தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில் (தலைமலை நல்லேந்திர வரதராஜ பெருமாள்)என்பது தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி - நாமக்கல் மாவட்டங்களின் இடையே உள்ள தலைமலையில் உள்ள பெருமாள் கோயிலாகும்.

பெயரியல்[தொகு]

இலங்கையில் இராவணனுடன் நடந்த போரின்போது மூர்ச்சையடைந்து விழுந்த இலட்சுமணனை காக்க அனுமன் தூக்கிச் சென்ற மூலிகைகள் நிரம்பிய சஞ்சீவி மலையில் இருந்த மூலிகைகளின் வாசத்திலேயே லட்சுமணன் குணமடைந்துவிட்டார். அந்த மகிழ்ச்சியில், மலையை ஆஞ்சநேயர் வீசியெறிந்ததாகவும், அது 7 துண்டுகளாகச் சிதறி விழுந்ததாகவும் அவற்றில் ஒன்று இந்த தலைமலை எனவும் கூறப்படுகிறது. மலையின் தலை போன்ற உச்சி சிகரத்தில் பெருமாள் கோயில் உள்ளதால் தலைமலை எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.[1]

தலை மலை[தொகு]

கிழக்குத் தொடர்ச்சி மலைகளில், நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது தலைமலை காப்புக்காடு. இதன் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதி திருச்சி மாவட்டத்தின் எல்லையில் உள்ளது. மூலிகை உட்பட பல்வேறு வகையான செடிகள், மரங்கள் நிறைந்ததாக இந்த மலை காணப்படுகிறது. இந்தக் காப்புக்காட்டில் சுமார் 3,200 அடி உயர மலையில் சஞ்சீவிராய பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

பாதை[தொகு]

இக்கோயிலுக்குச் செல்ல நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி, வடவத்தூர், செவிந்திப்பட்டி, திருச்சி மாவட்டம் நீலியாம்பட்டி, சஞ்சீவிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து உள்ள ஐந்து பாதைகள் வழியாக கரடுமுரடான, செங்குத்தான மற்றும் சில இடங்களில் மிகவும் ஆபத்தான பாதையைக் கடந்து ஏறக்குறைய ஏழு கிமீ தொலைவுக்கு நடந்து மலை உச்சிக்குச் செல்ல முடியும். கீழிருந்து வரும் அனைத்துப் பாதைகளும் தலைமலையில் இருந்து சுமார் ஒரு கிமீ கீழே உள்ள கருப்பண்ணசாமி கோயிலில் ஒன்று சேர்கின்றன.

கோயில்[தொகு]

நாயக்க மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் கோயிலில், உள்ள இறைவன் தானாய் வளர்ந்த தலைமலை சஞ்சீவிராயன் என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறார். இந்த இறைவனான நல்லேந்திர பெருமாள் சுயம்புவாக எழுந்தருளியவராக கருதப்படுகிறார். மேலும் வெங்கடாஜலபதி, ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய தெய்வங்கள் மூலவர்களாகவும், சீனிவாச பெருமாள், ருக்மணி, சத்யபாமா ஆகிய தெய்வங்கள் உற்சவர்களாகவும் உள்ளனர். இவர்களுக்கு தென்புறத்தில் அலமேலுமங்கை தாயார் மூலவராகவும், மகாலட்சுமி உற்சவராகவும் உள்ளனர். பெரும்பாலும் சனிக்கிழமைகளில் மட்டுமே கோயிலுக்கு பக்தர்கள் வருகிறார்கள். தலைமலை உச்சியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலர் கோயிலுக்கு வெளிப்புறத்தில் ஒரு பாதம் மட்டுமே வைக்கும் அளவுக்கு சுமார் 4 அங்குலம் அகலமே உள்ள சுவரின் விளிம்பில் உயிரைப் பணயம் வைத்து நடந்து வலம்வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மிகவும் ஆபத்தான இந்தச் செயலை தலைமலை கிரிவலம் என்று கூறுகின்றனர். இவ்வாறு கிரிவலம் சென்றசிலர் தவறி விழுந்து இறந்துள்ளனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஜெ.ஞானசேகர் (20 அக்டோபர் 2017). "திருச்சி - நாமக்கல் இடையே மூலிகைகள் நிறைந்த சஞ்சீவி பர்வதம் என போற்றப்படும் தலைமலையின் பெருமையைக் குலைக்கும் ஆபத்தான கிரிவலம்". செய்திக் கட்டுரை. தி இந்து தமிழ். 21 அக்டோபர் 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. "திருச்சி அருகே தலைமலையில் கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு". செய்தி. தி இந்து தமிழ். 2017 க்டோபர் 17. 21 அக்டோபர் 2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)