தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் 2003

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் 2003, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வூதிற்திற்கான அகவிலைப்படியை நிறுத்துதல் மற்றும் பணிக்கொடை தொடர்பான நிதிப்பலன்களை குறைப்பது குறித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டதை எதிர்த்து 2 சூலை 2003 முதல் 12 இலட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் துவங்கினர். போராட்டத்த்தை வலுவிழக்கம் வகையில் மாநில, மாவட்ட, வட்ட மற்றும் ஒன்றிய அளவிலான போராட்டக் குழுத்தலைவர்களை 30 சூன் மற்றும் 1 சூலை 2003 ஆகிய நாட்களில் முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுத்து காவல்துறையினர் கைது செய்தனர். இருப்பினும் திட்டமிட்டப்படி 2 சூன் 2003 முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கியது. முதல் நாளான 2 சூலை அன்று 90% அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராடடத்தில் கலந்து கொண்டனர்.

2 சூலை 2003 மாலையில், வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை உடனடியாக பணிக்கு திரும்ப தமிழ்நாடு அரசு அறிவிக்கை வெளியிட்டது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் 3 சூலை 2003 அன்று பணிக்குத் திரும்பினர்.

தமிழ்நாடு அரசு 4 சூலை 2003 அன்று தமிழ்நாடு அத்தியாவசியப் பணிகள் பராமரிப்புச் சட்டம், 2002 (டெஸ்மா) (Tamil Nadu Essential Services Maintenance Act, 2002) [1] மற்றும் இந்திய அரசின் அத்தியாவசியப் பணிகள் பராமரிப்புச் சட்டம் (எஸ்மா)[2] ஆகியவைகளின்படி வேலை நிறுத்தப் போராட்டம் சட்டவிரோதமானது என அறிவித்து, வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொடர்ந்து கலந்து கொண்ட 1,76,000 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்து ஆணையிட்டது. மேலும் வேலை நிறுத்தப் போராட்டத்தை தூண்டியதாக காவல்துறையினர் 2,200 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.[3][4]

அரசின் பணி நீக்க உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கக் கூட்டு நடவடிக்கை குழு அவசர வழக்கு தொடர்ந்தது. ஆனால் உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் பணி நீக்க உத்தரவு அத்தியாவசியப் பணிகள் பராமரிப்புச் சட்டங்களின் சரியானது என 11 சூலை 2003-இல் தீர்ப்பு வழங்கியது.

இதனால் போராட்டக் குழுவினர் 12 சூலை 2003 அன்று வேலை நிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தனர். ஆனால் தமிழ்நாடு அரசு பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பதிலாக தற்காலிகப் பணியாளர்களையும், ஆசிரியர்களையும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணிக்கு அமர்த்தியது.

இந்நிலையில் போராட்டக் குழுவினர் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உச்ச நீதிமன்றமும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சட்டத்தில் இடமில்லை எனத்தீர்ப்பளித்தனர். [5]

இருப்பினும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களிடமிருந்து, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதற்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கடிதமும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடமாட்டோம் என உறுதிமொழியையும் பெற்றுக்கொண்டு, கருணை அடிப்படையில் மீண்டும் 23 சூலை 2003 முதல் பணியில் சேர்த்துக் கொள்ள தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.

உச்ச நீதிமன்ற நீதியரசர்களின் அறிவுரையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டு, பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணிக்கு அமர்த்தியது. மேலும் சிறையில் அடைத்தவர்களையும் விடுதலை செய்தது. [6]இருப்பினும் வேலை நிறுத்தக் காலத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. Tamil nadu Essential Services Maintenance Act -TESMA)
  2. Essential Services Maintenance Act
  3. Jaya Dismisses Over One Lakh Striking Employees Under Esma
  4. Tamil Nadu CM Jayalalithaa quashes statewide strike, opposition in copybook stylea
  5. Govt employees have no rights to strike: SC
  6. Bowing to SC order, Tamil Nadu govt agrees to reinstate employees

வெளி இணைப்புகள்[தொகு]