டிராபிக் ராமசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிராபிக் ராமசாமி
பிறப்புகே. ஆர். இராமசாமி
(1934-04-01)ஏப்ரல் 1, 1934
செய்யாறு, தமிழ்நாடு
இறப்புமே 4, 2021(2021-05-04) (அகவை 87)
சென்னை, தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
பணிஓய்வு பெற்ற துணி நூல் ஆலை மேற்பார்வையாளர்
அறியப்படுவதுசமுக ஆர்வலர்
பெற்றோர்ரெங்கசாமி,
சீத்தம்மாள்

டிராபிக் ராமசாமி (Traffic Ramaswamy, ஏப்ரல் 1, 1934 – 4 மே 2021) என அழைக்கப்பட்ட கே. ஆர். ராமசாமி ஒரு புகழ்பெற்ற இந்தியப் பொதுநலச் சேவகர் ஆவார். சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே களம் புகுந்து போக்குவரத்தைச் சீர்படுத்துவது இவரது வழக்கம். இதனால்தான் இவருக்கு டிராபிக் ராமசாமி என்ற பெயர் வந்தது.[1] பொதுமக்கள் நலன் கருதி, பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து பல நல்ல செயல்களுக்கு வித்திட்டவர். அவ்வழக்குகளில் வழக்கறிஞர் துணையின்றி தானே வாதாடுவது என்கிற நடைமுறையைக் கடைப்பிடித்தவர்.[2]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவரது முறையான கல்வி பன்னிரெண்டாம் வகுப்புடன் முடிந்தது. பின்னர் பிரிட்டிஷ் இன்ஸ்ட்டிட்யூட், மும்பை கல்வி நிறுவனத்தில் அஞ்சல்வழி மூலம் துணித்துறையில் AMIE பட்டம் பெற்றார்.[3] ஊர்க்காவல் படையிலும் முன்பு பணியாற்றியுள்ளார்.

பெயர்க் காரணம்[தொகு]

ஆரம்பத்தில் ராமசாமி தானே முன்வந்து சென்னை, பாரி முனையின் முன்னால் போக்குவரத்தை ஒழுங்குப் படுத்துவதில் உதவி செய்தார். ஆகவே காவல்துறை இவருக்கு ஓர் அடையாள அட்டையை வழங்கியது. அது முதல் ”டிராஃபிக் ராமசாமி” என்று அழைக்கப்படுகிறார்.[சான்று தேவை] தமிழக சமூக ஆர்வலர்களின் முன்னோடி என்று போற்றப்படுபவர்.

பொதுநல சேவைகள்[தொகு]

டிராபிக் ராமசாமி ஏராளமான பொதுநலவழக்குகளை நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். 2002-இல் சென்னையில் அதிக எடை ஏற்றிக் கொண்டு கட்டுப்பாடில்லாமல் ஓடிய மீன் ஏற்றும் வண்டிகளுக்கு எதிராக நீதிமன்றத்தடை பெற்றவர் இவரே. சென்னையில் அனுமதி இல்லாமல் பல அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கட்டிய பெருமுதலாளிகளுக்கு எதிராக பல வழக்குகள் போட்டு பல கட்டிடங்களை இடிக்க வைத்தார். பல கட்டிடங்களை செயலிழக்கச் செய்தார். கட்டிடங்கள் கட்டுவதில் ஒரு முறைமை உருவாக இது வழி வகுத்தது. சென்னையில் கட்டப்படும் எல்லா கட்டிடங்களும் வாகனங்கள் நிறுத்தும் வசதிகளுடன் மட்டுமே கட்டப்படவேண்டும் என்ற நீதிமன்ற ஆணையினையும் இவர்தான் பெற்றார். இது இன்று தமிழகம் முழுவதும் பரவலாக அமல் செய்யப்படுகிறது. அரசு நிதி வீணடிக்கப்படுவது, முறைகேடான அரசுச் செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நீதிமன்றத்துக்குச் சென்றபடியே இருந்தார் ராமசாமி.

தேர்தலில் போட்டி[தொகு]

2009 நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 2015 ஸ்ரீரங்கம் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 2015 ஆம் ஆண்டு சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் வேட்பாளராக தனித்து நின்றார். இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளே போட்டியில் இறங்கவில்லை.[4]

தாக்குதல்கள்[தொகு]

  • ராமசாமி தொடர்ந்த வழக்குகளால் கோபம் கொண்ட எதிர்த்தரப்பினரால் பலமுறை தாக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரது பணிகளை அவர் கைவிட்டதில்லை. 2000 ஆம் ஆண்டில் இவர் வழக்கறிஞர்களுக்கு எதிராகப் போட்ட வழக்குக்காக வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டார்.
  • 2002 ல் மீன் விற்பனையாளர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.[சான்று தேவை] இவர் மீது பல்வேறு பொய்வேறு வழக்குகள் காவல்துறையினரால் போடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.[சான்று தேவை] ராமசாமிக்கு ஆயுதப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் அவருக்குத் துப்பாக்கி ஏந்திய காவல்துறைப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
  • 10 மார்ச் 2015ஆம் நாளன்று, சென்னை, புரசைவாக்கம் டாக்டர் அழகப்பா சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு சாலை அருகே நின்று பேட்டி அளிக்கும் போது, வேப்பேரியை சேர்ந்த வீரமணி என்பவருக்கும், டிராபிக் ராமசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வேப்பேரி காவல் நிலையத்தில் வீரமணி கொடுத்த புகாரின்பேரில், காவல்துறையினர் டிராபிக் ராமசாமியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்[5][6].

கொரானாத் தொற்றும் மரணமும்[தொகு]

2021 மார்ச் மாதம் இறுதி வாரத்தில், கொரோனா வைரசுத் தொற்றால் பாதிக்கப்பட்ட இராமசாமி, சென்னை இராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே அவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால், எளிதாக மூச்சு விட செயற்கைக் சுவாசக் கருவி பொருத்தப்பட்டது. இந்நிலையில் 4 மே 2021 அன்று அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.[7][8] பிறகும் உடல் நிலை தேறாத நிலையில் டிராபிக் இராமசாமி 4 மே 2021 அன்று மாலை இயற்கை எய்தினார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிராபிக்_ராமசாமி&oldid=3792585" இலிருந்து மீள்விக்கப்பட்டது