தமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எழுத்துரு மாற்ற வரலாறு
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் எழுத்துக்கள், குற்றாலம் தொல்லியல் அருங்காட்சியகம்

எழுத்து என்பது ஒரு மொழியின் அடிப்படை கூறு ஆகும். மொழிக்கு நிலைபேறு அளிப்பது எழுத்தாகும். ஒலி வடிவத்திற்கு வரிவடிவம் கொடுப்பது எழுத்து என்பர். எழுதப் படுவதனால் எழுத்து எனப் பெயர் பெற்றது. தமிழ் மொழி என்பது செம்மொழியாகவும் பண்டைகாலம் தொட்டே சிறந்த இலக்கண, இலக்கியங்கள் பெற்ற மொழியாகவும் உள்ளது. அவ்வாறான தமிழ் எழுத்துக்கள் படிப்படியாக சில மாறுதல்களைப் பெற்றே இன்றைய எழுத்து மொழியாக உருவம் பெற்றிருக்கின்றன.

மொழியின் தோற்றம்.[தொகு]

மொழியின் தோற்றம் குறித்த ஆய்வுகள் இன்னும் நடந்த வண்ணமே உள்ளன. மொழி காலந்தோறும் மாறும் இயல்புடையது. ஒவ்வொரு கால கட்டத்திலும் மொழி எவ்வாறு அமைந்துள்ளது என விளக்கி, காலப் போக்கில் அம்மொழி அடைந்த வளர்ச்சியையும் மாற்றங்களையும் ஆய்வது மொழியியலின் ஒரு பிரிவு ஆகும்.இது மொழி வரலாறு எனப்படுகிறது.

ஆட்டோ எஸ்பெர்சன், புளூம்பீல்டு, விட்னே, கால்டுவெல் முதலிய அயல் நாட்டாரும், ஏராளமான தமிழறிஞர்களும் மொழி குறித்த ஆய்வுகள் மேற்கொண்டனர். மொழியைப் பற்றி விரிவாக எழுதப் புகுந்த எஸ்பெர்ஸன் (Gesperson) அவர்கள்,

" மனிதன் முதலில் தான் கண்ட பொருளுக்கு பெயர் வைக்கத் தெரியாத விலங்கு நிலையில் இருந்தான்; தன் இனத்தவருடன் பேச இயலாதவனாக இருந்தான்; பின்னர் நாளடைவில் அறிவையும் அனுபவத்தையும் பிறரிடம் சொல்வதற்காக அப்பொருளின் உருவத்தினைச் சித்தரித்துக் காட்டினான்; அதன் பிறகு பொருளின் பண்புகளை தன் செய்கையால் அறிவித்து அதனைப் பெற்று வந்தான்; மூன்றாவதாக குறுக்கெழுத்துப் போல ஒரு பொருளுக்கு ஒரு எழுத்து இட்டு வழங்கினான்; அடுத்து எழுத முடியாமல் பேச்சு வகையால் சொற்றொடர்களைக் குறித்த அடையாளம் தந்தான். இங்ஙனம் மொழியானது உருப்பெறுகிறது" எனத் தம் அரிய ஆராய்ச்சி நூலில் விளக்கமாகக் கூறியுள்ளார்.[1]

எழுத்துகளின் வளர்ச்சி நிலைகள்[தொகு]

மேற்கண்ட கூற்றினைக் கொண்டு எழுத்துகளின் வளர்ச்சியை

 1. சித்திரவெழுத்து
 2. தன்மையெழுத்து
 3. உணர்வெழுத்து
 4. ஒலியெழுத்து

என நான்காகக் கொள்ளலாம். இதனை நன்னூல், எழுத்தியல் ஈற்றுச் சூத்திர உரையில் மயிலைநாதர் என்னும் உரையாசிரியர் விளக்கமாகக் கூறியுள்ளார். யாப்பருங்கல விருத்தி என்னும் நூலில் உரையாசிரியர் சில வேறுபாடுகளுடன் வேறு பல எழுத்து வகைகளையும் குறிக்கிறார். " பார்ப்பான் வழக்காகிய பதின்மூன்றெழுத்தும் ....... கட்டுரை எழுத்தும், வச்சிரம் முதலிய வடிவெழுத்தும் மற்றும் பல வகையாற் காட்டப்பட்ட எல்லா எழுத்தும் வல்லார்வாய்க் கேட்டுணர்க " (பக்கம். 568,569) என்று கூறியிருத்தல் நோக்கத்தக்கதாகும்.

