக்கும்போது அது தழையாடை தைக்கும் விளையாட்டு. உடலில் பூணும்போது அது தழையணி. தலையில் செருகிக்கொள்ளும்போது அது தழைப்பூ. [1] 'தழையைக் காதலன் தன் காதலிக்கு விலையாக [2] நல்குவான்.

நெய்தல் நில மகளிர் தழையாடையைப் பெரிதும் விரும்புவர். கழியில் பூத்த பூவைத் தலையிலும், ஞாழல் தழையாடையை இடுப்பிலும் ஒருத்தி அணிந்திருந்தாள். [3] [4]

மகளிர் இடையில் அணிந்து கொண்ட ஆடை தழையாடை. [5] சங்ககால மகளிர் தாம் உடுத்தியிருந்த ஆடைக்கு மேல் ஒப்பனை ஆடையாகத் தழையாடையை உடுத்திக்கொண்டனர். இது ஆடைக்கு மேல் இடுப்பில் அணிந்துகொள்ளும் மணிமேகலை போன்றதோர் அணியாடை. தழையாடையை 'முறி' [6] எனவும் வழங்கினர். தழையும், தளிர்முறியும், பூங்கொத்துகளும் தழையாடையை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டன. காதலன் காதலிக்குப் பரிசாக வழங்கிய தழல், தட்டை, குளிர் என்னும் விளையாட்டுப் பொருள்கள். அவள் தினைப்புனம் காக்கும்போது பறவைகளை ஓட்டப் பயன்பட்டன. அவன் தந்த 'முறி' அவள் ஒப்பனை செய்துகொள்ளப் பயன்பட்டது. [7]

மகளிர் மலர் இல்லாத காலத்தில் ஞாழல் தழையைத் தலையில் அணிந்து ஒப்பனை செய்துகொள்வர். தலைவன் தலைவிக்கு பரிசு விலையாகத் தழையாடை நல்கும் வழக்கம் உண்டு. [8] காவி [9] நெய்தல் [10] முதலான தழைகள் தழையாடை தைக்கப் பயன்படுத்தப்பட்டன.

காதலன் தைத்துக் காதலிக்குத் தருவான். [11] மகளிர் தாமே தளிர்களைப் பறித்துத் தழையாடை தைத்து இடுப்பில் அணிந்துகொள்வர். [12]

பழையர் இனத்தவர் தழையாடையுடன் காணப்பட்டனர். [13] பரதவர் மகளிர் உண்டாட்டு விழாவின்போது தழையாடை உடுத்திக்கொண்டனர். [14]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. உடுத்தும், தொடுத்தும், பூண்டும், செரீஇயும்,
    தழை அணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி,
    விழவொடு வருதி, நீயே (குறுந்தொகை 295)
  2. பரிசம் போடும் விலையாக
  3. கழிப் பூத் தொடர்ந்த இரும் பல் கூந்தல்,
    கானல் ஞாழல் கவின் பெறும் தழையள். (ஐங்குறுநூறு 191)
  4. தழையோர் கொய்குழை அரும்பிய குமரி ஞாழல் (நற்றிணை 54)
  5. பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல் (நற்றிணை 8)
  6. தளிர் முறியால் செய்யப்பட்டது முறி.
  7. தழலும் தட்டையும் முறியும் தந்திவை
    ஒத்தன நினக்கெனப் பொய்த்தன கூறி (குறுந்தொகை 223)
  8. எக்கர் ஞாழல் மலர் இல் மகளிர்
    ஒண் தழை அயரும் துறைவன்
    'தண் தழை விலை' என நல்கினன், நாடே. (குறுந்தொகை 147)
  9. காவி அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇ (நற்றிணை 123)
  10. நெய்தல் அம் பகை நெறித் தழை அணி பெறத் தைஇ, (நற்றிணை 96)
  11. தழையும் தாரும் தந்தனன் (நற்றிணை 80)
  12. கிளையிதழ் பறியாப், பைவரி யல்குற் கொய்தழை தைஇ (குறிஞ்சிப்பாட்டு அடி 101)
  13. பைங் குழைத் தழையர் பழையர் மகளிர் (அகநானூறு 331)
  14. பரதவர பைந்தழைமா மகளிரொடு பாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லாது உவவுமடிந் துண்டாடியும் (பட்டினப்பாலை 91)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தழை&oldid=3208474" இலிருந்து மீள்விக்கப்பட்டது