உள்ளடக்கத்துக்குச் செல்

டேவிட் பாப்ரிசியசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டேவிட் பாப்ரிசியசு (David Fabricius, மார்ச் 9, 1564 - மே 7, 1617), என்பவர் செருமானிய மதகுருவும், வானியலாளரும் ஆவார். டேவிட் ஃபேபர் அல்லது டேவிட் கோல்ட்சிமித் எனவும் இவர் அழைக்கப்பட்டார். இவர் தனது மூத்தமகன் யோகான்னசு பாப்ரிசியசு (1587–1615) உடன் இணைந்து தொலைநோக்கி வானியலின் தொடக்க காலத்தில் இரண்டு முக்கிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்.

டேவிட் பாப்ரிசியசு எசன்சு நகரில் பிறந்தார். 1583 இல் எல்ம்சுடெட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று,[1] தனது ஊருக்கருகில் வடமேற்கு செருமனியில் உள்ள பிரிசிலாவில் பல சிறிய நகரங்களில் மதகுருவாகப் பணியாற்றினார். 1584இல் வடகிழக்கு நெதர்லாந்தில் டோர்னம் அருகில் உள்ள இரெஸ்டராஃபிலும் பிறகு 1603இல் ஓஸ்ட்டீலிலும் பணிபுரிந்தார். அக்கால புரோட்டஸ்தாந்து அமைச்சினர் போல பணியாற்றும் காலத்திலேயே வானியலில் ஆர்வம் காட்டினார். யோகான்னசு கெப்லருடன் தொடர்புகளைப் பேணினார்.[2]

அலைவியல்பு மாறு விண்மீன் காணல்[தொகு]

பாப்ரிசியசு ஆகத்து 1596 இல் முதலாவது அலைவியல்பு மாறியல்பு விண்மீனைக் கண்டுபிடித்தார். இதற்கு அவர் மிரா எனப் பெயரிட்டார். இதன் பொலிவு மாற்றம் அதன் மேற்பரப்பு வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படுவதையும் உறுதிபடுத்தினார். இது சிதையும் விண்மீன் வெடிப்பிலிருந்தும் மீ விண்மீன் வெடிப்பிலிருந்தும் வேறுபட்டதாகும். முதலில் அதை விண்மீன் வெடிப்பாகவே, அப்போது மீளியல்பு மாறி பற்றிய கருத்துப் படிமம் நிலவாததால், கருதியுள்ளார். மீண்டும் 1609இல் மீரா பொலிவில் மிகுவதைக் கண்டதும் வானில் ஒரு புதிய பொருளைக் கண்டுபிடித்துள்ளோம் எனவுணரலானார்.

சூரியக் கரும்புள்ளி, சுழற்சி ஆய்வு[தொகு]

ஈராண்டுகளுக்குப் பிறகு அவரது மகன் யோகான்னசு பாப்ரிசியசு (1587-1615) நெதர்லாந்துப் பல்கலைக்கழகத்தில் இருந்து மீண்டபோது அவர் கொண்டுவந்த தொலைநோக்கிகளைப் பயன்படுத்திச் சூரிய ஆய்வில் இருவரும் ஈடுபட்டனர். சூரியனை நேரடியாக நோக்குவதில் சிக்கல்கள் இருந்தாலும் அவர்கள் சூரியனில் கரும்புள்ளிகள் நிலவுவதை முதன்முதலாகக் கண்டுபிடித்தனர். விரைவில் இருவரும் ஒரு ஒளிமறைக்கும் ஒளிப்படக் கருவியைக் கொண்டு மீண்டும் சூரியச் சுழல்வட்டைக் கோட்டிப் பார்த்து அப்புள்ளிகள் நகர்வதையும் கண்டனர். அவை முதலில் வட்டின் கிழக்கில் தோன்றி மெல்ல மேற்கு நோக்கி நகர்ந்து இறுதியில் மேற்கில் மறைந்தன. குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு மீண்டும் அவை கிழக்குமுனையில் தோன்றி மேற்கு நோக்கி நகர்ந்து மேற்கு முனையில் மறைந்தன. இது சூரியன் தனது அச்சில் சுழல்வதைக் காட்டியது. இதுவரை சூரியன் சுற்றுவதாகக் கூறப்பட்டதே தவிர சான்றுடன் நிறுவியதில்லை. சூன் 1611 இல் யோகான்னசு பாப்ரிசியசு Maculis in Sole Observatis, et Apparente earum cum Sole Conversione Narratio ("சூரியனில் கண்ட புள்ளிகளும் அவற்றின் சூரியனுடனானத் தோற்றச் சுழற்சியும் பற்றிய விளக்கம்") என்ற நூலை வெளியிட்டார். ஆனால் இவர் இளம்பருவத்திலேயே இறந்துவிட்டதால் இதுபற்றிய தகவலை வெளியுலகம் அறியாமலே இருந்தது. பிறகு தனித்தனியாக கிறிஸ்தோப் ஸ்கீனரும் (1612 சனவரி) கலீலியோ கலிலியும் (1612 மார்ச்) சூரியக் கரும்புள்ளி ஆய்வுகளை வெளியிட்டனர்.

இறப்பு[தொகு]

இந்த இருகண்டுபிடிப்புகளைத் தவிர வேறுதகவல்கள் ஏதும் இவரைப் பற்றிக் கிடைக்கவில்லை. அவரது இறப்போ புரூமெர்லாந்து ஓஸ்ட்டீலில் இயல்புக்கு மாறாக அமைந்துவிட்டது. இவர் ஒரு வாத்துத் திருடனைக் கையும் களவுமாகக் கண்டுபிடித்து விடவே, அவன் இவரைக் கரியள்ளியால் தலையில் தாக்கிக் கொன்றுவிட்டுள்ளான்.

தகைமை[தொகு]

1589இல் இவர் வரைந்த நிலவரை இன்றும் உள்ளது. ஜூல் வெர்னேயின் ”புவியிலிருந்து நிலாவுக்கு” என்ற புதினத்தில் இவரது பெயர் வருகிறது. இவர் தனது தொலைநோகி வழியாக நிலா மாந்தர்களைக் கண்டாராம். இது வெர்னேயின் கற்பனையே. 90 கிமீ பருமையுள்ள நிலாவின் எரிமலைவாய்க்கு டேவிட் பாப்ரியசு எரிமலைவாய் என்ப் பெயரிடப்பட்டுள்ளது. 1603 முதல் 1617வரை இவர் பாதிரியாராகவிருந்த ஓஸ்ட்டீல் தேவாலய முற்றத்தில் இவருக்கு நினைவுச் சின்னம் நிறுவப்பட்டுள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-31022-0. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 22, 2012.
  2. The Galileo Project. David (1564-1617) and Johannes (1587-1616) Fabricius

மேற்கோள்கள்[தொகு]

  • Gilman, D. C.; Thurston, H. T.; Moore, F., eds. (1905). New International Encyclopedia (1st ed.). New York: Dodd, Mead.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_பாப்ரிசியசு&oldid=3940873" இலிருந்து மீள்விக்கப்பட்டது