மேற்கூறிய நால்வகை எழுத்துகளுள்

உருவெழுத்து[தொகு]

உருவெழுத்து (சித்திர எழுத்து முறை) சிந்துவெளித் மக்களிடம் ,ஹீராஸ் பாதிரியார் கூறுகிறார். இவற்றைப் பழைய எகிப்தியரும் பாபிலோனியரும் வழங்கி வந்தனர். உலக வரலாற்றிலேயே மொழி வளர்ப்பதற்காக அரசன் முன்னிலையில் சங்கம் நிறுவிய வரலாறு தமிழுக்கு மட்டுமே உண்டு. முதலில் தென் மதுரையில் தமிழ்ச்சங்கம் தோற்றுவித்தவன் பாண்டியன் காய்சினவழுதி. இந்த முதல் தமிழ் சங்கத்தில் கையால் எழுதாமல் வாய்மொழியாகவே இலக்கியம் வளர்த்து இருக்க வேண்டும் எனினும் சிலவற்றை மறவாமல் குறித்து வைக்கும் சூழல் வந்ததால் ஓவியமாக எழுதப்படும் ஒரு விழுதை முதல் தமிழ்ச் சங்கப் புலவர்கள் உருவாக்கிக் கொடுத்தனர் இன் அந்த ஒரு எழுத்துக்களில் சில இரண்டாம் தமிழ் சங்க காலத்திலும் பின்பற்றப்பட்டன கடல் கொண்ட குமரி நாட்டு மக்களிடம் இருந்து பிரிந்த சீன மக்கள் இந்த ஒரு எழுத்து முறையை கொண்டு போயிருக்கலாம் சிந்து வெளியில் உள்ள எழுத்துக்கள் சில சீன நாட்டு படை எழுத்துக்களை ஓரளவு ஒத்திருக்கின்றன இக்காலத்தில் அவற்றின் ஒலிப்பு முறை வேறாக இருந்தாலும் தோன்றிய காலத்தில் ஒலிப்புமுறை ஒன்றாக இருந்திருக்க கூடும் உலக மொழிகளில் எழுத்துக்கள் தொடக்கத்தில் எழுத்து எனும் ஓவிய எழுத்தாக இருந்த பின்னர் தனி எழுத்தான வரலாறு தெரிகிறது ஆனால் பாண்டியன் வெண்தேர் செழியன் காலத்தில் ஒரு எழுத்துக்களை தமிழ் புலவர்கள் தனி எழுத்தாக மாற்றாமல் அதை எழுத்தாக மாற்றி விட்டனர் இதன் காரணத்தை நன்கு புரிந்துகொள்ளவேண்டும் இரண்டாம் தமிழ் சங்க காலத்தில் தமிழை தமிழாக வளர்த்தனர் இசை தமிழுக்கு முதன்மை கொடுத்தனர் நீண்ட செய்திகளை எழுதி வைப்பதற்கு போதிய இடம் இல்லாததால் அனைத்தையும் மனப்பாடம் செய்வதற்கு இசைவடிவில் வழியில் செய்யுளே ஏற்றதா ஏற்றது ஆதலால் ஓவிய எழுத்து வடிவத்தை நேரசை நிரையசை வடிவங்களால் அமைத்தனர் இதன்படி இரு குறில் எழுத்துகளை சேர்த்து நெடில் எழுத்து உருவாகின்றனர் எழுதினால் ஆகும் இந்த வழக்கம் சிந்துவெளி முத்திரைகள் இருப்பதை எடுத்துக்காட்டலாம் இரண்டு எழுத்துக்கள் ஒரு குறியீடு எனும் அசை எழுத்து முறை கிணங்க கடல் எனும் பெயரில் கடல் என ஆண்பால் குறிக்கும் வீட்டுக்கு தனிக் குறியீடு அமைத்தனர் அரை மாத்திரை குறித்த ஒரு பக்க கூடும் ஒரு மாத்திரையை குறைக்க இருக்கக்கூடும் ஆளப்பட்டுள்ளன இசையை முதன்மைப்படுத்தி அவர்களே எழுத்துக்கு மாத்திரை அளவு முக்கிய நேரத்தை வகுக்க முடியும் உலகில் வேறு எந்த மொழியினரும் எழுத்துக்களை ஒலிப்பதற்கு உரிய காலத்தை மாத்திரை அளவாக குறிப்பிட்டு காட்டவில்லை இயற்றமிழ் ஆள்வதற்கு மாத்திரை அளவு தேவையில்லை காலத்தை அடிப்படையாகக் கொண்ட இசை தமிழுக்கு நேர வரம்பு கட்டாயம் தேவைப்படுகிறது இதற்காகவே இரண்டாம் தமிழ் சங்க காலத்தில் அசை எழுத்து தமிழுக்கு உருவாக்கித் தந்துள்ளனர் சிந்துவெளி முத்திரைகள் அனைத்திலும் அந்த எழுத்து காணப்படுவது மட்டுமின்றி ஈழத்தில் தமிழ் தமிழகத்திலும் ஆந்திரம் மலையாளம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் கிடைத்துள்ள பானை ஓடுகள் பாறை ஓவியங்கள் ஆகியவற்றில் அசை எழுத்து வடக்குநோக்கி பரவியுள்ளது என்பதற்கான சான்றுகள் உள்ளன ஏனைய மொழிகளில் தொடக்ககால எழுத்துக்களை உண்டாக்கியவர்கள் யார் என்று கண்டறிய முடியாது ஆனால் தமிழில் உரிமத்தையும் அசை எழுதியும் கண்டு பிடித்தவருக்கு உய்த்துணர முடிகிறது.

