டொரெஸ் நீரிணைத் தீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டொரெஸ் நீரிணையின் அமைவு
டொரெஸ் நீரிணைத் தீவுகள்

டொரெஸ் நீரிணைத் தீவுகள் (Torres Strait Islands) என்பது ஆஸ்திரேலியா கண்டத்தின் வடமுனையில் உள்ள கேப் யோர்க் தீபகற்பத்தையும் நியூ கினி தீவையும் பிரிக்கும் டொரெஸ் நீரிணையில் அமைந்துள்ள கிட்டத்தட்ட 274 சிறிய தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக் கூட்டமாகும்.

இவை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அடங்கும் தீவுகளாகும். டொரெஸ் நீரிணை வட்டார ஆணையத்தின் நிர்வாகத்தில் இங்கு வாழும் பழங்குடியினரான மெலனீசியர்களுக்கு சிறப்பு நில உரிமை அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாணையம் ஜூலை 1, 1994 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

வரலாறு[தொகு]

குயின்ஸ்லாந்தின் பொசெசன் தீவில் முதன்முதலாக இங்கிலாந்து மாலுமி ஜேம்ஸ் குக் 1770 இல் தரையிறங்கி அங்கிருந்து ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியை பிரித்தானியப் பேரரசுக்காக உரிமை கோரினான். அதன் பின்னர் லண்டன் சமயப் பிரசாரகரான வண. சாமுவேல் மக்ஃபார்லேன் டொரெஸ் நீரிணையின் டார்ன்லி தீவில் 1871, ஜூலை 1 இல் வந்திறங்கினார். இந்நாளை அத்தீவு மக்க "வெளிச்சத்தின் வரவு" என அறிவித்து ஆண்டுதோறும் விழாவாகக் கொண்டாடுகிறார்கள். டொரெஸ் நீரிணைத் தீவுகள் 1879 ஆம் ஆண்டு குயின்ஸ்லாந்துடன் இணைக்கப்பட்டது.

பப்புவா நியூ கினி 1975 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் இருந்து பிரிந்து தனிநாடாகியபோது இத்தீவுகளின் நிலை பிரச்சீனைக்குள்ளாகியது. இத்தீவு மக்கள் தம்மை ஆஸ்ட்திரேலியர்கள் என அடையாளப்படுத்தினாலும் பப்புவா நியூ கினி அரசு நீரிணையின் முழு உரிமையையும் ஆஸ்திரேலியாவுக்குத் தர மறுத்தது. இது குறித்த உடன்பாடு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, தீவுகளும், அதன் மக்களும் ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தம் எனவும், கடல் பிரதேசங்கள் இரு நாடுகளுக்கும் பகிரப்படும் எனவும் உடன்பாடு எட்டப்பட்டது. நீரிணையின் வளங்கள் இரு நாடுகளினதும் நிர்வாகத்தில் பங்கிடப்படுகின்றன[1].

1982 இல் எடி மாபோ மற்றும் நான்கு டொரெஸ் நீரிணை பழங்குடியினர் (மறி தீவு) தமக்கு நில உரிமை வழங்கப்பட வேண்டும் என குயின்ஸ்லாந்து உயர் நீதிமன்றத்திலும், பின்னர் ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தனர். 1992 இல் அவர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்புக் கூறப்பட்டது. குயின்ஸ்லாந்துடன் இணைக்கப்படு முன்னரிலிருந்து மேர் மக்கள் தமக்கென நிலங்களை வைத்திருந்ததாக தீர்ப்பளிகக்ப்பட்டது.

புவியியல்[தொகு]

இத்தீவுகள் மொத்தம் 48 000 கிமீ² பரப்பளவைக் கொண்டது. கேப் யோர்க்கில் இருந்து நியூ கினி வரையான மிகக்கிட்டவான தூரம் கிட்டத்தட்ட 150 கிமீ.

மக்கள்[தொகு]

இத்தீவுகளில் உள்ள பழங்குடியினர் மெலனீசியர்கள் ஆவர். இவர்கள் பொதுவாக பப்புவா நியூ கினியின் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை முறைகளை ஒத்தவர்கள். இதனால் இவர்கள் ஏனைய ஆஸ்திரேலியப் பழங்குடிகளில் இருந்து வேறுபட்டுள்ளார்கள். இதனால் இவர்கள் டொரெஸ் நீரிணைத் தீவு மக்கள் என அடையாளம் காட்டப்படுகிறார்கள்.

2001 ஆஸ்திரேலிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இத்தீவுகளின் மக்கள் தொகை 8,089 ஆக இருந்தது. இவர்களில் 6,214 பேர் பழங்கிடியினர் ஆவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. for a detailed map see "Australia's Maritime Zones in the Torres Strait" (PDF). Australian Government - Geoscience Australia. 2012-10-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2008-04-13 அன்று பார்க்கப்பட்டது.,
    for the agreement see "Treaty between Australia and the Independent State of Papua New Guinea concerning sovereignty and maritime boundaries in the area between the two countries, including the area known as Torres Strait, and related matters, 18 December 1978" (PDF). United Nations. 2008-04-13 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]