தங்காயில் மாவட்டம்
தங்காயில் மாவட்டம் (Tangail District) இந்தி:टंगाइल जिला) (வங்காள மொழி: টাঙ্গাইল জেলা) தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். 3,414.28 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[1]இம்மாவட்டம் டாக்கா கோட்டத்தில் உள்ளது. மத்திய வங்காளதேசத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தங்காயில் நகரம் ஆகும்.
மாவட்ட எல்லைகள்
[தொகு]மத்திய வங்காள தேசத்தின் டாக்கா கோட்டத்தில் அமைந்த தங்காயில் மாவட்டத்தின் வடக்கில் ஜமால்பூர் மாவட்டமும், தெற்கில் டாக்கா மாவட்டம் மற்றும் மணிகஞ்ச் மாவட்டங்களும், கிழக்கில் மைமன்சிங் மாவட்டம் மற்றும் காஜிபூர் மாவட்டங்களும், மேற்கில் சிராஜ்கஞ்ச் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]இம்மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக பனிரெண்டு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டம் 108 தொகுதிகள் கொண்ட பதினொன்று நகராட்சி மன்றங்களும், நூற்றி ஒன்பது ஊராட்சி ஒன்றியக் குழுக்களும், 2516 கிராமங்களையும் கொண்டுள்ளது.
தட்ப வெப்பம்
[தொகு]இம்மாவட்டத்தின் அதிகபட்ச கோடை வெப்பம் 38.3° செல்சியஸ் ஆகவும், குளிர்கால குறைந்தபட்ச வெப்பம் 7.13° ஆக உள்ளது. ஆண்டு சராசரி மழைப் பொழிவு 1872136.33 mm மில்லி மீட்டராகவும் உள்ளது. [2]
பொருளாதாரம்
[தொகு]இம்மாவட்டத்தின் முக்கிய ஆறுகளாக ஜமுனா ஆறு, தாலேஷ்வரி ஆறு, ஜெனாய் ஆறு, பங்க்சி ஆறு, லௌஹாஜங் ஆறு, லங்குலியா ஆறு, ஜக்னி ஆறு, புங்கிலி ஆறு, போதிக்ஜனி ஆறு முதலிய ஆறுகள் உள்ளது. எனவே இம்மாவட்டம் நீர் வளமும், மண் வளமும் மிக்கதாக உள்ளது.
இம்மாவட்டத்தில் நெல், சணல், கரும்பு, கோதுமை, கடுகு, பருப்பு, மா, பலா, வாழை, விளாச்சி, கொய்யா பயிரிடப்படுகிறது.
மீன் பிடி தொழில், பால் பண்ணைகள், தேனீ வளர்ப்பு தொழிலும் சிறப்பாக உள்ளது. இம்மாவட்டத்தில் 60,000 கைநெசவுகளும், 892 மின்நெசவுகளும் உள்ளது.
3,25,000 நபர்கள் நெசவுத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இம்மாவட்டத்தின் கைத்தறி சேலைகள் புகழ்பெற்றது.[3]
இம்மாவட்டத்திலிருந்து சணல் பொருட்கள், சர்க்கரை, சேலைகள், இனிப்புமாமிச உணவுகள், சேலைகள், வாழை, அன்னாசிப்பழம், ஏற்றுமதி செய்யப்படுகிறது.
போக்குவரத்து
[தொகு]மரபு வழியான போக்குவரத்திற்கு சாதாரண பயணிகளின் படகுகள், குதிரை வண்டிகள், பல்லாக்குகள், மாட்டு வண்டிகள் மற்றும் உல்லாசப் படகுகள் பயன்படுத்துகின்றனர்.
மக்கள் தொகையியல்
[தொகு]3414.35 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 36,05,083 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 17,57,370 ஆகவும், பெண்கள் 18,47,713 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 95 ஆண்களுக்கு பெண்கள் 100 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1056 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 54.9 % ஆக உள்ளது.[4]இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.
கல்வி
[தொகு]வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்புகள் உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப்பள்ளிகளும் [கிரேடு 1 – 5], ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட செகண்டரி பள்ளிகளும் [கிரேடு 6 – 10], இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப்பள்ளிகளும் [கிரேடு 11 – 12], நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப்படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப்படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.
இம்மாவட்டம் 341 தனியார் உயர்நிலை பள்ளிகளும், ஐந்து அரசு கல்லூரிகளும், 48 தனியார் கல்லூரிகளும், மூன்று பல்கலைக்கழகக் கல்லூரிகளும், இரண்டு நெசவுத் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரிகளும், ஒரு மருத்துவக் கல்லூரியும், ஒரு சட்டக் கல்லூரியும், ஒரு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியும், ஒரு தொழில்நுட்பக் கல்லூரியும், ஒரு மருத்துவ உதவியாளர் பயிற்சிப் பள்ளியும், ஒரு செவிலியர் பயிற்சி பள்ளியும், ஒரு காவல்துறை பயிற்சி நிறுவனமும், 202 மதராசாக்களும், 40 இளையோர் பள்ளிகளும், ஒரு ஆசிரியர் பயிற்சி பள்ளியும், 146 சமுதாயத் தொடக்கப் பள்ளிகளும், 1304 அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகள், மௌலானா பசானி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tangail P-XV. Bangladesh Bureau of Statistics. 2011-06-11. http://bbs.gov.bd/WebTestApplication/userfiles/Image/PopCenZilz2011/Zila_Tangail.pdf. பார்த்த நாள்: 2016-02-23.
- ↑ "Climate: Tangail". climate-data.org.
- ↑ "Weaving industry hit hard by political unrest". The Independent (Dhaka). 2015-03-02. http://www.theindependentbd.com/index.php?option=com_content&view=article&id=249774:weaving-industry-hit-hard-by-political-unrest&catid=95:national&Itemid=141.
- ↑ Community Report Tangail Zila June 2012[தொடர்பிழந்த இணைப்பு]