உணர்வெழுத்து[தொகு]

உணர்வெழுத்து என்பவை சீனர்களின் பண்டைய எழுத்து முறையாகும்.

தன்மையெழுத்து[தொகு]

தன்மையெழுத்து எகிப்தியர்களிடம் கணப்பட்டதாகும்."அறிவு நுட்பத்திற்கு கண்ணும் எறும்பும், அறிவின்மைக்கு ஈயும், நன்றியின்மைக்கு விரியன் பாம்பும், வெற்றிக்குக் கருடனும் பிறவுமாம்....[2].

ஒலியெழுத்து[தொகு]

ஒலியெழுத்து என்பது ஒலிக்கு வடிவம் தந்து எழுதப்படுவது. இவ்வெழுத்துக்களுக்கே தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்கள் இலக்கணம் கூறுகின்றன.[3]

கண்ணெழுத்துக்கள்[தொகு]

கண்ணெழுத்துக்கள் என்பன சித்திர எழுத்துக்கள் ஆகும். சங்க காலத்தில் கண்ணுள் வினைஞர்- சித்திரக் காரிகள் எனப்பட்டனர். இதற்கு 'நோக்குனர் கண்ணிடத்தே தம் தொழிலை நிறுத்துவோர்' என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறுகிறார். எழுதுதல் என்பதற்குச் சித்திரித்தல்' என்ற பழைய பொருளும் உண்டு.

சங்க காலத்தில் கண்ணெழுத்து என்ற ஒருவகை எழுத்து வழக்கில் இருந்ததாக சிலப்பதிகாரம், குறிப்பிடுகிறது. காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்தில் 'இறக்குமதி ' ஆன மூட்டைகட்கும் பண்டம் ஏற்றிய வண்டிகட்கும் கண்ணெழுத்துக்கள் இடப்பட்டிருந்தனவாம்.

1."வம்ப மாக்கள் தம் பெயர் பொறித்த கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக் கடைமுக வாயில்" [4]
2."எய்யா வட வளத்து இரு பதினாயிரம் கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும்,[5]

என வரும் அடிகள் கண்ணெழுத்து பற்றிக் குறிப்பிடுகின்றன.
அரசாங்கத்தாருக்குத் திருமுகம் எழுதுவோர் கண்ணெழுத்தாளர் எனப்பட்டனர்.

கண்ணெழுத்தாளர் காவல் வேந்தன் மண்ணுடை முடங்கல் மன்னவர்க் களித்து" [6] இவற்றால்
 • கண்ணெழுத்து என்பது சங்க காலத்தில் வழங்கிய ஒருவகை எழுத்தின் பெயர் என்பதும்
 • வெளிநாட்டு வணிகர் (வம்ப மாக்கள்) தம் பெயர் முதலியவற்றை இந்த எழுத்துக்களிலேயே பொறித்து வந்தனர் என்பதும்
 • இவ்வெழுத்துக்களிலேயே அக்கால அரசர் திருமுகம் முதலியன எழுதப்பட்டு வந்தன என்பதும் அறியலாகிறது.

