தர்பாரா சிங்
தர்பாரா சிங் (Darbara Singh, பெப்ரவரி 10, 1916 — மார்ச்சு10, 1990) சூன் 6, 1980 முதல் அக்டோபர் 10, 1983 வரை பஞ்சாபின் முதலமைச்சராக பொறுப்பாற்றியவர். இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்களில் ஒருவர்.
விடுதலை இயக்கத்திலும் மாகாண அரசியலிலும்
[தொகு]சர்தார் தர்பாரா சிங் பஞ்சாபின் அமிருதசரசு மாவட்டத்தில் ஜண்டியாலா என்றவிடத்தில் ஜாட் நிலக்கிழார் சர்தார் தலீப் சிங் ஜோகல் குடும்பத்தில் பிறந்தார். இவர் அமிருதசரசில் உள்ள கால்சா கல்லூரியில் கல்வி கற்று விடுதலைப் போராட்டத்தில் ஈட்பாடு கொண்டார். இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் வெள்ளையனே வெளியேறு போராட்டங்களில் பங்கேற்று பல முறை சிறை சென்றார்.
இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஏதிலி முகாம்களை ஒருங்கிணைப்பதில் பங்கேற்றார். 1946 முதல் 1950 வரை ஜலந்தர் காங்கிரசு கட்சியின் தலைவராக பொறுப்பேற்று பின்னர் பஞ்சாப் மாநில செயற்குழுவில் பொதுச் செயலராக (1953-56) பணியாற்றினார். 1957 முதல் 1964 வரை மாநில கட்சித் தலைவராகவும் பணியாற்றினார். 1952 முதல் 1969 வரை பஞ்சாப் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். அச்சமயம் வேளாண்மை, வளர்ச்சி, உள்துறை அமைச்சுப் பொறுப்புக்களை வகித்துள்ளார்.
தேசிய அளவில் 1954இல் அனைத்திந்திய காங்கிரசு குழுவில் உறுப்பினரானார். 1962இலிருந்து காங்கிரசு செயற்குழுவில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1990இல் தமது மரணம் வரை நீடித்திருந்தார். நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு 1971இல் ஹோஷியார்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். நடுவண் அரசில் அமைச்சராகப் பங்கேற்காத போதும் காங்கிரசு கட்சியின் மக்களவை உதவித் தலைவராக நியமிக்கப்பட்டார். 1975இல் பொது கணக்குக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.
முதலமைச்சர்
[தொகு]1980இல் நடந்த மாநிலத் தேர்தல்களில் நகோதரிலிருந்து சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெப்ரவரி 17, 1980இல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 1980களில் பஞ்சாபில் காலிஸ்தான் தனிநாடு கோரிக்கை வலுப்பெற்று வன்முறை மிகுந்த போராட்டம் நடைபெற்று வந்தது. சலந்தரிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த பஞ்சாப் கேசரி செய்தித் தாள்களின் தலைவர் லாலா ஜகத் நாராயண் படுகொலை செய்யப்பட்டார். அடுத்து காவல்துறை துணைத் தலைமை ஆய்வாளர் அவதார் சிங் அத்வால் பொற்கோயில் வளாகத்தில் கொல்லப்பட்டார். தீவிரவாத இயக்கத்தின் வன்முறைச் சம்பவங்கள் கூடிவந்ததால் தர்பாராசிங் அமைச்சரவை பதிவி விலகியது; சூன் 6, 1983 அன்று குடியரசுத் தலைவர் ஆட்சி அறிவிக்கப்பட்டது.
நடுவண் அரசுக்கு மீளுதல்
[தொகு]1984இல் மாநிலங்களவைக்குத் தர்பாராசிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். உட்கட்சி விவகாரங்களில் பல சிக்கல்களைத் தீர்க்க பெரிதும் உதவி புரிந்தார்.
உசாத்துணைகள்
[தொகு]1. Harjinder Singh Dilgeer, SIKH TWAREEKH (Sikh History in Punjabi in 5 volumes), Sikh University Press, Belgium, 2007.
2. Harjinder Singh Dilgeer, SIKH HISTORY (in English in 10 volumes), Sikh University Press, Belgium, 2010-11.
3. Rajya Sabha 'Brief Biographical Sketch 1952-2003' http://rajyasabha.nic.in/rsnew/pre_member/1952_2003/s.pdf