இந்தக் கண்ணெழுத்து கருத்தை வெளிப்படுத்தும் எழுத்து என்பது இவற்றால் தெளிவாகிறது. தமிழில் எழுதத் தெரியாதவர்கள் தம் கருத்தை வெளிப்படுத்த எழுதி வைத்த எழுத்துக்கள் என்பதனை மேற்கண்ட பாடல் சான்றுகள் தெளிவாக்குகின்றன.

இவ்வெழுத்துக்கள் முற்காலத்தே தமிழில் வழங்கியவை என்பதை சாசன இலாகாவினின்றும் வெளிவந்த புத்தகத் தொகுதிகளை நோக்குமிடத்து அறியலாம். இவை சங்கேத எழுத்து அல்லது கரந்தெழுத்துக்கள் எனவும் வழங்கப்பட்டன. கந்தருவ தத்தை சீவகனுக்குக் கரந்தெழுத்தில் கடிதம் வரைந்ததாகத் தம் காலத்தில் வழங்கிய இக்குறியீடெழுத்துக்களைக் கொண்டு திருத்தக்க தேவர் குறிப்பிட்டுள்ளார்.[7]

தமிழ் எழுத்துகளின் தொன்மை[தொகு]

"சிந்து, பாஞ்சால தேசங்களில் உள்ள ஹரப்பா,மொஹஞ்சதரோ என்ற ஊர்களிலே சமீபத்தில் கண்டறியப்பட்ட சுமேரியர் எழுத்துக்களாகக் கூறப்படுபவை, இச்சித்திர சங்கேதக் குறிகளாகும், 5000,6000 ஆண்டுகட்கு முற்பட்டவைகளாகவும் இவை உள்ளன என்பர். இதனால், அக்குறி எழுத்துக்கள் நம் தேசத்துக்கும் புறம்பானவை அல்ல என்பது தெளிவாகின்றது. அம்முறையில், நான் மேலே கூறிய எழுத்து வகைகளை நோக்குமிடத்து அப்புராதன மக்களில் தமிழரும் விலக்கப்பட்டவர் அல்லர் என்று கொள்ளக்கூடியதாம்." [8] என்ற மு. இராகவையங்கார் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழர் தம் எழுத்து நிலை நன்கு விளங்கும். மேலும் திரு பி.என். சுப்பிரமணியன் அவர்கள் "எழுத்துக்கள் நெடுங்கணக்கின் நிலையை அடைவதற்கு முந்திய காலங்களில் பெற்றிருந்த உருவங்களைப் பற்றிய குறிப்புகள் தமிழைத் தவிர வேறு இந்திய மொழிகளில் உள்ள இலக்கியங்களில் காணப்படவில்லை" [9] எனக் கூறுகிறார். இதனால் தமிழ் எழுத்துகள் பெற்றிருந்த சிறப்பு நிலை வளர்ச்சியின் காரணமாகவே அவை இலக்கியங்களில் குறிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் அறியலாம்.

தொல்காப்பியர் காலத்தில் எழுத்து நிலை[தொகு]

தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்டதான இராமாயண-பாரத காலத்தில்(கி.மு.1400-கி.மு.750) வடமொழியாளர் தமிழகத்தே சிறு தொகையினராக நுழைந்து நிலைபெறலாயினர். அவர் தம் வட மொழி தமிழில் சிறிதளவு கலக்கவும் பெற்றது. இக்காலத்தே வேங்கடத்திற்கும் வடக்கிருக்கும் நாடு(டெக்கான்) வட மொழி வயப்பட்டு, நாளடைவில் மாறி, தெலுங்கு, கன்னட மொழிகள் பெற்றதாக மாறியது. எனவே, தொல்காப்பியர் காலத்தில் "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்" எனத் தமிழகம் எல்லை பெற்றது. "வேங்கடத் தும்பர் மொழி பெயர் தேயம்" ஆதலின், அங்கு வழங்கப்பட்ட வடமொழியையும் வடமொழிக் கலப்பு பெற்ற தெலுங்கு-கன்னட மொழிகளையும், தமிழகத்தே வழக்காறு கொண்ட வடமொழியையும் கண்ட தொல்காப்பியர்,

"வடசொற் கிளவி வடவெழுத்த் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே."

என வட சொல் தமிழில் கலத்தற்கு இலக்கணம் கூறலாயினார்.
இந்த கால கட்டத்தில் தான் தமிழகத்தில் வடமொழியாளர்களால் கிரந்த எழுத்துக்கள் எழுதப்பட்டு வந்தனவாதல் வேண்டும்; தமிழகத்தே தமிழ் எழுத்துக்கள் பேரளவிலும் கிரந்த எழுத்துக்கள் சிறிய அளவிலும் எழுதப்பட்டு வந்தன என்பதில் ஐயமில்லை.அதே சமயம் தக்காணப் பிரதேசத்திலும் வட இந்தியாவிலும் பிராமி எழுத்துக்கள் பரவலாயின. பிராமி எழுத்துக்கள் அசோகன் காலத்தில் எழுதப்பட்டன எனக் கூறுவர்.
இப்பிராமி எழுத்துக்களுக்கு முன் மற்றொரு எழுத்து வகை இந்தியாவில் இருந்ததாகத் தெரிகிறது. " சிந்துவெளிக் குறிகளுக்கும் அசோகன் காலத்திய பிராமிக்கும் இடை நிலையில் உள்ளன என்று கூறப்படும் குறிகளால் எழுதப்பட்ட சாசனம் ஒன்று மத்திய இந்தியாவில் விக்கிரம கோல் என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது [10] இதனால், அசோகன் காலத்திற்கு முன்னும் சாசனங்கள் இருந்தமையும் எழுத்துக்கள் எழுதப்பட்டமையும் எளிதில் புலனாகும்.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் அசோகன் கல்வெட்டுகள் தமிழகத்து எல்லைப் புறத்தில் குத்தி எனுமிடத்திலும் மைசூருக்கு அருகே சித்தபுரத்திலும் கிடைத்துள்ளன. அவை பிராமி எழுத்துக்கள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே நூற்றாண்டில் வட நாட்டிலிருந்து தமிழ்நாடு புகுந்த சமண பௌத்தர்கள் தம் தாய் மொழியான பிராமி எழுத்துக்களில் சாசனங்களை எழுதினர். அதன் பின்னர் காலம் குறிக்கப் பெறாமல் " திருநாதர் குன்று " என்னுமிடத்தில் கிடைத்த சாசனம் வட்டெழுத்தில் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. இதன் பின் கி.பி. 7-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து இயற்றப்பட்ட சாசனங்களே இதுகாறும் கிடைத்துள்ளன. இதனால், தமிழகத்தில் கிரந்த எழுத்து, வட்டெழுத்து, தமிழ் என வழங்கப்பெறும் மூவகை எழுத்துக்கள் இருந்தன என்பது தெரிகின்றது.

பிற எழுத்துகள்[தொகு]

கிரந்த எழுத்துக்கள் (ஷ,ஜ,ஹ போன்றவை) வடமொழி சாசனங்களையும் தமிழ் மொழி சாசனங்களில் வரும் வட மொழிச் சொற்களையும் எழுதப் பயன்பட்டன. ஆனால் தமிழ் மொழியில் உள்ள சாசனங்கள் வட்டெழுத்து, தமிழெழுத்து ஆகிய இருவகை எழுத்துக்களால் எழுதப்பட்டு வந்தன. தமிழகத்தில் காணப்பட்ட பிராமி எழுத்துகளும் அசோகன் பொறித்த தென் கல்வெட்டு எழுத்துகளும் ஏறக்குறைய ஒத்துள்ளன. அவை தமிழ் எழுத்துக்களின் அமைப்பையே அடிப்படியாகக் கொண்டவை. அவற்றிள் , , , ஆகிய வல்லெழுத்துக்கள் மட்டுமே காணப்படுகின்றன. வடமொழியில் உள்ளதைப் போல அவற்றின் வருக்க எழுத்துக்கள் பெரும்பான்மை காணப்படவில்லை. இவற்றில் வட நாட்டுப் பிராமி கல்வெட்டுகளில் காணப்படாத சில எழுத்துக்களும் கிடைக்கின்றன.

வட்டெழுத்துக்கள்[தொகு]

தமிழ் வட்டெழுத்துக்கள், குற்றாலம் தொல்லியல் அருங்காட்சியகம்

.

வட்டெழுத்துக்கள் முறை எப்பொழுது தோன்றியது என்பதை உறுதியாகக் கூற முடியாதாயினும், அஃது ஒரு காலத்தில் தமிழ்நாடு முழுமையும் பரவியிருத்தல் வேண்டும். வட்ட எழுத்துகள் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் மிகவும் வளர்ச்சியுள்ள நிலையில் ஒரு தனி வடிவத்தைப் பெற்றிருந்ததெனக் கல்வெட்டுகள் கொண்டு கூறலாம். வட்டெழுத்துகளுக்கும் பிராமி எழுத்துகளுக்கும் நெருங்கிய ஒற்றுமைகள் உண்டு. பாண்டிய நாட்டிலும் மலையாள நாட்டிலுமே பெரும்பாலும் வட்டெழுத்துகளால் ஆன கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

சோழர் காலத்தில் ஏற்பட்ட மாற்றம்[தொகு]

சோழ நாட்டிலும் தொண்டை நாட்டிலும் கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலிருந்து பொறிக்கப்பட்ட சாசனங்கள் தமிழ் எழுத்துக்களில் உள்ளன. 10-ஆம் நூற்றாண்டுக்குப்பின் பாண்டி மண்டலம் சோழர் கைப்பட்டதும், அங்கும் வட்டெழுத்துகளில் சாசனங்கள் பொறிக்கப்பட்டன. 11-ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ் நாடு முழுதும் இவ்வகை எழுத்துக்களே வழங்கி வருகின்றன. சிலவற்றில் இருவகை எழுத்துக்களும் கலந்து காணப்படுகின்றன. இதனால் தமிழைக் குறிக்கவே தமிழகம் முழுவதும் வட்டெழுத்து இருந்தது என்பதும், பின்னரே வட்டெழுத்து முறையும் தமிழ் எழுத்து முறையும் தனித் தனியே தமிழகத்தில் இருந்தன என்பதும் அறியப்படுகிறது. சேரநாட்டில் சோழர் ஆதிக்கத்தால் வட்டெழுத்து வழக்கு வீழ்ந்தபின், அதன் கிளையாகக் 'கோல் எழுத்துக்கள்' தோன்றின. அவை அண்மைக்காலம் வரை வழக்கில் இருந்துள்ளன.

வட்டெழுத்துக்களின் மூலம்[தொகு]

டாக்டர் பீலர் என்பவர் "வட்டெழுத்துகள் பிராமி எழுத்துக்களினின்று வந்தவை; இவை தமிழ் எழுத்துக்களின் திரிபு" [11] என்று கூறுகிறார்." வட்டெழுத்துக்கள் பிராமிக்கு மூலாதாரமான பினீஷிய எழுத்துகளினின்று தமிழரால் கொள்ளப்பட்டன " [12] என்பார் டாக்டர் பர்நெல். இதனால் தமிழ் எழுத்துக்கள் தனி வளர்ச்சியுடையன; வட்டெழுத்துக்கள் தனி வளர்ச்சியுடையன என அறியலாம். பிராமி வருவதற்கு முன்பே தமிழகம் முழுவதும் பரவியிருந்ததும் பண்டைகாலந்தொட்டே உரு, தன்மை, உணர்வு, ஒலி, கண் முதலிய எழுத்துக்களின் வாயிலாக வளர்ச்சி அடைந்ததே ' வட்டெழுத்து' என்பது பொருத்தமுடையது. தமிழகம் முழுதும் பரவியிருந்த வட்டெழுத்துக்களே பிராமியின் தொடர்பால் நாளடைவில் மாறுதல் அடைந்து சோழநாடு முழுவதும் கிரந்தத் தமிழாக விளங்கியது என்பது கல்வெட்டுகளால் அறியப்படும் உண்மையாகும்.

மேலும் வட்டெழுத்துக் கல்வெட்டுக்களில் கிரந்த எழுத்துக்கள் காணப்படுதல் அரிது. கோலார், சேலம், வட ஆர்க்காடு முதலிய பகுதிகளில் கிடைத்த சில கல்வெட்டுகளில் தமிழ்-வட்டெழுத்து ஆகிய இருவகை எழுத்துக்களும் காணப்படுகின்றன. இவை கி. பி. 900 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இதனால் இருவகைத் தமிழ் எழுத்துக்களும் வேறு வேறு என அறியலாம். " தென் இந்தியாவில் காணப்பெறுவது வட்டெழுத்து ஒன்றே. பின்னரே வட மொழியாளரும் பௌத்தரும் தத்தம் எழுத்துக்களோடு (கிரந்தம்,பிராமி) தமிழகம் புக்கனர் " என பர்நெல் கூறுவது குறிப்பிடத்தக்கது.

சிந்துவெளி எழுத்து- தமிழ் எழுத்து[தொகு]

கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளி மக்கள் கொண்டிருந்த மொழியே தென் இந்தியத் தமிழரும் கொண்டிருந்தனர். இந்தியா முழுவதிலும் ஆரியர் வருகைக்கு முன்பு தமிழ் மொழி ஒரே வகையில் வளர்ச்சி அடைந்து வந்தது. சிந்துப் பிரதேசத்தில் காணப்பெற்ற சங்கேதக் குறிகளே நாளடைவில் 'விக்ரமக்கோல்' கல்வெட்டில் கண்ட வடிவம் பெற்றன. அவையே பின்னர் பிராமி எழுத்துக்களாக மாறின. பிராமி எழுத்திலிருந்து வேறு மாறுதல்களுடன் வடமொழிக் குறிகள் ஏற்படுத்தப்பட்டன. அவற்றிலிருந்து கிரந்தம், கிரந்தத் தமிழ் வளர்ச்சியடைந்தன என அறியலாம்.

 1. சிந்து வெளியில் காணப்படும் சித்திர சங்கேத எழுத்துக்கள் தமிழ்நாட்டுப் பழைய நாணயங்களில் காணப்படுகின்றன.
 2. தமிழ் நூல்கள் மட்டுமே எழுத்துக்களின் தோற்றங்களைப் பலவகையாக விளக்குகின்றன.
 3. சித்திர சங்கேத எழுத்துக்களின்று தமிழகத்தில் எழுத்துக்கள் தனி முறையில் தோற்றமாகி வளர்ச்சி பெற்று, வட்டெழுத்துஎன்ற நிலையை அடைந்திருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு படிப்படியாக வளர்ச்சியடைந்த தமிழ் எழுத்துகள் மறைமலையடிகள், ஈ. வே. ராமசாமி போன்ற பல பெரியோர்களின் முயற்சிகளுடன் தற்போதுள்ள தோற்றம் பெற்று விளங்குகிறது எனலாம்.

உசாத்துணை[தொகு]

மா. இராசமாணிக்கனார், 'தமிழ் மொழிச் செல்வம்'- திராவிட எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும். செல்வி பதிப்பகம். 1958

மேற்கோள்கள்[தொகு]

 1. டாக்டர் மா. இராச மாணிக்கனார். "தமிழ் மொழிச் செல்வம்" செல்வி பதிப்பகம்.1958.
 2. மு இராகவையங்கார். 'இலக்கிய சாசன வழக்காறுகள்' பக்கம் 4.
 3. சீனர், எகிப்தியர், பாபிலோனியர் முதலிய பண்டைய நாகரிகமுடைய மக்கள் வழங்கியவை போன்ற எழுத்துக்களோ, சிந்துவெளித் திராவிடர் வழங்கியவை போன்ற எழுத்துகளோ பண்டைய காலம் தொட்டு தமிழில் இல்லை.
 4. சிலப்பதிகாரம், காதை 5, வரி.111-112.
 5. சிலப்பதிகாரம், காதை 26, வரி.136.
 6. சிலப்பதிகாரம், காதை26, வரி 170,171.
 7. சிந்தாமணி, செய்யுள்.1767.
 8. மு இராகவையங்கார்-'சிலாசாசன வழக்காறுகள்' pp.1&8.
 9. Vide.P.N. Subramanian's 'Ancient Tamil letters', Kalaimagal Part 70.p.299.
 10. Indian Antiquary. Vol.62,Vide Kalaimagal, part 70.P.297.
 11. டாக்டர் பீலர் ' Ancient Indian Letters', P. 73.
 12. டாக்டர் பர்நெல், Vide his ' SouthIndian paleography',P.49